முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடமிருந்து இறுதியாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் 89 ஆயிரம் சிவிலியன்களே புலிகளின் பிடியில் சிக்கியுள்ளனர்.
புலிகளைப் பாதுகாக்கும் முயற்சியை கைவிட்டு விட்டு புலிகளின் பிடியிலுள்ள அப்பாவித் தமிழ் மக்களை பாதுகாப்பதே சர்வதேச அமைப்புக்களின தும், தன்னார்வ நிறுவனங்களினதும் முன்னுள்ள மிக முக்கிய பணியாகும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் படை நடவடிக்கைகள் தொடர்பாக விமர்சிப்பவர்களும், அதனை திரிவுபடுத்தி பொய்ப் பிரசாரங்கள் செய்கின்றவர்கள் எவரும் அப்பாவி பொது மக்களை புலிகள் பலாத்காரமாக பிடித்து மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி வருவதையோ விடுவிக்காமல் இருப்பதையோ பேசுவதில்லை.
ஆயுதங்களை மாத்திரம் ஏந்தி யுத்தம் செய்வது எமது நோக்கமாக இருந்திருந்தால் இன்று இந்த யுத்தம் முடிவுக்கு வந்திருக்கும். பொது மக்களின் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறைகொண்டதனாலேயே இந்த நடவடிக்கையை எமது படையினர் இன்று வரை நீடித்துச் செல்கின்றனர்.
புலிகள் இயக்கத்திலிருந்து தப்பி வருபவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுப்பது தொடர்பாக பலர் பேசுகின்றனர். இவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக புதிதாக கூற வேண்டியது ஒன்றும் இல்லை. ஏனெனில், அவர்கள் சரணடைய வேண்டியது மாத்திரமே உள்ளது. இதில் எமக்கு எந்தப் பிரச்சினைகளும் கிடையாது.
கிழக்கை விடுவிக்கும் மனிதாபிமான நடவடிக்கையின் போது புலிகள் இயக்கத்திலிருந்து தப்பி வந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தேவையான புனர்வாழ்வையும், பயிற்சிகளையும் வழங்கி அவர்களில் சிலர் வெளி நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனவே, பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான நடவடிக்கையை நாங்கள் நடைமுறையில் காண்பித்துள்ளோம் என்றார்.
இலங்கையில் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள், தன்னார்வ, அமைப்புக்கள் சிறந்த சேவைகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றன. இதில் மாற்றுக் கருத்தில்லை. என்றாலும் இந்த நிறுவனங்களில் பணி புரியும் அதிகாரிகளோ மோசமாகவும், புலிகளுக்கு சார்பான நிலையிலும் செயற்படுகின்றனர்.
புலிகள் ஆயுதத்தை மாத்திரம் ஏந்தி யுத்தம் செய்யவில்லை. இந்த யுத்தத்தை முன்னெடுப்பதற்கு வேறு வழிகளையும் பயன்படுத்தியுள்ளார்கள். எனவே தான் புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தில் இருப்பவர்களும், சில சர்வதேச அமைப்புக்களும் புலிகளுக்குச் சார்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
படையினர் நடத்திய மோட்டார் தாக்குதல்களிலேயே அநேகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று சிலர் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்களில் சிலரிடம் சூட்டுக் காயங்களும் காணப்படுகின்றன.
நேருக்கு நேர் மோதல்களில் ஈடுபடுபவர்களுக்கே சூட்டுக் காயம் ஏற்படும். துப்பாக்கியுடன் காயமடைந்த நிலையில் இருப்பவர்களை புலி உறுப்பினர்கள் என்றும், துப்பாக்கி இல்லாத நிலையில் காயமடைந்தவர்கள் இருந்தால் அவர்கள் சிவிலியன்கள் என்றும் சொல்கின்றார்கள். ஆனால் தற்பொழுது அநேகமான புலிகள் சிவில் உடைகளுடன் இருந்து கொண்டே மோதல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
தற்பொழுது புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தின் அரைவாசி பிரதேசத்திலேயே அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயம் அமைந்துள்ளது.
இலங்கை போன்று பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்து வரும் எந்த ஒரு நாடும் வழங்காத பல சந்தர்ப்பங்களை நாங்கள் பொது மக்களுக்காக வழங்கியுள்ளோம் என்றும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
புலிகளின் பிடியில் நான்கரை இலட்சம் மக்கள் இருப்பதாக ஒருசிலரும், இரண்டரை இலட்சம் மக்கள் இருப்பதாக இன்னும் சிலரும் தெரிவிக்கின்றனர். இந்த எண்ணிக்கையை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் இந்த எண்ணிக்கை புலிகளின் அழுத்தத்தினால் கூறப்பட்டவையாகும்.
இரண்டு இலட்சத்து எட்டாயிரம் பொதுமக்களே உள்ளார்கள் என்று 2002 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் இடம்பெயர்ந்து வந்தவர்களில் சுமார் 60 ஆயிரம் பேர் கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் வசித்து வருகின்றனர். இது தவிர மலையகம் உட்பட ஏனைய பகுதிகளை நோக்கியும் பெருந்தொகையானவர்கள் சென்றுள்ளதுடன், மேலும் சிலர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்றார்.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடமிருந்து இறுதியாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் 89 ஆயிரம் சிவிலியன்களே புலிகளின் பிடியில் சிக்கியுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அதேசமயம், கடந்த சில மாதங்களாக வருகை தந்த பெருந்தொகையானோர் வவுனியாவிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
அமைச்சர் கெஹெலிய
படையினரால் அண்மையில் மீட்டெடுக்கப்பட்ட பிரதேசங்களில் புலிகளும், அவர்களுக்கு சார்பானவர்களும் கூறுவது போன்று பெருந்தொகையான பொதுமக்கள் வாழ்ந்தமைக்கான எந்தவித தகவல்களும் இல்லை என்று தெரிவித்த தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, முல்லை மாவட்டத்தில் எத்தனையோ குளக்கட்டுகள் வந்த போதிலும் அவற்றை பயன்படுத்தி மக்கள் விவசாய நடவடிக்கைகள் செய்த எந்த தடயங்களும் இல்லை என்றும் தெரிவித்தார்.
புலிகள் உலகளாவிய ரீதியில் பாரிய வலையமைப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சர்வதேச மட்டத்திலும் பெரு மளவிலானவர்களை பணம் கொடுத்து வாங்கியுள்ளமையும் தெரிய வருகிறதென்றும் குறிப்பிட்டார்.
புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கும் வரையில் இராணுவ ரீதியான நடவடிக்கை நிறுத்தப்பட மாட்டாது என்று உறுதியாக தெரிவித்த அவர், பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment