பாதுகாப்பு வலயங்களை விட மனிதாபிமான போர் நிறுத்தமே இன்றைய அவசர தேவை
மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் இலங்கை அரசாங்கம் வடக்கில் முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கையானது இன்று அந்தப் பிரதேசத்தில் மனித அழிவுகளையும் அவலங்களையும் தோற்றுவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை இலக்கு வைத்து அவர்களுக்கு எதிராக அரசினால் முன்னெடுக்கப்படும் இந்த மனிதாபிமான நடவடிக்கையானது, இன்று சர்வதேசத்தின் பார்வையில் பல்வேறுபட்ட சந்தேகங்களைத் தோற்றம் பெறச் செய்துள்ளது.
இலங்கை இராணுவத்தினரின் முன்னகர்வு நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளும் உக்கிர மோதலில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு இருதரப்பினரும் முன்னெடுத்துச் செல்லும் ஒருவரையொருவர் வெற்றி கொள்வதற்கான யுத்த நடவடிக்கை காரணமாகக் கொல்லப்படுவது அப்பாவித் தமிழ் மக்களும்தான்.
புலிகளை முற்றாக அழிக்கும் நடவடிக்கை அல்லது இராணுவத்தினரை பின் வாங்கச் செய்யும் தாக்குதல் இரு தரப்பிலிருந்தும் தொடருமானால் வன்னியில் மிஞ்சப் போவது வெறும் புழுதி மணல் பரப்பும் சாம்பல் மேடுகளுமே. இதனைக் கடந்த வார நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. மக்களுக்காகப் போராடுவதாக அல்லது மக்களை மீட்பதாகக் கூறிக்கொண்டு இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள எந்தத் தரப்பினராகவிருந்தாலும் மனிதாபிமானத்தைத் தொலைத்துவிடடுச் செயற்படுவதென்பது மனித நாகரிகமல்ல.
வன்னிக் குறும் பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்து கொண்டிருந்த மக்கள் மீதான தாக்குதலை யார் மேற்கொண்டிருந்தாலும் அது கண்டிக்கத்தக்கதே. தப்பி வந்து கொண்டிருந்த மக்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் காரணமாக பலர் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்ததாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், அப்பாவி மக்கள் மீது தாம் தாக்குதலை நடத்தவில்லையென்று புலிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளைத் தெரிவிப்பதும் மறுப்பறிக்கைகளை விடுப்பதுமான ஒரு நிலை தொடருமானால் தமிழ் மக்களின் துயரத்துக்கு முடிவு கிட்டப் போவதில்லை. இதுபோன்றே மக்களின் குடியிருப்புகள்,வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளதுடன் பலியாவோர், காயமடைவோர் எண்ணிக்கைகளும் நாளாந்தம் உயர்ந்து வருகின்றமையையும் கடந்த வார நிகழ்வுகள் காட்டுகின்றன.
யுத்தத்தின் போதான அப்பாவி மக்களின் இழப்பானது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று. அப்பாவி மக்களின் கொலைக் களமாக மாறியுள்ள இந்த யுத்தத்தின் முடிவில் மிஞ்சப் போவது என்ன? வெறும் நிலப்பரப்புகளைக் கைப்பற்றி அங்கு அபிவிருத்திப் பணிகளை யாரால் யாருக்காக மேற்கொள்ள வேண்டும்? பேயறைந்த வீட்டில் பெருச்சாளிகள்தான் குடியிருக்க முடியும்.
பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து, நோர்வே, சுவீடன் போன்ற நோட்டிக் வலய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கடந்த ஒன்பதாம் திகதி கூடி இலங்கை நிலைவரம் குறித்து ஆராய்ந்ததுடன் வடபகுதியில் இடம்பெறும் மனித இழப்புகள் ஏற்றுக்கொள்ள முடியாதளவுக்கு அளவு கடந்து விட்டதாகவும் சுமார் இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் யுத்த முனையில் சிக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிமிக்க நிலையைத் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்துள்ள இந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், தற்காலிகப் போர் நிறுத்தம் ஒன்றுக்கு அரசாங்கத்தை வலியுறுத்தியுமுள்ளனர். யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இருதரப்பினரும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மதிக்க வேண்டுமெனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுபோன்றே, தொடரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் யுத்த நிறுத்தமொன்றினை மேற்கொள்ளுமாறு அவசர வேண்டுகோளை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் அப்பாவி மக்கள் சிக்கிப் பலியாவது மிகுந்த துயரத்தைத் தருவதாக அழுத்தப்படுத்திக் கூறியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் காரணம் காட்டி பொதுமக்கள் மீது படையினர் அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடாதென சர்வதேச மன்னிப்புச் சபையும் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.
அரசாங்கம் கூறுவது போன்று புலிகளிடமிருந்து மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கைதான் இதுவென்றால்“ அப்பாவி மக்கள் நாளாந்தம் செத்துக்கொண்டிருப்பது எந்த வகையில் நியாயமானது? ஆகவே இவ்வாறான நிலையிலேனும் மனித அழிவுகளைத் தவிர்க்கும் வகையில் தற்போதைய மனிதாபிமான முன்னெடுப்பை உடனடியாக நிறுத்தி "மனிதாபிமானப் போர் நிறுத்தம்' ஒன்றை அரசாங்கம் செய்வதில் என்னதான் தவறுள்ளது? பாதுகாப்பு வலயங்களை விஸ்தரிப்பதோ அல்லது அதிகரிப்பதோ இன்றைய அவசரத் தேவையல்ல.
தனது மக்கள் நலனுக்காக இவ்வாறானதொரு யுத்த நிறுத்தத்தைச் செய்வதன் மூலம் அரசுக்கு எந்தக் கௌரவக் குறைவும் ஏற்படப்÷பாவதில்லை. அத்துடன் யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொள்வதன் மூலம் சர்வதேச ரீதியாகக் கூட அரசுக்கு நற்பெயர் கிடைக்க வாய்ப்புண்டு.
இலங்கை அரசின் இன்றைய பார்வையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றால் அவர்கள் மனிதாபிமானம் கடந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஆகவே அவர்களிடம் பேசி எதனையும் பெறமுடியாது. ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம், ஜனாதிபதி என்ற வகையில் அந்த மக்களை யுத்த அழிவிலிருந்தும் அவலங்களிலிருந்தும் பாதுகாக்க வேண்டியது அரசினது கடமையல்லவா?
தமிழீழ விடுதலைப் புலிகளால் இனி ஒருபோதும் எழுந்திருக்க முடியாதென்றும் அவர்கள் கதை முடிந்து விட்டதாகவும் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இது போன்றே கடல் மார்க்கத்தின் அனைத்து வழிகளும் புலிகளுக்கு மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்த கடற்படைத் தளபதி வசந்த கருணாகொட, பிரபாகரனும் அவரது சகாக்களும் கடலில் விழுவதைத் தவிர வேறு வழியில்லையென்றும் அரசாங்கத் தரப்பால் கூறப்பட்டது.
இவ்வாறு இந்த நாட்டின் இரு படைகளின் தளபதிகளே உறுதிபடக் கூறியிருக்கும் நிலையில் மனிதாபிமான யுத்த நிறுத்தம் ஒன்றைச் செய்யும்÷பாது புலிகள் ஆயுதங்களைக் குவித்து மீண்டும் சக்தி பெறுவார்களோ என்று அரசாங்கம் சந்தேகப்படவோ அச்சமடை யவோ தேவையில்லை.
இது இவ்வாறிருக்க, தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழும் மக்கள் தற்போது உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதிலும் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். ஆயுத மோதல்களில் மட்டுமின்றி பட்டினிச் சாவின் மூலமும் அவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்படும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.
இந்தப் பகுதிமக்களுக்கு அனுப்புவதற்காக உணவுப்பொருட்கள் ஏற்றப்பட்ட 30 லொறிகள் வவுனியாவில் இன்னும் காத்திருப்பதாகவும் பாதுகாப்பு உத்தரவாதம், வழித்துணை போன்றவை கிடைக்காமை காரணமாக அவற்றினை அனுப்ப முடியாதுள்ளதாகவும் தெரிய வருகிறது.
கடந்த வாரம் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் உலக உணவுத் திட்டப் பிரதிநிதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி கண்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதிக்குப் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு எந்த வித உணவுப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படவில்லை. அதே போன்று உலக உணவுத் திட்டத்தின் மூலமான உணவு விநியோகமும் ஜனவரி 16 ஆம் திகதிக்குப் பின்னர் இடம்பெறவில்லையென்ற தகவலும் இப்போது வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் சுமார் மூன்று இலட்சம் மக்கள் இன்று பட்டினிச் சாவினையும் எதிர்நோக்கியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட யுத்த களத்தை பலஸ்தீன காஸா முனைக்கும் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பட்டினிச் சாவை சோமாலியாவுக்கும் ஒப்பிடக் கூடிய ஒரு நிலை தற் போது இங்கு நிலவுகிறதென்றால் அது மிகையல்ல.
0 விமர்சனங்கள்:
Post a Comment