புலிகளுக்கு வேண்டுகோள்
விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு பேச்சு வார்த்தைக்கு வர தயார் என்று அறிவித்தால் போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கைக்கு இந்தியா அறிவுறுத்த முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.
.
சென்னை மாங்கொல்லையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் இலங்கை தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சூடாக பதிலளித்தனர்.
காங்கிரசை விமர்சிக்கும் ராமதாஸ், வைகோ, திருமாவளவன், தா. பாண்டியன் ஆகியோருக்கு காங்கிரஸ் தலைவர்கள் தக்கபதிலடி கொடுத்தனர்.
இலங்கை தமிழர்கள் பிரச்சனையின் ஆழத்தை அறியாமல், அதன் பூர்வீகம் தெரியாமல் அரசியல் லாபத்திற்காக இங்குள்ள சிலர் தேர்தல் கூட்டணியை மையப்படுத்தி இந்த பிரச்சனையை கையாள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
1985 ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழர் பிரச்சனையை மிக நெருக்கமாக இருந்து தாம் அறிந்து வருவதாக தெரிவித்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விடுதலைப்புலிகள் மீண்டும் ஆயுதங்களை கீழே போட்டு பேச்சு வார்த்தைக்கு வரத் தயார் என்று அறிவித்தால்தான் இலங்கை அரசு தரப்பை போரை நிறுத்துமாறு சொல்ல முடியும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
1985ல் தனி அரசியல் கட்சி தொடங்காத சில பேர் இந்த பிரச்சனை குறித்து பேசுவது அரசியல் ஆதாயம் பெறவே என்றும் அவர் குற்றம் சாட்டினார். காந்தீய வழியில் செயல்படும் காங்கிரசாருக்கு எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலும், எவரையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டு என்று தங்கபாலு ஆவேசமாக பேசினார். நாள், இடம் குறித்துவிட்டு மோதலுக்கு வந்தால் அவர்களை சந்திப்பதற்கு தயார் என்றும் அவர் கூறினார்.
சுதர்சனம் பேசும் போது, இலங்கை தமிழர்களை காக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. அதிலிருந்து தவறமாட்டோம் என்று தெரிவித்த அவர், ஒருபோதும் தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதி களுக்கும் இடம் தரமாட்டோம் என்றார். கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இன்று தேர்தலுக்காக இலங்கை தமிழர் பிரச்சனையில் நீலிகண்ணீர் வடிப்பதாகவும் அவர் கூறினார்.
இலங்கை தமிழர்களுக்காக உயிரை விடவும் தாம் தயார் என்று ஆவேசமாக தெரிவித்த யசோதா, இலங்கை தமிழர்களை காப்பாற்றுவதற்காக இங்குள்ள காங்கிரசார் ரத்தம் சிந்த வேண்டுமா என்றும் அவர் கூறினார். விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்க்கும் ஜெயலலிதாவை எதிர்த்து பேச வைகோ, ராமதாஸ் போன்றவர்களுக்கு துணிவு இருக்கிறதா என்றும் அவர் கேட்டார்.
ஜே.எம். ஆரூண் பேசுகையில், காங்கிரசாருக்கு வீரமும், விவேகமும் இருப்பதாக காங்கிரஸ் படை எதையும் மோதி தகர்த்தெறிய தயார் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கை தமிழர் பிரச்சனையை மற்ற எல்லோரையும் விட ப.சிதம்பரம் மிக ஆழமாகத் தெரிந்தவர் என்றும், அவருடைய கருத்துக்களை புத்தகங்களாக, சி.டி.க்களாக வெளியிட்டு தமிழகம் முழுவதும் விநியோகிக்க வேண்டும் என்றார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட இலங்கை தமிழர் தலைவர்களுக்கு தங்குவதற்கு இடம் அளித்தது உள்பட பல்வேறு உதவிகளை செய்தது காங்கிரஸ்தான் என்றும், அவர் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் பேசிய பலரும், பிரபாகரனுக்கு ஆயுத உதவி, பயிற்சி அனைத்தும் அளித்தது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான் என்பதை வெளிப்படையாக தெரிவித்ததுடன் அந்த ஆயுதத்தை வைத்தே ராஜீவ் காந்தியை படுகொலை செய்ததை ஒருக்காலும் ஏற்க முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
காங்கிரசுக்கு எதிராக போராடுபவர்களை சோனியா காந்தி படம் மற்றும் கொடும்பாவியை எரிப்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று போளூர் வரதன் வலியுறுத்தினார்.
கராத்தே தியாகராஜன் பேசும் போது, இனி எங்கு காங்கிரசுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்தாலும் பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்தார். காந்திவழியில் செயல்படும் காங்கிரசாருக்கு நேதாஜி வழியும் தெரியும். நாங்கள் சஞ்சை காந்தியின் வழி வந்த இளைஞர்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
காங்கிரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், கருத்துக்கள் வரும் போது அதற்கு உரிய வகையில் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட கார்த்தி சிதம்பரம் மவுனமாக இருப்பதில் அர்த்தமில்லை என்றும் கூறினார்.
ஆயுதப்போரின் மூலமாக ஒருகாலமும் அமைதித்தீர்வு வராது என்று குறிப்பிட்ட அவர், இங்குள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்கள் பிரபாகரனுக்கு உரிய ஆலோசனை சொல்லி, ஆயுதத்தை கீழே போட்டு பேச்சு வார்த்தைக்கு வர செய்ய வேண்டும் என்று கூறினார்.
முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். அழகிரி பேசுகையில், ராஜீவ் காந்தி காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் இலங்கையில் ஒரு நிரந்தர அமைதி ஏற்படும் என்றும், அதை உருவாக்கித்தர காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஒன்றால்தான் முடியும் என்று கூறினார்.
இலங்கை தமிழர் ஆதரவு என்கிற ஒரே நிலையில் அனைவரும் இருந்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சி தொடர்பான செய்தி சேகரிப்பதற்காக ஏராளமான பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சியினரும் குழுவியிருந்தனர். அகில இந்திய அளவிலான பல்வேறு பத்திரிகை நிறுவனங்களில் இருந்தும், வெளிநாட்டு செய்தி நிறுவனங்களில் இருந்தும் கூட நிறைய செய்தியாளர்கள் வந்து கூட்ட நிகழ்ச்சியை குறிப்பெடுத்தனர்.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்கும் கூட்டம் என்பதால் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாட்டிற்காக நிறுத்தப்பட்டிருந்தனர். பொது மக்கள் மெட்டல் டிரெக்டர் பரிசோதனைக்கு பின்னரே கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பொது மக்கள் அமருவதற்காக போடப்பட்ட ஆயிரக்கணக்கான நாற்காலிகளும் நிரம்பி வழிந்த நிலையில், தேரடி சாலை, மற்றும் வடக்கு மாடவீதி, கச்சேரி சாலை தெரு ஆகிய 3 தெருக்களிலும் நூற்றுக்கணக்கான காங்கிரசாரும், பொது மக்களும் நின்றுகொண்டே தலைவர்கள் பேச்சை கேட்டனர்.
கூட்டம் முடிந்த பிறகு இரவு 10.30 மணிக்கு மாநில அரசின் உளவுத்துறையினரிடம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி இந்த கூட்ட விவரங்களை முழுமையாக கேட்டறிந்துள்ளார். காங்கிரசார், பொது மக்கள் எவ்வளவு பேர் கூடியிருந்தார்கள் என்ற விவரத்தையும் கேட்டறிந்ததாக காவல்துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment