வன்னி மக்கள் குறித்து நோர்வே அக்கறை
இலங்கையில் தோன்றியிருக்கும் நிலைமைகள் தொடர்பாகக் கவனம் செலுத்தியிருப்பதாக இலங்கையின் சமாதான முயற்சிகளில் அனுசரணைப் பணியாற்றிய நோர்வே தெரிவித்துள்ளது.
மோதல்களில் இலட்சக்கணக்கானவர்கள் சிக்குண்டிருப்பதுடன், ஏற்றுக்கொள்ள முடியாதளவு இழப்புக்கள் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருப்பதாக நோர்வே வெளிவிகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் சர்வதேச சட்டங்களை மதித்து நடக்கவேண்டுமென இணைத்தலைமை நாடுகள் கடந்த 3ஆம் திகதி வெளியிட்டிருந்த அறிக்கையை வரவேற்பதாக நோர்வேயின் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமெனச் சுட்டிக்காட்டியிருக்கும் நோர்வே வெளிவிவகார அமைச்சர், மனிதநேய உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதும், மனிதநேயப் பணியாளர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
அத்துடன், மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்கள் சர்வதேச சட்டங்களுக்கு அமைய நடத்தப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருக்கும் நோர்வே, அவர்களைப் பராமரிப்பதில் ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் முக்கிய பங்கு வகிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட்டமையைத் தொடர்ந்து நோர்வே, அனுசரணையாளர் பணியிலிருந்து வெளியேறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment