வன்னியில் எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் பலி
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் மற்றும் கோம்பாவில் பகுதியிலும் நடத்தப்பட்ட வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 134 தமிழர்கள் பலியாகியுள்ளதுடன் 208 பேர் காயமடைந்துள்ளனர்.
புதுமாத்தளன்
படையினரின் 'பாதுகாப்பு வலயம்' என்ற அறிவிப்பை அடுத்து புதுமாத்தளன் பகுதியில் மக்கள் மிகச் செறிவாக அடைக்கலம் புகுந்துள்ள நிலையில், அவ்வலயத்தில் தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
புதுமாத்தளன் நோக்கி சனியன்று இரவு இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்தும் அப்பகுதி மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்தும் செறிவான ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதில் 12 சிறுவர்கள் உட்பட 78 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 132 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதே பகுதியில் நேற்று ஞாயிறு காலை நடத்தப்பட்ட ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 6 தமிழர்கள் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர். அதே பகுதியில் ஞாயிற்றுக்கிழைமை பிற்பகல் 3:00 மணியளவில் நடத்தப்பட்ட ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள்ளனர்.
அம்பலவன்பொக்கணை
அம்பலவன்பொக்கணை 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதி மீது ஞாயிறு இரவு 7:35 மணியளவில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் ஒரு சிறுவன் உட்பட 5 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு
புதுக்குடியிருப்பு பகுதியில் சனிக்கிழமை இரவு 10:00 மணியளவில் நடத்தப்பட்ட எறிகணைத்தாக்குதலில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பலியாகியுள்ளனர்.இவர்களில் 5 சிறுவர்களும் 4 பெண்களும் அடங்குவர்.
பூநகரியைச் சேர்ந்த இவர்களின் 3 குடும்பத்தினரும் ஒன்றாக இடம்பெயர்ந்து பல இடங்களில் தங்கியிருந்து, கடைசியாக புதுக்குடியிருப்புக்கு வந்து தற்காலிக கொட்டகை கட்டி தரித்திருந்த வேளையில் இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கோம்பாவில்
கோம்பாவில் பகுதியில் சனிக்கிழமை இரவு 10:15 மணியளவில் நடத்தப்பட்ட கொத்துக் குண்டுத் தாக்குதலில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்கால் பகுதியில் சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் 4 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இவர்களின் உடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
முள்ளிவாய்க்கால் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment