வாழ்வா சாவா என்ற நிலையில் மக்கள் : ஐ.சி.ஆர்.சி
வன்னிப்பகுதியில் இருந்து, ஒரு வார காலப்பகுதியில் காயமடைந்தவர்கள், நோயாளர்கள், அவர்களது நெருங்கிய உறவினர்கள் அடங்கிய 440 பேர் கப்பல் மூலமாக திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் பல நோயாளர்கள் அங்கிருந்து வெளியேறக் காத்திருப்பதாகவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.
"இன்று நாங்கள் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளோம். ஆனால் அங்கு இன்னும் பலரைக் காப்பாற்ற வேண்டியிருக்கின்றது. அவர்கள் எம் உதவியை நாடி ஆர்வத்தோடு காத்திருக்கின்றார்கள். அங்கு வாழ்வா சாவா என்ற நிலையே தோன்றியிருக்கின்றது"என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் கொழும்புத் தலைமை அதிகாரி போல் கஸ்டல்லா தெரிவித்துள்ளார்.
"சிகிச்சையை எதிர்பார்த்து, களைத்து, சோர்ந்த நிலையில் புதுமாத்தளன் பகுதிக்கு குடும்பங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அங்கு உண்மையிலேயே மருந்துகளும் நிவாரணப்பொருட்களும் தீர்ந்துவிட்டன" என்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
"இராணுவ அதிகாரிகளும், சிவில் அதிகாரிகளும், உள்ளூர் பொதுமக்களும் நோயாளர்களை அங்கிருந்து திருகோணமலைக்கு அழைத்து வர தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள். ஆனால் புதுமாத்தளனிலும், வன்னியிலும் எஞ்சியிருக்கின்ற மக்கள் மிகுந்த நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றார்கள்" என்று திருகோணமலைக்கு நோயாளர்களை அழைத்து வரும் பணியில் ஈடுபட்டிருந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் மோர்வன் மூர்ச்சிசன் லொக்றி தெரிவித்துள்ளார்.
இரு தரப்பினரது உடன்பாட்டுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் வன்னியில் தங்கியிருந்து இடம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமான தேவைகளில் அங்குள்ள வைத்திய அதிகாரிகளுடன் இணைந்து, தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அத்துடன், திருகோணமலைக்கு வந்து சேர்ந்துள்ள ஏராளமான நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் அங்குள்ள அரச வைத்திய அதிகாரிகளுக்கு உதவுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வைத்திய குழு ஒன்றும் அங்கு தங்கியிருந்து செயற்பட்டு வருகின்றது. இந்தக் குழுவில் அறுவைச் சிகிச்சை நிபுணர் ஒருவர், மயக்க மருந்து கொடுக்கும் நிபுணர் ஒருவர் ஆகியோருடன் தாதி ஒருவரும் பணியாற்றுகின்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment