எந்தவித சர்வதேச அழுத்தங்களாலும் புலிகள்மீதான போரை நிறுத்த முடியாது : அமைச்சர் மைத்திரிபால சிறிசேன
“எந்தவகையான உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களை எதிர்கொண்டாலும் விடுதலைப்புலிகள் மீதான இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படவே மாட்டாது” என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து விடுதலைப்புலிகள் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டு அப்பகுதி முற்று முழுதாக அரசின் கீழ் கொண்டு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்றுக் காலை வடமத்திய மற்றும் மத்திய மாகாணசபை தேர்தல் தொடர்பிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதி செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
” ஏனைய மாகாண சபைத் தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இது சுமூகமான முறையில் நடைபெறும் தேர்தலாகும். நாம் அறிந்த வகையில் எதிர்க்கட்சியின் பிரசார நடவடிக்கைகள் எங்குமே வெற்றி அளிக்கவில்லை. எனவே இந்த மாகாணசபைகளின் எல்லாத் தேர்தல் தொகுதிகளிலும் நாமே வெற்றி பெறுவோம் என்பது உறுதி. எமது கட்சியின் பிரசார நடவடிக்கைகளிலிருந்து இது உறுதியாகிறது.
தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதங்களற்ற வகையிலேயே நாம் செயற்பட்டு வருகிறோம்.
அந்தவகையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையானது உள்நாட்டிலிருந்தோ வெளிநாடுகளிலிருந்தோ, எவ்வகையான அழுத்தங்கள் வந்தாலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். முல்லைத்தீவுப் பிரதேசத்திலிருந்து விடுதலைப்புலிகளை முற்றுமுழுதாகத் தோற்கடிக்கும் வரை எமது அரசாங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கும்.
மாகாண சபைத் தேர்தல்களில் வாக்களிக்கும் போதும் வாக்குகள் எண்ணப்படும்போதும் வன்முறைகளற்ற வகையில் நாம் செயற்பட வேண்டியது அவசியமாகும்” என்றார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த
ஊடக மாநாட்டில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த கருத்து தெரிவிக்கையில்,
“மாகாணசபைத் தேர்தல்கள் சுமூகமான ஒரு சூழலில் நடைபெறும் என்பது உறுதி.
பல இன மக்கள் வாழும் பிரதேசங்களில் கூட எமது கட்சிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் கல்வி நடவடிக்கைகள் முன்னேற்றமடைந்து வருகின்றன.
5 ஆம் ஆண்டுப் புலமை பரிசில் பரீட்சையில் கூட அநேகமான மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர்.
கிராமங்களிலும் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்காளர் சிலருக்குத் தேசிய அடையாள அட்டைகள் இல்லை. அவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாகாண சபைகளின் 40 தேர்தல் தொகுதிகளிலும் நாமே வெற்றி பெறுவோம்” என்றார்.
ஹெல உறுமய அமைச்சர் சம்பிக்க ரணவக்க
ஹெல உறுமய அமைச்சர் சம்பிக்க ரணவக்க பேசுகையில்,
“விடுதலைப்புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகள் எமக்கு பாரிய வெற்றியை அளித்துள்ளது.
இன்று சர்வதேச சமூகம் எம்மை பாராட்டுகிறது. எதிர்க்கட்சிகள், அரசு யுத்தத்தை கருத்திற் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தைக் கவனத்தில் எடுக்கவில்லை எனக் கூறுகின்றன. தாராள பொருளாதார கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் நாடுகள் கூட இன்று நெருக்கடிக்குள்ளாகியுள்ளன.
‘தி எக்கனொமிக்’ ( The Economic) சஞ்சிகையில், இந்த வருடம் ஆசிய பிராந்தியத்தில் 4 சதவீதம் முதல் 6 சதவீத பொருளாதார வளர்ச்சியை பெற்றுவரும் நாடுகளில் எமது நாடும் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
அன்று ரணில் விக்ரமசிங்க கடைப்பிடித்த தாராள பொருளாதார கொள்கையை, இன்று மகிந்த சிந்தனை கொள்கை வென்றுவிட்டது.
கிராமிய மற்றும் வெளிநாட்டுப் பொருளாதாரத்தில் எமது நாடு வளர்ச்சி கண்டுள்ளது. தேசிய உற்பத்தியை 10சதவீதம் அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று கிழக்கில் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பண்டார நாயக்க, சிறிமாவோ பண்டார நாயக்க ஆகியோர் அரச சேவைகளை வலுப்படுத்தினர். கொழும்புத் துறைமுகம் அமைக்கப்பட்டது.
கிராமிய பொருளாதார வளர்ச்சி 12 சதவீதம் உயர்ந்தது. நாட்டில் கல்வி மற்றும் ஏனைய துறைகளிலும் பல அபிவிருத்திகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மாகாண சபை தேர்தல்களில் வெற்றி எமக்கே. எதிர் காலத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒன்றை நடத்தி அதிலும் நாமே வெற்றி பெறுவோம். நட்டில் நல்ல பல தலைவர்களை எதிர்காலத்தில் உருவாக்குவோம்” என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment