போப்பாண்டவரின் தூதர் யாழ்ப்பாணம் வருகை
போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட்டின் தூதர் பிஷப் மரிய செனரியோ, யாழ்ப்பாணம் வந்துள்ளார். இன்று அங்குள்ள இடம் பெயர்ந்தோர் முகாம்களுக்குச் சென்று தமிழர்களை சந்தித்துப் பேசவுள்ளார்.
வன்னிப் பகுதியில் போர் களத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்தும் அவர் ஆலோசிக்கவுள்ளார்.
பின்னர் போப்பாண்டவரின் தூதரும், யாழ்ப்பாணம் பிஷப் தாமஸ் செளந்தரநாயகமும் இணைந்து, தமிழர்களுக்காக சிறப்புப் பிரார்த்தனைக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள புனித மேரி சர்ச்சில் இந்த பிரார்த்தனை நடைபெறுகிறது.
கொப்பாய் ஆசிரியர் கல்லூரி, குருநகர் சிறப்பு மறு சீரமைப்பு முகாம், மிருசுவில் கத்தோலிக்க சர்ச் ஆகிய இடங்களில் இடம் பெயர்ந்து வந்து தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களை போப்பின் சிறப்புத் தூதர் சந்திக்கிறார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வந்த பிஷப் மரிய செனரியோ, அங்குள்ள பிஷப் இல்லத்தில், தமிழர் பிரச்சினை குறித்து விவாதித்தார். அவரிடம் வன்னி நிலைமை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், பிறரும் மேற்கொண்டு வரும் பட்டினிப் போராட்டம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் யாழ் தீபகற்பத்தைச் சேர்ந்த பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் நிலைமை குறித்து போப்பாண்டவரிடம் அறிக்கை தரவுள்ளார் மரிய செனரியோ.
யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கு முன்பாக அதிபர் ராஜபக்சே, அவருடைய தம்பி கோத்தபயா ராஜபக்சே, ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரையும் சந்தித்துப் பேசினார் மரிய செனரியோ.
0 விமர்சனங்கள்:
Post a Comment