'விடுதலைப்புலிகள் பலத்தை இழக்கவில்லை'- பா. நடேசன்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மக்களோடு வாழ்ந்து கொண்டிருப்பதாக பி பி சி தமிழோசைக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அடுத்தடுத்து தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களை இழந்து வருவது குறித்து கேட்டபோது, விடுதலை இயக்கங்கள் இது போன்று பின் வாங்கிச் செல்வதும்- பிறகு அந்த இடங்களை மீண்டும் பிடிப்பதும் இயல்பாக நடக்கும் ஒன்றுதான் என்று கூறிய அவர், விடுதலைப் புலிகள் முன்பு கூட பின்வாங்கிச் சென்று பிறகு பெரிய வெற்றிகளைப் பெற்றதாகவும் கூறினார்.
பொது மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாக மனித உரிமை அமைப்புகள் கூறும் குற்றச்சாட்டுக்களை மறுத்த அவர், அத்தகைய அமைப்புகள் அப்பகுதிக்கு வந்து உண்மை நிலையை அறிந்து கொள்ளலாம் என்று கூறினார்.
விடுதலைப் புலிகளின் தாக்கும் திறனை பெரிய அளவில் குறைத்து விட்டதாக அரசு கூறுவது பொய் பிரசாரம் என்று குறிப்பட்ட அவர், அதே சமயம் தமது போராளிகள் முன்னைப் போலவே உக்கிரத்துடன் சண்டையிட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
கௌரவமான, சுதந்திரமான தீர்வு கிடைக்கும் பட்சத்தில் தாம் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பா. நடேசன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்சியில் கேட்கலாம்.
BBC Tamil
0 விமர்சனங்கள்:
Post a Comment