புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதென்பது வெறும் பகல்கனவே
பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவார்கள் என்பது வெறும் பகல்கனவாகவே இருக்கும் என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி வெற்றி தொடர்பாக தொலைக்காட்சிகளுக்கு ஒரே நேரத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கிய விசேட பேட்டியொன்றிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு கூறியிருக்கிறார்.
அதில் அவர் மேலும் கூறுகையில்,
''புலிகளிடமிருந்து கிழக்கு வீழ்ந்தபோது தற்காலிக பின்னடைவு என்றார்கள். துணுக்காய், மல்லாவி படையினர் வசமானபோதும் தற்காலிக பின்னடைவு என்றனர். கிளிநொச்சியை படையினர் நெருங்கும் போது, அது 'மரணத்தின் முத்தம்' என வர்ணித்தார்கள். கிளிநொச்சியை பிடிப்பது என்பது ஜனாதிபதியின் பகல்கனவு எனப் புலிகள் கூறினர். எனினும், நாம் கிளிநொச்சியைப் பிடித்திருக்கிறோம்.
எனவே, இவை அனைத்தையும் தற்காலிக பின்னடைவு என்று கூற முடியாது. கட்டுப்பாட்டில் இருந்த நிலப் பிரதேசத்தில் 90 சதவீதமான பகுதிகள் இழக்கப்படுமானால் அதை தற்காலிக பின்னடைவென்றோ அல்லது தந்திரோபாய பின்வாங்கலென்றோ கூற முடியாது. இது 10 அல்லது 20 சதவீதமாக இருந்திருந்தால் தந்திரோபாய பின்வாங்கலெனக் கூற முடியும்.
பிரபாகரன் மீண்டும் எழுச்சி பெறுவாரென்பது சிலரது கனவாக இருக்கிறது. அது பகல் கனவாகவே இருக்குமென நான் நம்புகிறேன். அதேநேரம், கடந்த இரண்டரை வருட கால யுத்தத்தில் 15 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கிழக்கில் 2 ஆயிரம் புலிகளும் யாழ்.குடாநாட்டு யுத்தத்தில் 1,500 புலிகளும் வடக்கின் ஏனைய பகுதிகளில் நடந்த மோதலில் 11 ஆயிரத்து 500 புலிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்தக் காலப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் படையினர் மட்டுமே உயிரிழந்திருக்கின்றனர்.
பெரியதொரு கெரில்லா இயக்கத்துடன் மோதும்போது உயிரிழப்புகளும் காயங்களும் இன்றி யுத்தம் செய்ய முடியாது. யுத்தத்தின்போது கெரில்லா ஒருவரைக் கொல்ல படையினரில் 10 பேர் உயிரிழக்க வேண்டி வரும் என்பதே உலகில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாகும். எனினும், எமது நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் 5 கெரில்லாக்கள் சாகும்போது படையில் ஒருவரே உயிரிழக்கிறார் என்பது எமக்கு வெற்றிதானே.'' என்று கூறினார்.
வீரகேசரி இணையம்






0 விமர்சனங்கள்:
Post a Comment