புலிகளின் பாரிய குண்டுத் தொழிற்சாலை சுதந்திரபுரத்தில் கண்டுபிடிப்பு
புலிகளின் பாரிய குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை பாதுகாப்புப் படையினர் நேற்றுக் காலை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
முல்லைத்தீவு சுதந்திரபுரம் மற்றும் சுதந்திரபுரத்திற்கு வடக்கு பகுதிகளில் பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள இராணுவத்தின் 58வது படைப் பிரிவினரே இந்த பாரிய குண்டு தொழிற்சாலையையும் கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
81 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள் மற்றும் அதிசக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகளே இந்த தொழிற்சாலையில் பிரதானமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இங்கிருந்து பெருமளவிலான வெடிமருந்துகள் பெருந்தொகையான உபகரணங்களையும் படையினர் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புலிகளின் பாரிய அச்சகத் தொகுதியை நேற்று முன்தினம் சுதந்திரப்புரத்தில் கைப்பற்றிய இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படைப் பிரிவினரே நேற்று அதிகாலை சுதந்திரப்புர வடக்கு பிரதேசத்திலிருந்து இந்த குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையை கைப்பற்றியுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
புலிகளால் மிகவும் திட்டமிடப்பட்டு பாதுகாப்பான முறையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இந்த குண்டுத் தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து குண்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு இயந்திரங்களையும் படையினர் மீட்டெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
81 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள் மற்றும் கிளேமோர் குண்டுகளுக்கு மேலதிகமான துப்பாக்கிகள் பல்வேறு குண்டுகளுக்கும் பொருந்தும் குண்டுகளின் பாகங்களையும் அதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் வெடிமருந்து வகைகளையும் படையினர் இங்கு கண்டெடுத்துள்ளனர்.
புலிகளால் இந்த குண்டுத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மோட்டார் மற்றும் கிளேமோர் குண்டுகள் புலிகளின் மோதல் நடவடிக்கைகளுக்காக இங்கிருந்தே புலிகள் விநியோகத்திருக்கலாம் என படைத்தரப்பு நம்புவதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இராணுவத்தின் 58 வது படைப்பிரிவினர் தாமரகுளம் பிரதேசத்தில் ஊடுருவி நடத்திய தாக்குதல்களில் புலிகளுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பிரிகேடியர், அந்தப் பிரதேசத்தில் நடத்திய தேடுதல்களின் போது கொல்லப்பட்ட புலிகளின் எட்டு சடலங்களையும் மீட்டெடுத்துள்ளனர்.
குப்பிலான்குளம் மற்றும் தாமரகுளம் பகுதிகளில் நடத்திய மற்றுமொரு தேடுதல் நடவடிக்கையின் போது மேலும் பெருந்தொகையான ஆயுதங்களையும் வாகனங்களையும் படையினர் மீட்டெடுத்துள்ளனர்.
120 மி. மீ. ரக மோட்டார் டியூப் – 05, அதனை வைக்க பயன்படுத்தும் தகடு – 04, 81 மி. மீ. ரக மோட்டார் குண்டு – 08, 81 மி. மீ. ரக மோட்டார் டியூப் – 02, அதனை வைக்க பயன்படுத்தும் தகடு – 08, சிறிய ரக இயந்திர துப்பாக்கி – 01, ரி – 56 ரக துப்பாக்கி – 48, ஜி – 3, ஏ - 3 துப்பாக்கி – 01, கிளேமோர் குண்டு – 02, 60 மி. மீ. ரக மோட்டார் டியூப் – 02, ஆர். பி. ஜி. ஆயுதம் – 01, கெப் ரக வாகனம் – 01, பக்கோ ரக இயந்திரம் – 01, லொறி – 01, ட்ரெக்டர் - 01, மோட்டார் சைக்கிள் – 01 என்பவற்றையும் மீட்டெடுத்துள்ளதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment