10 நாள் சிசுவை விற்க முயன்ற தாயும் 4 பெண்களும் கைது
பிறந்து 10 நாட்களேயான சிசு ஒன்றை விற்க முயற்சித்த தாய் உள்ளிட்ட 5 பெண்கள் கொழும்பு, மாளிகாவத்தை பிரதேசத்தில் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கே இந்தக் குழந்தை பிறந்துள்ளது.
இந்தப் பெண் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மத்தியகிழக்கு நாடொன்றிலிருந்து நாடு திரும்பியிருக்கிறார்.
பின்னர் அவர் தனது சொந்த ஊரான மத்துகமவிற்கு செல்லாமல் மாளிகாவத்தையிலுள்ள வீடொன்றிலேயே தங்கியிருந்து குழந்தையையும் பிரசவித்துள்ளார். பிறந்த குழந்தையை தனது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முடியாது எனக் கூறி தான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவரிடம் குழந்தையை ஒப்படைத்து, விற்றுவிடுமாறு தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து வீட்டு உரிமையாளரான பெண்ணின் ஏற்பாட்டிற்கு அமைய 25 ஆயிரம் ரூபாவுக்கு குழந்தையை வாங்கவென ஏனைய 3 பெண்கள் வீட்டுக்கு வந்திருந்தபோதே இவர்கள் அனைவரும் பொலிஸாரிடம் அகப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மாளிகாவத்தை பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது சந்தேகநபர்கள் ஐவரையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment