விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி சிறுபான்மை இனத்தின் வீழ்ச்சி: மனோ கணேசன்
விடுதலைப் புலிகள் வீழ்ச்சியடைந்தால் அது தமிழர்களின் அரசியல் உரிமைகளுடன் வீழச்சியடைந்தமைக்குச் சமனாக அமையும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறினார்.
விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியானது ஒட்டுமொத்தத் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கு மாத்திரமன்றி, அனைத்து சிறுபான்மை இனத்தினதும் வீழ்ச்சியாக அமைந்துவிடும் என கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் மனோ கணேசன் தெரிவித்தார்.
“இதுதான் நடைமுறை. சிங்கள, பௌத்தவாதிகள் சிறுபான்மை இனத்தவரை தோற்கடிக்க வேண்டமென ஏற்கனவே கூறி வருகின்றனர். தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள, பௌத்தவாதிகள் அனைத்து இலங்கையும் தமக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டுமென விரும்புகின்றனர்” என அவர் குறிப்பிட்டார்.
மோதல்களை நிறுத்திப் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த மனோ கணேசன், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் எனக் கூறப்பட்டபோதும், தற்பொழுது தமிழர்களின் அபிலாசைகளை அழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது எனக் குற்றஞ்சாட்டினார்.
“தற்பொழுது நடைபெறுவது அரசியல் மோதல். எதிரிகளை களத்தில் தோற்கடிப்பதற்கு இராணுவ நடவடிக்கை உதவும். ஆனால், இதன்மூலம் அரசியல் எதிரிகளை ஒழிக்கமுடியாது” என மனோ கணேசன் தனது செவ்வியில் குறிப்பிட்டார்.
அதேநேரம், விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தால் தமிழர்களின் அபிலாசைகள் பூர்த்தியாக்கப்பட்டுவிடுமென புதுடில்லியுள்ள சிலர் கருதுவதாக அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, வன்னிப் பகுதியில் நடைபெறும் மோதல்களில் சிக்குண்டிருக்கும் மக்களைப் பாதுகாப்பது விடுதலைப் புலிகளினதும், இலங்கை அரசாங்கத்தினதும் கடமையெனக் குறிப்பிட்ட மனோ கணேசன், பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற இரு தரப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கைவிடுத்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment