'முல்லைத்தீவில் இன்று 26 பொதுமக்கள் பலி'- சுகாதார சேவைகள் பணிப்பாளர்
இலங்கையின் வடக்கே கடுமையான மோதல்கள் நடக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று நடந்த தாக்குதல்களில் பலியான 26 பொதுமக்களின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். டி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை காலை முதல் கடுமையான எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், குறிப்பாக உடையார் கட்டு, சுதந்திரபுரம் மற்றும் தேவி புரம் வரையிலான பகுதிகளிலே ஆயிரக்கணக்கில் எறிகணைகள் வந்து வீழ்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
உடையார் கட்டு மகாவித்தியாலயத்தில் இயங்கும் வைத்தியசாலையிலும், நெட்டாங்கண்டல் மருத்துவமனையிலும் பலியான 26 பொதுமக்களின் சடலங்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் காயமடைந்த 76 பேர் அங்கு கொண்டுவந்து அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் டாக்டர். சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
மருத்துவமனையில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் அங்கிருந்த 10 பேர் காயமடைந்ததாகவும், 4 அம்புலன்ஸ் வண்டிகள் சேதமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது.
இவை குறித்து தமிழோசைக்கு அவர் வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இதற்கிடையே இந்த மோதல்களில் கடந்த சில தினங்களில் பல டஜன் கணக்கானவர்கள் உயிரிழந்தோ அல்லது காயமடைந்தோ உள்ளார்கள் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி பெருநகரமான முல்லைத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வெகு அருகில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு மூத்த பேச்சாளரான கார்டன் வைஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த எறிகணைத் தாக்குதல்கள் எங்கிருந்து வந்தன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் கார்டன் வைஸ் அவர்கள் தெரிவித்தார். எனினும் பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது தாக்குதல்களை நடத்த வேண்டிய தேவை ஏதும் தமக்கு இல்லை என்று இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரி கூறியுள்ளார்.
BBC Tamil
0 விமர்சனங்கள்:
Post a Comment