புலிகளின் 3 இலக்குகள் மீது 6 தடவை விமானத் தாக்குதல்
முல்லைத்தீவில் தரை வழியாக முன்னேறிவரும் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இனங் காணப்பட்ட புலிகளின் வெவ்வேறு மூன்று இலக்குகளை குறிவைத்து நேற்று ஆறு தடவைகள் விமானத் தாக்குதல்களை நடத்தியதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.
விமானப்படைக்குச் சொந்தமான மிக்-27, கிபீர் ஆகிய ஜெட் விமானங்களும், எம்.ஐ-24 விமானமுமே நேற்று முல்லைத்தீவில் கடும் தாக்குதல்களை நடத்தின.
புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து மேற்கு நோக்கி முன்னேறிவரும் நான்காம் படையணியினருக்கு ஒத்துழை ப்பு வழங்கும் வகையில் நேற்றுக்காலை 10 மணிக்கு முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது. சந்தியிலிருந்து ஒரு கிலோமீற்றர் மேற்கே இனங்காணப்பட்ட புலிகளது இலக்கு நோக்கி மிக்-27 தாக்குதல் நடத்தியது.
அதனைத் தொடர்ந்து காலை 11.20 மணிக்கு புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து ஒன்றரை கிலோமீற்றர் கிழக்கிலுள்ள புலிகளின் இலக்குகள் மீது கிபீர் ஜெட் விமானம் தாக்குதல் நடத்தியது. இராணுவத்தின் 59ம் படைப்பிரிவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விங் கமாண்டர் கூறினார்.
முல்லைத்தீவு கடனீரேரியிலிருந்து ஒரு கிலோமீற்றர் வடமேற்கே அமைந்துள்ள இனங் காணப்பட்ட இலக்கின் மீது அடுத்தடுத்து நான்கு தடவைகள் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இராணுவத்தின் 59ம் படைப்பிரிவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே இவை நடத்தப்பட்டுள்ளன. நண்பகல் 1.45 மணிக்கு மிக்-27 இன் மூலமாகவும் மாலை 3.30 மணிக்கு எம்.ஐ-24 விமானம் மூலமாகவும் மாலை 3.47 மணிக்கு கிபீர் ஜெட் மூலமாகவும் மாலை 5 மணிக்கு மிக்-27 ஜெட் விமானம் மூலமாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இத்தாக்குதல்கள் அனைத்தும் வெற்றியளித்திருப்பதனை விமான ஓட்டிகள் உறுதி செய்திருப்பதாகவும் விங் கமாண்டர் குறிப்பிட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment