மக்களைப் பலி கொடுப்பதை நாகரிக உலகம் மன்னிக்காது
இராணுவ ரீதியிலான நன்மையை எதிர்பார்த்து மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்த வேண்டாமென்று கிறிஸ்தவ ஆயர்கள் புலிகளிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்கள். யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆயர்களும் இந்த வேண்டுகோளில் கையொப்பம் இட்டுள்ளனர்.
மக்கள் தாம் விரும்பிய இடங்களுக்குச் செல்வதற்கும் அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்துக்கும் புலிகள் எவ்வித கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.
இக்கோரிக்கை ஏற்கனவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட போதிலும் புலிகள் அதற்குச் செவிசாய்க்கவில்லை. இப்போது மதத் தலைவர்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். இதற்காவது புலிகள் செவிசாய்க்க வேண்டும்.
அரச படையினருக்கும் புலிகளுக்குமிடையே மோதல் நடைபெறும் போது இடையில் சிக்கியிருக்கும் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதிருப்பதை முழுமையாக உறுதிப்படுத்துவது சாத்தியமானதல்ல. எனவே, மோதலற்ற பகுதிகளுக்கு மக்களை அப்புறப்படுத்த வேண்டிய தார்மீகக் கடப்பாடு இரு தரப்பினருக்கும் உண்டு. அரச தரப்பு இக் கடப்பாட்டை உணர்ந்து செயற்படுகின்றது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மோதல் நடைபெறும் பகுதிகளிலிருந்து வெளியேறி வவுனியா மாவட்டத்துக்கு வருமாறு அரசாங்கம் மக்களுக்கு அழைப்பு விடுத்தது. வவுனியா மாவட்டத்துக்கு வருபவர்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்திருக்கின்றது.
இதைவிட முல்லைத்தீவில் மோதலற்ற பகுதியாக ஒரு பிரதேசத்தைப் பிரகடனப்படுத்தி அங்கு செல்லுமாறு மக்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கின்றது. ஆனால் புலிகள் இவ்விடயத்தில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறிச் செல்வதற்கு இடமளிக்காமல் அவர்களைப் பலவந்தமாக மோதல் பகுதிகளில் தடுத்து வைத்திருக்கின்றார்கள்.
மக்கள் வெளியேற விரும்பவில்லை என்று புலிகள் கூறிவந்தது உண்மையல்ல என்பது அண்மையில் வெளிப்படையாகத் தெரிந்தது. பாதுகாப்புப் பிரதேசங்களுக்குச் செல்வதற்கு மக்கள் பெருமளவில் முன்வந்தார்கள். இம்மக்கள் மீது புலிகள் தாக்குதல் தொடுத்திருக்கின்றார்கள். புலிகள் மக்களைப் பலவந்தமாகத் தடுத்து வைத்திருக்கின்றார்கள் என்பதையே இது புலப்படுத்துகின்றது.
யுத்தம் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. இதைப் புலிகளும் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த இறுதிக் கட்டத்தில் மக்களை மனிதக் கேடயங்களாகத் தடுத்து வைத்திருப்பதன் மூலம் புலிகள் சாதிக்கப்போவது எதுவுமில்லை. இனிமேல் யுத்தத்தின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. புலிகள் சரணடைந்து தோல்வியை ஏற்றுக்கொள்வதன் மூலம், இவர்களால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஏற்படக்கூடிய அழிவைத் தவிர்க்க முடியும்.
இறுதிவரை போராடுவதென்ற விவேகமற்ற நிலைப்பாட்டைப் புலிகள் மேற்கொள்வார்களேயானால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு அவர்களே முகங்கொடுக்க வேண்டும். அப்பாவி மக்களைப் பலி கொடுப்பது எவ்விதத்திலும் நியாயமாகாது.
மக்களைப் பாதுகாப்பதாகக் கூறிக் களத்துக்கு வந்தவர்கள் மக்களைப் பலிகொடுத்துத் தங்களைப் பாதுகாக்க முயற்சிப்பதை நாகரிக உலகம் மன்னிக்காது.
Thinakaran
0 விமர்சனங்கள்:
Post a Comment