போர்ச் சூழலில் வாழும் மக்களின் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம்?
வன்னிப் பகுதியில் போருக்குள் வாழ்கின்ற மக்களின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறி யாகியிருக்கிறது. ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கடந்த புதன்கிழமை தகவல் வெளியிட்ட போது முல்லைத்தீவில் உள்ள 113,832 மக்களில் 31,500 பேர் அங்கிருந்து வெளியேறி விட்டதாகக் கூறியிருக்கிறார்.
இது புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத் துக்குள் குறைந்தளவு பொதுமக்களே இருப்ப தாகக் காட்டிக் கொள்ளும் அரசாங்கத்தின் முயற்சியேயாகும். முல்லைத்தீவு அரச அதிபரின் கணக்குப்படி கடந்த மாதத்தில் 470,000 மக்கள் அங்கு இருந்தனர். இவர்களில் 35,000 பேர் வரையில் அங்கிருந்து வெளியேறியதாக கணக்கிட்டா லும் இப்போதும் அங்கு வாழும் மக்கள் தொகை 4 இலட்சத்துக்கும் அதிகமாகிறது.
ஆனால் இலட்சக்கணக்கான மக்கள் அங்கி ருப்பதாகவும், மனிதப் பேரவலங்கள் நிகழ்வ தாகவும் தகவல்கள் வெளியே கசிவதை அர சாங்கம் விரும்பவில்லை. காரணம் அது சர்வ தேசத் தலையீடுகளுக்கு காரணமாகிவிடும் என்ற அச்சமேயாகும். அதேவேளை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறி வந்த மக்களின் பாதுகாப்பும் சரி இன்னமும் போர்ச் சூழல் பகுதிகளில் வாழுகின்ற மக்களின் பாதுகாப்பும் சரி உறுதிப்படுத்தப்படாத நிலையே காணப்படுகிறது.
வன்னிக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களின் பாதுகாப்புக்கு யாருமே உத்தரவா தம் கொடுக்க முன்வராத நிலையே உள்ளது. அங்கு இருக்கின்ற மக்களின் உயிருக்கு உத்தர வாதம் கொடுக்க முடியாதென்று அரசாங்கம் எப்போதோ சொல்லிவிட்டது. அதேவேளை பாதுகாப்பு வலயம் ஒன்றை இரண்டு தடவைகள் அரசாங்கம் அறிவித்திருந் தாலும் அதற்குள்ளேயும் தாக்குதல்கள் நடக் கின்றன. பொதுமக்கள் பெருமளவில் கொல் லப்பட்டிருக்கிறார்கள், காயமடைந்திருக்கிறார்கள்.
உண்மை நிலையை வெளியிடக் கூடிய பக் கச் சார்பற்ற தரப்புகளை அங்கிருந்து வெளி யேற்றுவதில் அரசாங்கம் வெற்றி கண்டிருக்கிறது. கடைசியாக அங்கிருந்த சர்வதேச செஞ்சிலு வைக் குழு அதிகாரிகளும் வெளியேறிச் சென் றிருக்கின்றனர். ஆனால் அவர்கள் மீளவும் அங்கு செல்வார்கள் எனச் சொல்லப்பட்டாலும் அதற்கு உத்தரவாதம் கிடைக்குமா என்பது சந்தேகமே.
ஏற்கனவே தொண்டர் நிறுவனங்களை, அர சாங்க அதிகாரிகளை அங்கிருந்து வெளியேறு மாறு பணித்த அரசாங்கம் இப்போது வைத்தி யர்கள், தாதிமாரையும் வெளியேறிச் செல்லு மாறு கூறியிருக்கிறது. தற்போது வன்னியில் எந்தவொரு வைத்திய சாலையுமே இயங்க முடியாத கட்டத்தில் இருக்கின்ற சூழலில், புதுமாத்தளன் பகுதியில் மரங்களின் கீழும், கூடாரங்களின் கீழும்தான் மருத்துவர்கள் சிகிச்சை வழங்கிக் கொண் டிருக்கின்றனர்.
நூற்றுக்கணக்கான காயப்பட்டவர்கள் எந்த அடிப்படை மருத்துவ வசதிகளும் இல்லாமல் மரணத்தைத் தழுவிக் கொண்டிருக்கின்ற அவ லம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மருத்துவர்கள், தாதிமாரை வெளியேற விடுக்கப்பட்ட உத்தரவு எத்தகைய அவலத்துக்குள் மக்களைத் தள்ளிவிடும் என்ப தைக் கற்பனை கூட செய்து பார்க்க முடியாதுள்ளது.
தினமும் பொதுமக்கள் பெருமளவில் கொல் லப்பட்டதாக, காயப்பட்டதாக செய்திகள் வந்த போது அது புலிகளின் பொய்யான பிரசாரம் என்று மறுத்திருந்தது அரசாங்கம். ஆனால் இன்று காயமுற்ற பொதுமக்கள் நூற்றுக்கணக்கைக் கடந்து ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள், அரச கட்டுப்பாட்டுப் பகுதி யில் உள்ள வைத்தியசாலைகளுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் காயமுற்றது ஷெல் தாக்குதல்களி லும் விமானத் தாக்குதல்களிலும் தான். பாது காப்பு வலயத்துக்குள்ளேயே நாளொன்றுக்கு டசின் கணக்கான மக்களின் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. முதலில் இருட்டுமடு பாதுகாப்பு வலயத்தை அறிவித்த அரசாங்கம் இப்போது முல்லைத் தீவுக் கடலோரத்தை அண்டியதாக புதுமாத்த ளன் தொடக்கம் வெள்ளமுள்ளிவாய்க்கால் வரையான புதிய பாதுகாப்பு வலயத்தை அறி வித்திருக்கிறது. பாதுகாப்பு வலயங்களே மக் களை ஓட ஓடத் துரத்துகின்றன.
முன்னர் இருட்டுமடு பாதுகாப்பு வலயத்தை தேடிஓடிய மக்கள், இப்போது அங்கிருந்து புதுமாத்தளன் பாதுகாப்பு வலயம் நோக்கி ஓடவேண்டிய நிலை வந்திருக்கிறது. மக்களை அங்கிருந்து இங்கே போகச் சொன்ன அரசாங்கம், இடம்பெயர்ந்து செல்லும் மக்களின் பாதுகாப்புக்காவது உத்தரவா தம் கொடுக்கவில்லை. இவர்கள் வழியில் அவ லங்களைச் சந்திக்கின்ற ஆபத்துகள் இருக்கின்றன.
அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோத் தாபய ராஜபக்ஷ ஒரு விடயத்தைக் கூறியிருந் தார். பொதுமக்கள் அவலப்படுவதாகக் கூறி போரை நிறுத்த முயற்சிகள் நடப்பதாகவும், ஆனால் அரசாங்கம் போரை ஒரு போதும் நிறுத்த மாட்டாதென்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதாவது முன்னர் இந்தப் போரை மக்களை விடுவிப்பதற்கான "மனிதாபிமானப் போர்' என்று கூறிய அரசாங்கம் இப்போது இதை பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான போர் என்கிறது. மக்களை விடுவிக்கின்ற மனிதாபிமானப் போராக இது இருந்திருப்பின், அவர்கள் பாதிக் கப்படுகின்ற நிலை ஏற்பட்டபோது நிறுத்தப் பட்டிருக்க வேண்டும். அதனால் தான் அரசாங்கம் இப்போது எந்தக் கவலைகளும் இன்றி போரை நடத்திக் கொண் டிருக்கிறது.
இந்தப் போரில் மக்களுக்கு ஏற்படும் இழப் புகளைக் குறைப்பதற்காக பாதுகாப்பு வல யங்கள் அறிவிக்கப்பட்டாலும் அது எந்தள வுக்கு மக்களின் நலனுக்குப் பயன்பட்டிருக்கிற தென்பதே கேள்வி. இரண்டு தரப்புமே இந்தப் பாதுகாப்பு வல யத்தை இராணுவ நோக்கங்களுக்காகப் பயன் படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
புலி கள் வலுவாக கனரக போராயுதங்களை நிறுத் தியிருந்த இடங்களை உள்ளடக்கியதாக அரச தரப்பு பாதுகாப்பு வலயத்தை ஒருதலைப் பட்சமாக அறிவித்து விட்டு, புலிகள் அங்கி ருந்து பீரங்கித் தாக்குதல்களை நடத்துவதாகக் கூறியது. அதேவேளை பாதுகாப்பு வலயங்களுக்குள் பீரங்கித் தாக்குதல்களை நடத்தி பொதுமக்க ளைக் கொல்வதாகக் கூறினர் புலிகள்.
ஆக, இருதரப்பு இராணுவ நலன்களுக்குள் ளேயும் மக்களின் பாதுகாப்பு என்ற விடயம் நசுங்கிப் போயுள்ளது. கடும் சண்டைகள் தொடர்வதால் உணவு விநியோகம் கடந்த ஜனவரி 29ம் திகதிக்குப் பின்னர் தடைப்பட்டிருப்பதாகவும், இதனால் பட்டினிச்சாவு அவலங்கள் ஏற்படலாம் என் றும் கூறியிருக்கிறது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்.
ஏற்கனவே ஐ.நா.வின் தொண்டர் நிறுவனங் கள் வெளியேறி விட்டன. அரச நிர்வாகம் எப் போதோ செயலிழந்து விட்டது. அதிகாரிகள் எவரும் பொறுப்பில் இல்லை. இப்போது உணவு விநியோகம் சிக்கலாகிப் போயிருக்கிறது.
எதற்காக உணவு விநியோகங்கள் தடுக்கப் படுகின்றன?
உணவை ஆயுதமாகப் பயன் படுத்தி அங்கு பட்டினி நிலையைத் தோற்று வித்து புலிகளை அழிக்க அரசாங்கம் முனைகி றதா என்ற கேள்வி ஏற்படுகிறது. அதேவேளை வன்னி நிலைவரங்கள் தொடர்பாக உண்மைத் தகவல்களை வெளி யிட்ட ஐ.நா மீதும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு மீதும் அரசாங்கம் தனது கோபத்தை வெளிக்காட்டியிருக்கிறது. என்னதான் மக்கள் சேவைக்காக சர்வதேச செஞ்சிலுவைக் குழு மற்றும் ஐ.நா. அதிகாரி கள் செயற்பட்டாலும் அவர்களுக்குப் புலி முத் திரையிடும் முயற்சிகளே நடக்கின்றன.
இதன் காரணமாக பொதுமக்களின் பாது காப்பை உறுதிப்படுத்த சர்வதேச தொண்டர் நிறுவனங்களால் முடியாது போயிருக்கிறது. இந்த நிலையில் அரச கட்டுப்பாட்டுப் பகு திக்கு இடம்பெயர்ந்த மக்களுடன் சென்ற தற் கொலைக் குண்டுதாரி ஒருவர் நடத்திய தாக்கு தல் அல்லது அதனைத் தொடர்ந்து இடம்பெற் றதாகக் கூறப்படும் அனர்த்தங்களின் போது பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்புகள் ஏற் பட்டிருக்கின்றன.
அதேவேளை குரவில் உடையார்கட்டுப் பகுதியில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 19 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் மற் றும் பெருமளவானோர் காயமுற்ற நிகழ்வு என் பன மக்களின் பாதுகாப்பையிட்டு அக்கறை கொள்ளப்படாத நிலையையே காட்டுகின்றன.
இரண்டு தரப்புமே பொதுமக்களைக் கொல்வதாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதில் அக்கறையாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்த இரண்டு தரப்புமே தவறி விட்டதை அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடாதிருப் பதைத் தான் அண்மைய இழப்புகள் உறுதி செய்கின்றன.
அதேவேளை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக் குள் வந்த மக்கள் வெளியுலகத் தொடர்புகள் இன்றி முகாம்களில் அடைக்கப்பட்டு சுற்றுப் புறங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட் டிருக்கிறது.
காடுகள் வழியாக நாலாபுறமும் சிதறி ஓடி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருகின்ற மக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? அவர் கள் எவ்வாறான கண்ணோட்டத்துடன் பார்க் கப்படுகிறார்கள் என்பதெல்லாம் முக்கியமாக ஆராயப்பட வேண்டிய விடயங்கள்.
ஏற்கனவே 31,500 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ள போதும் அவர்கள் வெளியுலகத் தொடர்புகள் இல்லா மல் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்ற அவல நிலை காணப்படுகின்றது.
இந்த மக்களின் பாதுகாப்பு பற்றி ஆராய ஊடகங்களுக்கான கதவுகள் திறக்கப்படாதிருக் கும் வரை இந்த அச்சம் நிலைக்கவே செய்யும். அனைவரும் வாருங்கள் அடைக்கலம் தருகிறோம். பாதுகாப்பான வாழ்வு இருக்கிறதென்று அறிவித்த அரசாங்கம், அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்கிறதா என்பதை அறிந்து கொள்ளாமல் வன்னியில் போர்ச்சூழலில் வாழுகின்ற மக்கள் வெளியேறி வரத் துணியமாட்டார்கள்.
அதைவிட வன்னியில் இருந்து வரும் மக்களை வவுனியா, மன்னாரில் திறந்தவெளிச் சிறைச்சாலை போன்ற, சுற்றிவரப் பாதுகாக்கப்பட்ட சில கிராமங்களை உருவாக்கி, அங்கு 3 வருடங்கள் தங்க வைப்பதற்கும் முயற்சிகள் நடப்பதாக தெரிய வருகிறது.
இது பொதுமக்களை வடிகட்ட அரசாங்கம மேற்கொள்கின்ற முயற்சியாக இருப்பினும் மக்களுக்குப் பெரும் அச்சத்தையும் நிம்மதியற்ற நிலையையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
வன்னியில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த மக்களும் சரி இன்னமும் அங்கேயே வாழுகின்ற மக்களும் சரி பொதுமக்களாகப் பார்க்“கப்படாத நிலை இருப்பதாகவே தெரிகிறது. சில அமைச்சர்களே இதை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்கள்.
இந்த மோசமான பார்வையும், இப்போதைய அணுகுமுறைகளும் பொதுமக்களின் பாதுகாப்பு என்பது இரண்டு கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும் ஒரே மாதிரியானவை தானா என்ற கேள்வியை எழுப்ப வைத்திருக்கிறது.
இந்த நிலை என்று மாறும்? இதற்கு யார் உத்தரவாதம் கொடுப்பது? ஐ.நாவும் உலக நாடுகளும் எட்டி நின்று உதவிப் பொருட்களை அனுப்புவதோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில் மக்களின் பாதுகாப்பை வெறும் காகித அறிக்கைகளால் உறுதிப்படுத்த முடியாது. இதை உலகம் உணர்ந்து கொள்ள எவ்வளவு காலம் எடுக்கும் என்பதே இன்றுள்ள முக்கியமான கேள்வி.
0 விமர்சனங்கள்:
Post a Comment