வன்னி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக: பான்கீ மூன் கோரிக்கை
வன்னியில் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது மோதலில் ஈடுபட்டிருக்கும் இரண்டு தரப்பினரதும் கடமையென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
மோதல்களுக்குள் சிக்குண்டிருக்கும் அப்பாவிப் பொதுமக்களின் நிலைமை குறித்துக் கவலை வெளியிட்டிருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம், அம்மக்கள் இரு தரப்பினராலும் பாதுகாக்கப்பட வேண்டுமெனக் கூறியுள்ளார்.
“பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அவர்களின் நலன்புரித் தேவைகளுக்கு அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் முன்னுரிமை வழங்க வேண்டும், அத்துடன், அந்தப் பகுதியிலுள்ள மனிதநேய அமைப்புக்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்” எனவும் ஐ.நா. செயலாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு வலயத்தை இரண்டு தரப்பினரும் மதித்துச் செயற்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருக்கும் பான்கீ மூன், உட்கட்டுமானங்கள், பாடசாலைகள், மனிதநேய உதவிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களை வேறு இடங்களில் அமர்த்துவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்த நடவடிக்கையைப் பாராட்டியிருக்கும் அவர், இதேபோல ஏனைய தரப்பினரிடமும் உதவிகளைப் பெற்று மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.
இதேவேளை, வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கு வடபகுதியிலுள்ள ஐ.நா. மற்றும் ஏனைய மனிதநேய நிறுவனங்களின் பணியாளர்கள் உதவிகளை வழங்கி வருவதாக ஐ.நா. பேச்சாளர் மரியே ஒகேபீ தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment