திரையுலகத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் நாகேஷின் பூதவுடல் தகனம்
மாரடைப்பினால் மரணமான பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன. அவரது இறுதி ஊர்வலத்தில் சினிமாத்துறையினர் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
வீட்டில் எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்ததால் தலையில் அடிபட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் சுகவீனமுற்றிருந்தார். இந்நிலையில் நேற்றுக்காலை 10.30 மணிக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால் உடனடியாக அவர் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். நாகேஷ் மரணம் அடைந்த தகவல், சினிமா உலகம் முழுவதும் பெரும் துயர செய்தியாக பரவியது.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆழ்வார்பேட்டை செயிண்ட் மேரீஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் வக்கப்பட்டிருந்தது. நாகேஷ் மறைவுக்கு முதலமைச்சர் கருணாநிதி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட திரையுலகத்தினர் திரண்டுவந்து அஞ்சலி செலுத்தினர்.
நடிகர்களான ரஜனிகாந்த், கமல்ஹாசன், பழம்பெரும் நடிகை மனோ ரமா,விஜய்.அஜித்குமார், பாக்யராஜ், பசுபதி, வடிவேலு, நடிகைகள் சினேகா, பூர்ணிமா, சச்சு உட்பட திரையுலகமே திரண்டுவந்து இறுதி அஞ்சலி செலுத்தியது. இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீர் அங்சலிக்கு மத்தியில் நாகேஷின் உடல், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். கன்னட பிராமண குடும்பத்தில் 1933 செப்டெம்பர் 27ஆம் திகதி பிறந்த இவர் நடித்த முதல் திரைப்படம் எதிர்நீச்சல்.
அதன்பிறகு அவர் நடித்த பல படங்கள் சிகரம் தொட்டன. ஆரம்ப காலத்தில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த நாகேஷ் சிறிது காலம் ரயில்வேயில் பணியாற்றினார். ஆனால் அவருக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. ரெயில்வேயில் பணியாற்றிய போது அங்கு நடைபெற்ற ஒரு நாடகத்தில் வயிறு வலியால் துடிக்கும் நோயாளியாக நடித்தார். அவரது நடிப்பை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர். வெகுவாக பாராட்டினார்.
அவரது சிபாரிசினால் தயாரிப்பாளர் பாலாஜி உதவியுடன் நாகேஷ் சினிமாவில் நடிக்க வந்தார். அவரது நடிப்பாற்றலால் மக்கள் மனதில் நீங்காத இடத்தையும் பிடித்தார். திரையில் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும் நாகேஷின் சொந்த வாழ்க்கை தனிமையில் சேகமாகவே கழிந்தது. வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால் அவர் வீட்டில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்.
பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சனைகளை சந்தித்த நாகேஷ் மகனை பெரிய நடிகனாக்கிப் பார்க்க வேண்டும் என விரும்பினார். இதற்காக மகன் ஆனந்தபாபுவை வைத்து பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற படத்தை தயாரித்து இயக்கினார். தொடர்ந்தும் பல படங்களை அவர் இயக்கினார். என்.எஸ்.கிருஷ்ணன், சந்திரபாபு ஆகியோருக்கு பின்னால், நகைச்சுவை நடிப்பில் பரபரப்பாக பேசப்பட்டவர் நாகேஷ்தான்.
எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் ஆகிய இருவரும் பிரபலமாக இருந்த காலகட்டத்தில், இருவருடனும் இணைந்து பலநூறு படங்களில் நாகேஷ் நடித்துள்ளார். பிற்காலத்தில், இவர் குணச்சித்ர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்தார். எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் தொடங்கி, ரஜனிகாந்த் கமலஹாசன், விஜய் , அஜீத் காலம் வரை மூன்று தலைமுறை நடி கர்களுடன் நடித்தவர் நாகேஷ். இறுதியாக அவர் தசாவதாரம் படத்திலும் நடித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment