ஹிலாரியின் ஆதரவு தேடி...அடேல் அதீத முயற்சி...
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராகப் பதவியேற்றிருக்கும் ஹிலாரி கிளின்ட்டன் எப்போதுமே புலிகள் ஆதரவாளர் என்று அறியப்பட்டவர். 'ஹிலாரி நினைத்தால், இலங்கைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்து, செத்துக்கொண்டிருக்கும் தமிழர்களைத் காப்பாற்ற முடியும்!' என்ற நம்பிக்கை சர்வதேசத் தமிழ் ஆர்வலர்கள் மத்தி யில் பெருகிவருகிறது.
சரி, ஹிலாரியிடம் புலிகள் சார்பாகப் பேச, அவர்கள் தரப்பு நியாயத்தைஎடுத்துரைக்க யார் இருக்கிறார்கள் என்ற கேள்வி வந்தபோது, அதற்கு விடையாக வந்த பெயர் அடேல்!
பிரபாகரனின் அரசியல் ஆலோசகராக இருந்த மறைந்த பாலசிங்கத்தின் மனைவிதான் அடேல்!
தற்போது லண்டனில் வசித்துவரும் அடேல் பாலசிங்கம், ஹிலாரி கிளின்ட் டனை சந்தித்து இரண்டுமணி நேரம் பேசியதாகத்தகவல். இதைப் புலிகளின் அதிகார பூர்வ வானொலியான 'புலிகள் குரல்' உறுதி செய்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. 'இலங்கை விஷயத்தில் இந்தியாவின் நிலைப் பாடு' என்ற தலைப்பில் இரண்டு தினங்களுக்கு முன்பு அந்த வானொலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சியில் சாட்டிலைட் போன் மூலம் பல்வேறு தமிழகத் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றியிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில், 'அடேல் ஆன்ட்டி (புலிகள் அடேலை அழைப்பது இப்படித்தான். மிக முக்கியத் தலைவர்கள் மட்டும் 'வெள்ளைத் தமிழச்சி' என்று அழைப்பார்கள்!) ஹிலாரியுடன் நடத்திய பேச்சுவார்த்தை நம்பிக்கை யூட்டுகிறது!' என்று பேட்டியாளர் சொல்லியிருக்கிறார்.
சந்திப்பு எங்கே நடந்தது, எவ்வளவு நேரம் நீடித்தது என்பது பற்றிய தகவல் இல்லை. ஆனால், அந்த சந்திப்பின்போது இருவரும் பேசிக் கொண்டதைவிடவும் அடேல் எழுதிய, 'என் பார்வையில் பிரபாகரன்' என்ற புத்தகம்தான் ஹிலாரியை நிறைய பேச வைத்தது என்கிறது, விவரம் அறிந்த வட்டாரங்கள்.
''அடேல்-ஹிலாரி சந்திப் புக்குப் பிறகுதான் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் ஒரே நாளில் தனித்தனியாக நிருபர்களை சந்தித்தனர். 'பொதுமக்களை இலங்கை அரசு கொன்று குவிப்பது கவலையளிக்கிறது!' என்று பிரணாப்பும், 'இலங்கை அரசு தாக்குதலைத் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கவில்லை!' என்று சிதம்பரமும் இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவித்தார்கள்.'' -இப்படி தமிழ் ஆர்வலர்கள் குதூகலத்துடன் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது தவிர, அந்த சந்திப்புக்குப் பிறகுதான் போப் ஆண்டவர் தன் தூதரை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைத்தார். இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் மில்லிபாண்ட், ஹிலாரியுடன் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், 'இலங்கை யின் வடக்குப் பகுதியில் மனிதத் தன்மையற்ற நிகழ்வுகளுக்கு இலங்கை அரசுதான் பொறுப்பு' என்ற கடும் வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டிருந்தன. ஒரே சந்திப்பில் ஹிலாரியை தன்வயப் படுத்தும் சக்தி அடேலுக்கு உண்டா என்ற கேள்விக்கு ஈழத்தி லிருந்து வரும் பதில், 'அடேல் எழுதிய புத்தகத்துக்கு அந்த சக்தி இருந்திருக்கிறது...' என்பதுதான்!
ஹிலாரியை மாற்றிய அந்தப் புத்தகத்தில் அப்படி என்ன இருக்கிறது? முழுக்க முழுக்க பிரபாகரன் என்ற தனிமனிதனைப் பற்றி தன் புத்தகத்தில் சித்திரித் திருக்கிறார் அடேல்! அதிலிருந்து சில வரிகள் இங்கே...
'பிரபாகரன் தன் பதினாறாவது வயதில்ஆயுதம் ஏந்தினார். 'ஈழத் தமிழர்கள் தனி நாடுகேட்கும் உரிமையை முழுதாகப் பெற்றவர்கள். அவர்களுக் கென்று ஒரு நாடு தேவை என்பதை நான் முழுதாக உணர்ந்துதான் களத்தில் நிற்கிறேன்' என்பது பிரபா கரன் தன் சகாக்கள் மத்தியில் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். நான் (அடேல்) வன்னிப் பகுதியில் வசித்த பல வருடங்களில் அநேக முறை பிரபாகரன் தன் படையினர் மத்தியில் பேசியிருக்கிறார். பல சமயங்களில் தனித் தனிக் குழுக்களாக அவர்களைப் பிரித்து உரையாடியிருக்கிறார். அந்த சந்திப்புகளில் அவர் வலியுறுத்துவது இரண்டைத்தான். தமிழ் கலாசாரத்தைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொள்ளுங்கள், உலகத்தில் அன்றாடம் நடக்கும் அறிவியல் மாற்றங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். 'புகைப் பழக்கமும் மதுப் பழக்கமும் தமிழர்களின் கலாசாரச் சீரழிவுக்கு வழிவகுக்கும்.' - இதை என் கணவரிடம் (பாலசிங்கம்) பல முறை சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அவர் (பிரபாகரன்) முன்பாக சிகரெட் பிடிக்கும் ஒரே நபர் என் கணவர் மட்டும்தான். என் கணவருக்கு மட்டும்தான் அவர் அந்த சுதந்திரத்தைக் கொடுத் திருந்தார். 'கெட்ட பழக்கங்களை நீங்கள் விட்டு விட்டால் என்ன?' என்று அடிக்கடி கேட்பார். சிகரெட் பழக்கத்தை விடாத என் கணவர், ஒரு கட்டத்தில் பிரபாகரன் முன்பு மட்டும் சிகரெட் பிடிப்பதை விட்டார். அவர் எங்களைத் தேடி வந்தால், தானே சமைப்பார். அந்த உணவை மற்றவர்களுக்குப் பரிமாறி, பசியாறுவதைப் பார்த்து மகிழ்வார். போராட்ட களங் களில் பிரபாகரன் நின்றிருந்தாலும் கிடைத்த நேரத்தை குடும்பத்துக்காக அவர் செலவு செய்ததையும் நான் பார்த்திருக்கிறேன். மதிவதனி, தன் பிள்ளைகளை சகலகலா வல்லவர்களாக உருவாக்கத் தனி அக்கறை கொண்டிருந்தார். மதிக்கு முதல் பிரவசம் 1985-ல்! அந்தப் பிரசவத்துக்கு உதவியவள் நான். அன்று பிறந்த சார்லஸ், பின்னாளில் பிரபாகரனைப் போல மதிகொண்ட ஒரு வீரனாக மாறுவான் என்று அப்போது நான் எண்ணவில்லை...' என்று போகிறது புத்தகம்.
இந்தப் புத்தகத்தில் புலிகள் ஏந்திய ஒவ்வொரு ஆயுதத்துக்கும் ஒரு காரணம் உண்டு என்பதை சம்பவங்களோடு விளக்கியிருக்கிறார் அடேல்.
அடேல்-ஹிலாரி சந்திப்புக்குப் பிறகு அமெரிக்கவாழ் தமிழர்கள், 'புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும்' என்ற மனுவை ஹிலாரியிடம் கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில், ஈழத் தமிழர்களுக்காக மலேசியாவில் தற்கொலை செய்துகொண்ட இலங்கைத் தமிழரான ராஜா, ஈழத் தமிழர் அவலம் குறித்து வைகோவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தை அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் சேர்ப்பிக்கச் சொல்லியிருக்கிறார். முதல் கட்டமாக அடேல், இந்தியாவின் நிலை மற்றும் தமிழக அரசின் நிலை குறித்து வைகோவிடம் பேசியிருக்கிறார். ராஜாவின் கடிதத்தை ஒபாமாவிடம் சேர்ப்பிக்கும் வேலைகளில் தீவிரமாகியிருக்கும் வைகோ, ஒபாமாவை நேரில் சந்தித்து, இலங்கை விவகாரம் குறித்துப் பேச முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறாராம்!
- எஸ்.சரவணகுமார்
ஜூனியர் விகடன்
0 விமர்சனங்கள்:
Post a Comment