6 மணிநேர போர் நிறுத்தம் : நோயாளர்களை வவுனியா அழைத்து வர ஏற்பாடு
வடக்கில் மோதல்களின் போது அகப்பட்டு காயமடைந்தவர்களையும் மற்றும் வைத்தியசாலைகளிலுள்ள நோயாளிகளையும் மேலதிக சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அழைத்து வர வழி செய்யும் வகையில் இன்று 6 மணித்தியாலங்கள் போர் நிறுத்தம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தனக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அஜித் மென்டிஸ் கூறுகின்றார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் வன்னிப் பகுதியிலுள்ள நோயாளர்களும் காயமடைந்தவர்களும் வவுனியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள். இவர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கும் கவனிப்பதற்கும் என மருத்துவ மனையில் தனிப் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை வல்லுனர்கள், விசேட மருத்துவர்கள் சேவையாற்றுவதோடு இரத்தம் உட்பட அவசர சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதோடு தேவையான மருத்துவ பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த முடிவைப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து எடுத்துள்ளதோடு இது பற்றி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் பி.பி.சிக்கு தெரிவித்துள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment