பேரரவம் கேட்டிலையோ...?
இலங்கை இராணுவம் முன்னேறிக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக ஒலித்த குரல்கள் ஓய்ந்து கொண்டே இருக்கின்றன.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் , பழ.நெடுமாறன் இருவருடைய குரல்கள் மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவையும் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் கூச்சலில் காணாமல் போய்விட்டன.
இந்த முரண் நியாயமானதாகத் தெரியவில்லை. ஏனென்றால், ஒரு இலட்சம் இலங்கைத் தமிழர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. அவர்களுக்குத் திரட்டப்பட்ட நிதி, உதவிப்பொருட்கள் என்னவாயிற்று? தமிழக முதல்வருக்கு இலங்கை அதிபர் விடுத்த அழைப்பு என்ன ஆயிற்று? பதில்வராத கேள்விகள் நிறைய.
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலாக இலங்கைத் தமிழர் பிரச்சினை ஒட்டுமொத்தமாக பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. தேர்தல் முடிவு வெளியாகும் வரை யாரும் கவலைப்படப் போவதில்லை. திருமங்கலத்தில் வெற்றி விழாக் கொண்டாடப்படும் போது ஒருவேளை, இலங்கை இராணுவம் வெற்றிவிழாக் கொண்டாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவ்வளவு வேகமாக இலங்கை இராணுவம் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
சுமார் ஒரு இலட்சம் தமிழர்களை விடுதலைப் புலிகள் பலவந்தமாக முல்லைத்தீவுக்கு இடம்பெயரச் செய்துள்ளனர். கிளிநொச்சியில் தெருவில் சுற்றித் திரியும் நாய்கள் , சில மாடுகள் தவிர மனித வாசமே இல்லை என்று இலங்கை இராணுவம் சொல்கிறது.
இலங்கை இராணுவம் முன்னேறிச்செல்லும் பாதைகளில் தமிழர்களே காணப்படவில்லை என்றால், நிவாரணப் பொருட்களை யாருக்கு அளிக்கிறது இலங்கை அரசு? புரியவில்லை. இந்த நிலையிலும் கூட "தமிழர்களுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். விடுதலைப் புலிகளுக்கும் உணவு போய்க்கொண்டிருக்கிறது' என்கிறார் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ. அதாவது, சாப்பாடு போட்டு சண்டை போடுகிறோம் என்கிறார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கைவசம் இருந்த கிளிநொச்சி இலங்கை இராணுவத்தின் ஆளுமைக்கு வந்துவிட்டது. அடுத்து ஆனையிறவுப் பகுதி கைப்பற்றப்படும். முல்லைத்தீவை அடுத்த ஓரிரு வாரங்களில் கைப்பற்றி விடுவோம் என்று இலங்கை இராணுவம் நம்புகிறது.
முல்லைத்தீவு விடுதலைப் புலிகளின் கடைசி இடமாக இருக்கும். இங்கு நடைபெறும் போர் மிக மோசமானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இப்போது முல்லைத்தீவில் இருக்கும் தமிழர்கள் கதி என்ன என்பதுதான் கேள்விக் குறியாகவுள்ளது.
முல்லைத்தீவில் நடக்கவிருக்கும் போர் கண்மூடித்தனமாக உலக நாடுகளின் விமர்சனங்கள் பற்றிக் கவலைகள் இல்லாத போராகத்தான் இருக்கும். இலங்கை அரசு 25 ஆண்டுகளாக காட்டமுடியாத கோபத்தீயின் வெளிப்பாடாக அமையும்.
இஸ்ரேல் இராணுவம் காஸா நகரில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் நடத்தும் போரில் 87 குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 517 பேர் இறந்துள்ளனர். 2500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது முல்லைத்தீவிலும் நடக்கும். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையிலான இந்தப் போரில் தமிழர்கள் வெளியேற அனுமதிக்கப்படாவிட்டால் நிச்சயமாக பல ஆயிரம் தமிழர்கள் இந்தப் போரில் இறக்க நேரிடும்.
தமிழக அரசியல் கட்சிகளுக்கு உண்மையிலேயே இலங்கைத் தமிழர் மீது அக்கறை இருந்தால் இப்போது முல்லைத்தீவில் உள்ள தமிழர்கள் வெளியேறும் வரை இலங்கை இராணுவம் தாக்குதலை நடத்தக்கூடாது என்று இந்திய அரசு மூலமாக நிர்ப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்.
இலங்கைத் தமிழர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மனித அரணாகப் பயன்படுத்துகிறார்கள் என்று இலங்கை அரசு சொல்கிறது. இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு இடம்பெயர விடாமல் புலிகள் தடுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. வெளியேறும் தமிழர்கள் இராணுவத்திற்கு அஞ்சியே புலிகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், போர்க்களத்தில் சிக்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பாக வெளியேறச் செய்வது விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசு இருவர்களது கடமை.
இது நடைபெற வேண்டுமானால் குறிப்பிட்ட சில நாட்களுக்கு போர் நிறுத்தம் அவசியம். அதற்கான நிர்ப்பந்தத்தை இந்திய அரசு மூலமாக ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கும் தமிழக அரசியல்கட்சிகளுக்கும் உள்ளது.
"தனித் தமிழீழ போர் வேறு வடிவம் கொள்ளும்' என்றும் "கிளிநொச்சியை இழந்தது பின்னடைவு அல்ல' என்றும் பேசிக்கொண்டிருக்க இது தருணமல்ல.
இந்த ஒரு இலட்சம் தமிழர்களை இப்போது காப்பாற்றாவிட்டால் பிறகு எப்போதும் காப்பாற்ற முடியாது. அப்படியான நிலை ஏற்படும்போது தமிழகத்தில் நடந்த உண்ணாவிரதம், கடையடைப்பு, ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள் , அனைத்துக்கட்சிக் கூட்டங்கள் , அதன் தீர்மானங்கள், பிரதமருடன் சந்திப்பு என அனைத்துமே விழலுக்கு இறைத்த நீராகிவிடும்.
தினமணி: ஆசிரியர் தலையங்கம்






0 விமர்சனங்கள்:
Post a Comment