பாக்.கை சீண்டாதீர்கள்: இந்தியாவுக்கு அல்-கொய்தா எச்சரிக்கை
டெல்லி: பாகிஸ்தான் மீது எந்தவிதமான தாக்குதலையும் நடத்தக் கூடாது. மீறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அல் கொய்தா அமைப்பு எச்சரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கான அல் கொய்தா தீவிரவாத பொறுப்புத் தலைவரான முஸ்தபா அபு யாசித் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ படத்தில் இந்த எச்சரிக்கை இடம் பெற்றுள்ளது.
இந்த வீடியோ டேப்பில், மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தீவிரவாதத் தாக்குதலால், இந்திய மக்கள் பெரும் அவமானத்தை சந்தித்தனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டால் மும்பை பாணி தாக்குதல்கள் மேலும் தொடரும் என எச்சரிக்கிறேன். அதேபோன்ற தாக்குதல் திட்டங்களை நாங்கள் கைவசம் வைத்துள்ளோம்.
பாகிஸ்தானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை இந்தியா உணர வேண்டும்.
பாகிஸ்தானை சீண்டினால், ரஷ்யர்களை ஆப்கானிஸ்தானில் நிர்மூலமாக்கியதுபோல, எங்களது வீரர்கள் உங்களது ராணுவத்தை தரைமட்டாக்கி விடுவார்கள்.
பாகிஸ்தான் மக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக திரண்டெழ வேண்டும். அதிபர் சர்தாரியை பதவியிலிருந்து தூக்கி எறிய போராட்டத்தில் குதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் யாசித்.
கொல்லப்பட்டதாக கூறப்பட்டவர்...
வீடியோவில் எச்சரிக்கை விடுத்துள்ள இந்த யாசித், கடந்த ஆண்டு அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலின்போது கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நபர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது வீடியோவில் அவர் தோன்றியிருப்பதன் மூலம் அவர் சாகவில்லை, உயிருடன்தான் இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.
அல் கொய்தா அமைப்பின் நம்பர் 2 தலைவரான அய்மான் அல் ஜவாஹிரிக்கு அடுத்த தலைவராக இருப்பவர் இந்த யாசித்.
20 நிமிடம் ஓடும் இந்த வீடியோ, பிபிசிக்கு கிடைத்துள்ளது. அரபி மொழியில் யாசித் பேசியுள்ளார்.
யாசித்துக்கு பல தீவிரவாதத் தாக்குதல்களில் தொடர்பு உள்ளது. கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த டென்மார்க் தூதரக கட்டட குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்த யாசித்துக்குத் தொடர்பு உள்ளது. மேலும், பெனாசிர் பூட்டோவைக் கொன்றதும் தாங்கள்தான் என்றும் யாசித் ஏற்கனவே கூறியுள்ளார்.
யாசித் கடைசியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியுலகுடன் தொடர்பு கொண்டிருந்தார். அல் கொய்தா அமைப்பின் ரசாயன ஆயுத நிபுணரான மிதாத் முர்சி அல் சயத் உமரின் மரணச் செய்தியை அவர் அப்போது அறிவித்தார். அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்பது தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் அவரது பேச்சு அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Thatstamil
0 விமர்சனங்கள்:
Post a Comment