சாலை பகுதியை சுற்றிவளைத்து படையினர் தாக்குதல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சாலை பகுதியை நோக்கி படையினர் தீவிர முன்னகர்வு முயற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி முழுவதும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல்களும் தீவிரமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவிக்கின்றது.
இதில் புலிகள் தரப்பில் 14 உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக அவ்வியக்கத்தினரது தகவல் பரிமாற்றங்களின் போது தெரியவந்துள்ளது. அத்துடன் இரு தரப்பு மோதலில் படைத்தரப்புக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் இரு தரப்புக்குமிடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இராணுவத்தினருக்கு உதவும் வகையில் விமானப் படையினரது குண்டுவீச்சு விமானங்களும் தாக்குதல்களை நடத்தி ஒத்துழைத்ததாகவும் ஊடக நிலையம் தெரிவித்தது.
இது தொடர்பில் பாதுகாப்புக்கான ஊடக நிலையம் மேலும் கூறியதாவது
சாலை மேற்குப் பகுதியினூடாக முன்னகர்வு முயற்சியினை மேற்கொண்ட இராணுவத்தின் 55ஆவது மற்றும் 58ஆவது படையணியினர் நேற்று அதிகாலை முதல் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியின் பயனாகவே அப்பகுதி முழுவதும் தற்போது சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன் போது படையினர் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு புலிகள் நடத்திய பதில் தாக்குதலை அடுத்து மோதல் உக்கிரமடைந்துள்ளது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு புதுக்குடியிருப்பு ராமநாதபுரம் போன்ற பகுதிகளிலும் இரு தரப்புக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதனை அடுத்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது புலி உறுப்பினர்களின் இரு சடலங்கள் உட்பட அயுதங்கள் பலவும் மீட்கப்பட்டன. அத்துடன் கரும்புலிகளின் தற்கொலைப் பிரிவினரின் முகாம் ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் முல்லைத்தீவு களப்புக்கு அருகில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் இலக்கொன்றின் மீது விமானப் படைக்குச் சொந்தமான மிக் 27 ரக தாக்குதல் விமானங்கள் குண்டுகளை விசித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இதில் புலிகளின் ராடார் மத்திய நிலையமொன்று முற்றாக அழிவடைந்துள்ளதாக தராக்குதலில் ஈடுபட்ட விமானப் படையினர் உறுதி செய்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment