வன்னிக் காடுகளில் இப்போது கொரில்லா சண்டை: இலங்கை மோதலின் தன்மை மாறுகிறது
முல்லைத் தீவு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக இலங்கை ராணுவம் கூறிக் கொள்கிறது; அதே சமயம் முல்லைத் தீவுக்கு அருகில் உள்ள காடுகளில் விடுதலைப் புலிகளுடன் கடுமையாகச் சண்டையிட்டு வருவதாகவும் தெரிவிக்கிறது.
இதிலிருந்து நகர்ப்புறங்களிலிருந்து விலகி வனப்பகுதிக்குச் சென்ற விடுதலைப் புலிகள் அங்கிருந்தபடியே ராணுவத்துக்குத் தங்களால் ஏற்படுத்த முடிந்த அதிகபட்ச சேதங்களை ஏற்படுத்தி வருகிறார்கள் என்று தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சண்டை தீவிரமாகி வருகிறது.
நாலாபுறமும் இலங்கை ராணுவத்தால் சூழப்பட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கு வெளியிலிருந்து இனி எந்த உதவியும் கிடைக்க வாய்ப்பில்லை. அவர்களும் அவர்களுடன் காடுகளில் இருக்கும் மக்களும் இப்போது ராணுவத்தின் தாக்குதலை முழு வீச்சில் எதிர்கொள்ள வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
முள்ளியவெளி என்ற இடத்தில் முன்னேற முயன்ற ராணுவத்துக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளில் சிக்கி ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். எனவே மேற்கொண்டு அப்பகுதியில் முன்னேற முடியாமல் ராணுவம் பின்தங்கிவிட்டது.
இதனால், கொழும்புக்குத் தகவல் தந்து விமானப் படை போர் விமானங்களையும் நவீன தாக்குதல் ஹெலிகாப்டர்களையும் வரவழைத்து, காடு என்றும் நிலம் என்றும் பாராமல் குண்டுமாரிப் பொழிய நடவடிக்கை எடுத்துள்ளனர் முல்லைத்தீவில் உள்ள ராணுவ அதிகாரிகள்.
குண்டு தயாரிப்பு ஆலைகள்: விடுதலைப் புலிகள் தங்களுக்கு வேண்டிய கையெறி குண்டுகளையும் கண்ணி வெடிகளையும் தாங்களே தயாரித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி அவர்கள் குண்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்திய 3 தொழிற்சாலைகளை முல்லைத் தீவு மாவட்டத்தில் நுழைந்த ராணுவ வீரர்கள் கண்ணுற்றனர். 50 ஏக்கர் பரப்பில் அந்த ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கே இப்போது ஆளரவமே கிடையாது.
ஆலைகளை ஒட்டிய நிலவறைகளில் ஏராளமான வெடிகுண்டுகள், கண்ணிவெடிகள், கையெறி குண்டுகள் இருந்தன. தயாரிக்கப்பட்ட குண்டுகளை நிரப்பிய 3 கன்டெய்னர்களையும் ராணுவ வீரர்கள் அங்கே கண்டனர். கண்டெய்னர்களில் இருந்தவற்றை அகற்றுவதற்குக் கூட விடுதலைப் புலிகளுக்கு நேரம் இல்லாமல் அங்கிருந்து காடுகளுக்குள் ஓடி மறைந்துள்ளனர் என்று தெரிகிறது.
சந்தேகம்: இலங்கை ராணுவத்தினர் தெரிவிப்பதைப் போல விடுதலைப் புலிகள் நகர்ப்பகுதிகளை விட்டு வனப்பகுதிகளுக்குள் ஓடி ஒளிகின்றனரா அல்லது ராணுவ வீரர்களை வனப்பகுதிக்குள் நெடுந்தொலைவு இழுத்துச் சென்றுவிட்டு பிறகு பெருந்தாக்குதலைத் தொடுக்கப் போகிறார்களா என்ற சந்தேகம் ராணுவ மோதல்களைக் கவனித்துவரும் சர்வதேசப் பார்வையாளர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.
நவீனப் போர் முறையின் அனைத்து அம்சங்களிலும் நிபுணர்களாக விளங்கும் விடுதலைப் புலிகளுக்கு திடீரென ஆள் பற்றாக்குறையோ, ஆயுதப் பற்றாக்குறையோ ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. புலிகள் பதுங்குவது பெரிய பாய்ச்சலுக்காகவும் இருக்கலாம் என்று பார்வையாளர்கள் நினைக்கின்றனர்.
பரந்தன், ஆனையிறவு, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைக் கைப்பற்றிவிட்டதாக ராணுவம் கூறினாலும் மிகப் பெரிய எண்ணிக்கையில் புலிகளுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. எனவே புலிகளின் மூலபல சேனை இன்னமும் எங்கோ தயாராக இருக்கிறது என்றே அவர்கள் கருதுகின்றனர்.
ராணுவம் கைப்பற்றிய இடங்களில் இருந்த கட்டடங்கள், பொது இடங்கள் எல்லாம், ""அடுத்த குடித்தனக்காரர் உடனே குடியேறுவதற்கு காலிசெய்து வைத்த வீடுகளைப் போலவே'' விடப்பட்டிருக்கின்றன. எனவேதான் அவர்களுக்கு இந்தச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
விசுவமடுகுளம் என்ற இடத்தில் தரைப்படைக்கு உதவ விமானப் படை எம்.ஐ.-24 ரக ஹெலிகாப்டர்கள் உதவியுடன் குண்டுமாரிப் பொழிந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் அங்கு விமானப்படையின் இடைவிடாத தாக்குதல் நடைபெறுகிறது.
புதுக்குடியிருப்பு என்ற இடத்தில் புலிகள் ஆக்ரோஷமான எதிர்த்தாக்குதலை மேற்கொண்டனர். ஆயினும் ராணுவத்தின் ஆயுத பலமும் ஆள் பலமும் அவர்களுக்கே சாதகமான முடிவைத் தந்தன. புலிகள் மண்ணால் கட்டியிருந்த பெரிய தடுப்பு அரணை ராணுவம் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
தர்மபுரம், புளியன் பொக்கரை என்ற இடத்தில் நடந்த உக்கிரமமான சண்டைக்குப் பிறகு புலிகளின் 7 சடலங்களை ராணுவத்தினர் மீட்டனர். அந்த இடத்தில் தங்கள் படைகளுக்கும் சிறிது சேதம் ஏற்பட்டதாக ராணுவத் தலைமையகம் தெரிவிக்கிறது. முல்லைத்தீவு சண்டையில் இருதரப்புக்கும் உயிரிழப்பு அதிகம் என்று தெரிகிறது.
Dinamani
0 விமர்சனங்கள்:
Post a Comment