இனப்பிரச்சினைத் தீர்வுக்கு 13வது திருத்தச்சட்டமூலம் அடிப்படையல்ல
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான யோசனைத் திட்டங்களை அடக்கிய சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தீர்வுத் திட்டம், நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறை இல்லாமலாக்கப்படவேண்டுமென்பதையும் பிரேரிப்பாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் யோசனைத் திட்டத்தை இறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், இம்மாதம் 16ஆம், 17ஆம் திகதிகளில் கூடி சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஆராயவிருப்பதாவும் தெரியவருகிறது.
13வது திருத்தச்சட்டமூலத்தை அடிப்படையாகக் கொள்ளாத பிரதான யோசனைத் திட்டம் முன்வைக்கப்படும் எனவும், இதில் மத்திக்கும், மாகாணங்களுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வுத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் அமைச்சர் திஸ்ஸ வித்தாரண கூறினார்.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதித் தீர்வில் அனைத்துக் கட்சிகளும் பங்கெடுக்க வேண்டுமென விரும்புவதாகவும், குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்துகொள்ள வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஆராய்ந்து தீர்வு யோசனையொன்றைத் தயாரிப்பதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு இதுவரை 104 தடவைகள் கூடி ஆராய்ந்துள்ளது. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இறுதித் தீர்வு தொடர்பாக 95 வீத இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முல்லைத்தீவையும் விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக மீட்ட பின்னர் அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகத் தெரியவருகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment