வெளியுலக தொடர்பு துண்டிப்பு! பிரபாகரனின் இரகசிய ப்ளான், குழப்பத்தில் இலங்கை ராணுவம்
இலங்கை ராணுவத்திடம் கிளிநொச்சியை விட்டுக் கொடுத்துவிட்டு அங்கிருந்து பின்வாங்கிய புலிகளும் தமிழர்களும் முல்லைத்தீவு மாவட்டத் திற்கு இடம் பெயர்ந்தனர். இந்த மாவட்டத்தைச் சுற்றி மிக உக்கிரமான தாக்குதலை மேற்கொண்ட சிங்கள ராணுவம் ஆயிரக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்து, முல்லைத் தீவு நகரத்திற்குள் புகுந்தது.
முல்லைத்தீவு நகரத்தை ராணுவம் ஆக்ரமித்த சூழலில், மாவட்டத்தின் பிற பகுதிகளையும் கைப்பற்ற முப்படைத் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில், சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் வெடிகுண்டுகள் (கொத்தணி குண்டுகள்) பாஸ்பரஸ் எரிகுண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது ராணுவம்.
இந்த சூழலில்தான், பிரபாகரன் இரண்டு வித வியூகங்களை மேற்கொண்டிருப்பதாக அப்போதே நக்கீரனில் அட்டைப்பட செய்தி யாக சொல்லியிருந்தோம். முதல் வியூகம்... ஓயாத அலைகள்போல், "அணையா தீபம்' என்கிற பெயரில் புதுவிதமான அதிரடி தாக்குத லை நடத்துவது. இரண்டாவது வியூகம்... சர்வதேச நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பது.
""இந்த இரண்டு வியூகங்களில், இரண் டாவது வியூகம் குறித்து, சர்வதேச நாடுகளில் செயல்படும் தமிழர் அமைப்புகளுக்கு ஒரு சுற்றறிக்கைபோல கடிதம் ஒன்றை எழுதினார் பிரபாகரன். அந்த கடிதத்தில், இனப்படு கொலையை தடுத்து நிறுத்த தமிழர் அமைப்பு கள் சர்வதேச நாடுகளுக்கு அழுத்தம் தர வேண் டும் என்று எழுதியிருந்தார். இதனையடுத்து உலகம் முழுவதும் கிளர்ந்தெழுந்தனர் தமிழர்கள்.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, நார்வே, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகளில் லட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களில் 10 வயது சிறுவர் சிறுமியர்கள் உள்பட 60, 70 வயது முதியவர்கள் வரை கலந்து கொண்டு, தமிழினத்தை அழித் தொழிக்கும் சிங்கள அரசை கண்டித்தும் போரை நிறுத்த வலியுறுத்தியும் கண்டன குரல்கள் எழுப்பினர். அத்துடன், "சர்வதேச சமூகமே... ஒரு இனத்தையே பூண்டோடு அழிக்கும் ராஜபக்சே அரசை கண்டிக்க மாட்டாயா? மனித அவலம் நடப்பது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? எல்லாம் முடிந்த பிறகுதான் வாய் திறப்பாயா? தமிழீழத்தை அங்கீகரி' என்றெல்லாம் ஆவேச குரல்களில் கொந்தளித்தனர். ஒவ்வொரு நாட்களும் போராட்டங்கள் வலிமையடைந்தன. இதன் பிறகே, இலங்கை அரசு நடத்தும் இனப்படு கொலையை தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் கவனம் செலுத்தின சர்வதேச நாடுகள்'' என்கின்றனர் புலம் பெயர்ந்துள்ள தமிழர் அமைப்புகள்.
இதற்கிடையே சர்வதேச உறவுகளை மேம்படுத்த "சர்வதேச பொறுப்பாளர்' என செல்வராஜா பத்ம நாபனை நியமித்தார் பிரபாகரன்.
""பொது வாக சர்வதேச பொறுப்பாளர் என்கிற நியமனம் புலிகள் அமைப்பிடம் இல்லை. முதல்முறையாக புதிதாக இப்படி ஒரு நியமனத்தை செய்துள்ளார் பிரபாகரன். சர்வதேச பொறுப் பாளராக நியமிக்கப்பட்ட செல்வராஜா பத்மநாப னுக்கு சர்வதேச உறவுகள் அதிகம். சர்வதேச நாடுகளில் உள்ள தமிழர் அமைப்பு தலைவர் களோடு இவர் நடத்திய ஆலோசனைகளுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. அதன் ஒரு கட்டம் தான்... சர்வதேச நாடுகளின் கவனம் அதிவேகமாக இலங்கை இனப்படுகொலை விஷயத்தில் திரும்பியிருப்பது'' என்கின்றனர் இவர்கள்.
இந்த சூழலில்தான், இலங்கையில் இனச் சிக்கல் தீர்க்கப்பட வேண்டுமென்பதில் அதீத ஆர்வம் காட்டும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர். ஹிலாரி கிளிண்டனை சந்தித்து, இலங்கையில் நடக்கும் மனித அவலம் குறித்து விவரித்தனர் தமிழர் அமைப்பினர். அதேபோல, இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபேட்டனையும் சந்தித்து பேசினர். அதேசமயம், சர்வதேச நாடுகளை வலியுறுத்தி அழுத்தம் கொடுக்கும் போராட்டங்களும் விரிவடைந்து கொண்டேயிருந்தன. ஹிலாரி கிளிண்டனும் மிலிபேட்டனும் சந்தித்து விவாதித்தனர். இதன் முடிவில், அமெரிக்கா-இங்கிலாந்தின் கூட் டறிக்கையாக, ""இருதரப்பும் யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும்'' என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த கூட்டறிக்கை யை அடுத்து, தென் ஆப் ரிக்கா, கனடா, ஆஸ்தி ரேலியா, நார்வே, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் "இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும், அரசியல் தீர்வு காண புலிகளை பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும்' என்று கண்டிப்புடன் வலியுறுத்தின.
சர்வதேச நாடு களின் தலையீட்டை தொடர்ந்து, குறிப்பாக அமெரிக்கா தலையிடு வது துவங்கியதும் இந்தி யாவின் நிலைப்பாட்டி லும் மாற்றம் தெரிய துவங்கியுள்ளது. இலங்கை இனப்பிரச்சனை பற்றி இந்தியாவிடம் விவாதிக்க வேண்டுமென்று கடந்த ஆறுமாதங்களாக கடும் முயற்சி மேற்கொண்டது நார்வே. ஆனா, நார்வேயை அனுமதிக்காத இந்தியா தற்போது ஒப்புக்கொள்ள நார்வே அமைச்சரும் அமைதி பேச்சுவார்த்தையை கடந்த காலங்களில் முன்னெடுத்தவருமான எரிக்ஷோல்ஹைம் விரைந்து டெல்லிக்கு வந்து, அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரை சந்தித்து விவாதித்ததை அடுத்து, ""இலங்கையில் யுத்தம் நிறுத்தப்பட வேண்டுமென்று இந்தியாவும் விரும்புகிறது. உடனடியாக அப்பாவி மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும்'' என்று அறிவித்தது இந்தியா.
இப்படி உலகநாடுகள் கருத் துக்களை சொல்லிக் கொண்டி ருக்க இலங்கை ராணுவமோ மக்களை பொசுக்குவதை நிறுத்த வில்லை.
ராணுவத்தின் எறிகணை தாக்குதல்களும் பீரங்கி ஷெல் தாக்குதல்களும் தீவிரமடைந் திருப்பதால், பாதுகாப்பு வளைய பகுதிகளுக்குச் சென்றாலும், பாதுகாப்பு இல்லை என்று வன்னி காடுகளில் சுற்றித் திரிகின்றனர் தமிழர்கள்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 250 பேர் காடுகளில் வீசப்பட்ட குண்டுகளுக்கு பலியாகி உள்ளனர். சுமார் 2200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ""இப்படி படுகாயமடைந்தவர்கள் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டுவரப் பட்டார்கள். ஆனா மருத்துவமனை மீதும் ராணுவம் வெறித்தனமாக ஷெல் தாககுதலை நடத்தியதால் மருததுவமனையே சிதைந்துபோனது. கைகளை இழந்தவர்கள், கால்களை இழந்தவர்கள், உடல் முழுக்க தீக்காயம் பட்டவர்கள் பலரும் சிகிச்சை கிடைக்காமல் பரிதவித்துக் கிடக்கின்றனர். தமிழர் களின் பரிதவிப்பு குறித்து அப்பகுதியில் உள்ள சமூக நலப்பணியாளர்களிடமும் பாதிக்கப்பட்டவர்களிட மும் கேட்டோம். "ஏற்கனவே போதுமான மருந்து களோ, வலி நிவாரணிகளோ இல்லை. எல்லாமே பற்றாக்குறைதான். மருத்துவ மனை மீதே குண்டுகள் வீசியதால் மருந்துகளும் அழிக்கப்பட்டுவிட்டன. மருந்து இல்லாமல் சிகிச்சை இல்லாமல் மக்கள் படுகிற அவதி களை கண்கொண்டு பார்க்க முடி யலை'' என்கின்றார் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான தாக்குதலில் உயிர்தப்பிய மருத்துவர் விவேகானந்தன்.
புதுக்குடியிருப்பு மருத்துவமனை அழிக்கப்பட்டதால், வன்னி பிரதேசத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலில் காயமடை பவர்கள் உயிருக்குப் போராடுகிறவர்கள் என அனைவரும் உடையார்கட்டு மருத்துவமனைக்கு இடம் பெயர்ந்தனர். தற்போது இந்த மருத்துவமனை மீது குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது ராணுவம். 4-ந் தேதி நடந்த தாக்குதலில் இங்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த 22 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 40-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருப்ப தால் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் தமி ழர்கள்.
""ஏற்கனவே ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் எங்கட வாழ்விடங்களெல்லாம் அழிந்துவிட்டது. நாடோடிகள் மாதிரி காடுகளிலும் வனாந்தரங் களிலும்தான் ஓடிக்கொண்டிருக் கம். வன்னிக்காடுகளிலும் போஸ்பரஸ் குண்டுகளை ராணு வம் வீசுவதால், காடுகள் பற்றி எரிகிறது. இதனால், படுகாய மடைகிற நாங்கள் ஹோஸ் பிட்டலில்தான் தஞ்சமடைகிறோம். இப்போ, அதனையும் குறிவைத்து ராணுவம் அழிக்கிறது.
புதுக்குடியிருப்பு மருத்துவமனைத் தாக்குதலில் உயிர்தப்பிய நான் மூணு, நாலு நாளா காடுகளில் சுத்தித் திரியறன். ஷெல் தாக்குதலில் ஒரு கால் எனக்கு முட மாயிட்டது. வலியை என்னால் பொறுக்க முடியலை. சாப்பிட்டு நாலு நாளாச்சு. காடுகளில் இருக்கும் சுனையில் உள்ள தண்ணீரைக் குடிச்சிக்கிட்டு ஓடிக்கிட்டு இருக்கேன். எந்த நேரத்தில் எந்த இடத்தில் குண்டு போடுவாங்கன்னு தெரியலை'' என்கிறார் நந்தினி.
தமிழர்கள் பரிதவித்துக்கொண்டிருக்கும் நிலை யில் புலிகளின் தற்கொலைப்படையினர் பயிற்சி முகாம், சாலை என்ற இடத்தில் உள்ள கடற்புலிகளின் தலைமையகம் ஆகியவற்றைத் தங்கள் வசம் கொண்டு வந்துவிட்டதாக சிங்கள ராணுவம் தெரிவித்துள்ளது. இங்கு நடந்த போரில், கடற்புலிகள் பலியாகியுள்ள னர். இந்த நிலையிலும், புலிகளுடன் மக்கள் இணைந்து நிற்பது சிங்கள ராணுவத்தை மிரள வைத்திருக்கிறது. வன்னிக்காட்டில் உள்ள தமிழ்மக்கள் பலரும் தற்கொலைப்படையினராக மாறியிருப்பதை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். காட்டுக்குள் அவர்களுக்குப் புதிய பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. பிரபாகரனின் பாதுகாப்பிற்காக 500 பேர் இருப்பது வழக்கம். அவர்களில் 50 பேரை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டு, 450 பேரை வேறு இடங்களுக்குச் சென்று செயலாற்றுமாறு உத்தர விடப்பட்டிருக்கிறது. கடுமையான நெருக்கடியிலும் காட்டுக்குள் போர் உத்திகள் தொடர்ந்து கொண்டி ருந்த நிலையில், கடந்த 4-ந் தேதியிலிருந்து 6-ம் தேதி இரவு வரை அங்கிருந்து யாருக்கும் எந்தத் தகவலும் இல்லை'' -என்கின்றன கொழும்பு வட்டாரங்கள்.
நாம் அந்த வட்டாரங்ளை 6-ந் தேதி இரவில் தொடர்புகொண்டபோது, 2 நாட்களாக எந்த தகவல் தொடர்பும் இல்லை. உலகநாடுகள் பலவும் இலங்கை அரசிடம் போர்நிறுத்தத்தை வலியுறுத்தியிருப்பதற்கு புலிகளின் ரியாக்ஷன் என்ன என்று ஐ.நா.சபை தெரிந்துகொள்ள விரும்புகிறது. ஆனால், புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் உள்பட யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. செஞ்சிலுவை சங்கத்தின ருடனும் தொடர்பில்லை. பத்திரிகையாளர்களுக்கும் எந்தத் தகவலும் இல்லை.இலங்கை அரசின் உளவுப் பிரிவும் எந்த செய்தியையும் தெரிந்துகொள்ள முடி யாமல் தவிக்கிறது. சேட்டி லைட்டுகளிலும் எந்த மூவ்மென்ட்டும் தெரியவில்லை என்கிறார்கள் சிங்கள ராணுவ செய்தி தொடர்பாளர்கள். பிரபாகரனைப் பிடிக்க வேண்டும் என்கிற அவர்களின் இலக்கு அத்தனை சுலபமாக இருக்கவில்லை என் கிறது கொழும்பு வட்டாரம். வன்னிக்காட்டி லிருந்து 6ந் தேதியன்று 2000 தமிழர்கள் வெளியேறி, பாதுகாப்பு வளையம் என அறி விக்கப்பட்ட பகுதிக்கு வந்துள்ளனர். அவர் களிடம் செஞ்சிலுவை சங்கத்தினர் உள்பட யாரும் பேசிவிடாதபடி பாதுகாப்பை பலப்படுத்தி கேம்ப்புக்கு அழைத்துச் சென்றுவிட்டனர் இலங்கை ராணுவத்தினர்.
உலகத் தமிழர்கள் உள்பட யாருடனும் புலிகள் எந்தத் தொடர்புமின்றி இருக்கின்ற புதிய நிலையால் சிங்கள ராணுவம் குழப்பத்திலும் மிரட்சியிலும் இருக்கிறது. முந்தைய காலகட்டங்களில் புலிகள் இதுபோல ஒருபோதும் இருந்ததில்லை என்பதால் பிரபாகரனின் திட்டம் என்ன வாக இருக்கும் என ராணுவம் யோசிக்கிறது. உலகநாடுகளிடமிருந்து சிங்கள அரசுக்கு அழுத்தத்தை எதிர்பார்த்து அந்த கால அவகாசத்தில் பதுங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தனர் புலிகள். தற்போது உலகநாடுகளின் கோரிக்கையை சிங்கள அரசு நிராகரித்துவிட்ட நிலையில், இறுதிப் போரை சந்திக்க புலிகள் தயாராகவே இருப்பார்கள் என்றும், சிங்கள ராணுவம் காட்டுக்குள்ளும் வான்வழியாகவும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தும்போது, புலி களிடமிருந்து வெளிப்படும் உக்கிரத்தாக்கு தல், உலகில் இதுவரை எங்கும் நடை பெறாத யுத்தமாக இருக்கவும் வாய்ப் பிருக்கிறது என்கிறார்கள் கொழும்பு வட்டாரத்தினர்.
-கொழும்பிலிருந்து எழில்
நன்றி நக்கீரன் வாரஇதழ்
0 விமர்சனங்கள்:
Post a Comment