பிரபாகரன் மட்டுமின்றி விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களைப் பிடிக்கவும் இராணுவம் உஷார் நிலையில் உள்ளது
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பிடிக்க இலங்கை இராணுவம் சிறப்பு அதிரடிப் படை அமைத்துள்ளது. இந்தப் படை பிரபாகரனைப் பிடித்து கொண்டு வர தயாராக உள்ளது என்று இலங்கை உயர் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிரபாகரன் மறைந்திருப்பதாகக் கருதப்படும் முல்லைத்தீவை நாலாபுறம் இராணுவம் சூழ்ந்துள்ளது. இராணுவத்தின் 7 பிரிவுகள் முல்லைத்தீவை சூழ்ந்துள்ளன. பிரபாகரன் தப்பிவிடாமல் வளையம் அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த இராணுவ அதிகாரி கூறினார்.
பிரபாகரன் மறைந்திருக்கும் இடம் பற்றிய தகவல் கிடைத்ததும் விரைந்து சென்று பிடிப்பதற்காக தனி விமானம் தயாராக வைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் செல்லும் அதிரடி வீரர்கள் பிரபாகரன் மறைந்திருப்பதாகக் கருதப்படும் இடத்தில் பரசூட் மூலம் குதிப்பார்கள் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களின் நடமாட்டத்தையும் இந்த சிறப்பு அதிரடிப் படை கண்காணித்து வருகிறது. எப்படியும் இராணுவம் பிரபாகரனை பிடித்துவிடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பிரபாகரன் கடல்வழியாகத் தப்பிச் செல்வதைத் தடுக்க முல்லைத்தீவு கடல் பகுதியை இலங்கை கடற்படை சுற்றிவளைத்துள்ளது. முல்லைத்தீவு வனப் பகுதியில் பிரபாகரன் எங்காவது மறைந்திருக்கிறாரா என்று இலங்கை விமானப்படை விமானங்கள் தீவிரமாகத் தேடி வருகின்றன. புதுக்குடியிருப்பு மற்றும் விஸ்வமேடு பகுதிகளில் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
பிரபாகரன் தங்கியிருந்திருக்கலாம் என்று கருதப்படும் 2 பாதாள பதுங்கு அறைகளை இராணுவம் கண்டுபிடித்துள்ளது. இந்த பாதாள பதுங்கு அறைகளை கைப்பற்றியதால் பிரபாகரன் வெளிநாட்டுக்குத் தப்பியிருக்கக் கூடும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதுபோன்ற பல பாதாள அறைகளை பிரபாகரன் உருவாக்கியிருக்கக் கூடும் என்று தற்போது கருதப்படுகிறது.
பிரபாகரனை பாதுகாக்க கறுப்புப் புலி படை உள்ளது. இந்த படையினர் கடுமையாக பயிற்சி பெற்றவர்கள் பிரபாகரனுக்கு மிகவும் விசுவாசமானவர்கள். பிரபாகரனை பிடிக்க வேண்டுமானால் இவர்களை வீழ்த்திவிட்டுதான் பிடிக்க முடியும்.
அதிவேக நவீன படகு மூலம் பிரபாகரன் முல்லைத்தீவிலிருந்து தப்பி நடுக்கடலில் உள்ள கப்பலுக்குச் செல்ல முடியும் என்று இலங்கை இராணுவ தளபதி பொன்சேகா ஏற்கெனவே கூறியிருந்தார்.
ஆனால் முல்லைத்தீவில் புதுக்குடியிருப்புக்கும் விஸ்வமேட்டுக்கும் இடையே உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் அதி பாதாள அறையில் பிரபாகரன் தங்கியிருக்கக் கூடும் என்று இராணுவ அதிகாரிகள் சிலர் கருதுகின்றனர்.
தனது இருப்பிடத்தை எளிதில் கண்டுபிடிக்காதவாறு அவர் அடிக்கடி இடத்தை மாற்றிக் கொண்டிருப்பார் என்று கருதுகின்றனர். அவர் தப்பியிருக்க வழியில்லை. முல்லைத்தீவில் 30 கி.மீ. பரப்பளவில்தான் அவர் பதுங்கியிருக்கக் கூடும் என்ற கருத்தும் இராணுவ அதிகாரிகள் மத்தியில் உள்ளது.
பிரபாகரன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ விடுதலைப் புலிகளின் இயக்க வரலாறு முடிவுரை எழுதப்பட்டுவிடும் என்று இராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர்.
பிரபாகரன் மட்டுமின்றி விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களைப் பிடிக்கவும் இராணுவம் உஷார் நிலையில் உள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment