குருத்திலேயே கருகி விழும் எமது எதிர்கால சந்ததி
மனிதாபிமான நடவடிக்கையென்ற பெயரில் வன்னியில் இடம்பெற்றுவரும் மனித நேயமற்ற இராணுவ நடவடிக்கைகள், ஷெல், விமானத்தாக்குதல்களினால் தமது எதிர்கால சந்ததியொன்று குருத்திலேயே கருகி விழும் கொடூர நிகழ்வுகளை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கும் கையறு நிலையில் இன்று தமிழினம் உள்ளது.
வன்னியில் தினமும் இடம்பெறும் ஷெல், விமானத்தாக்குதல்கள், பல்குழல் பீரங்கித் தாக்குதல்களினால் கொத்துக் கொத்தாக செத்து விழும் மனித உடல்களில் அரைவாசிக்கும் அதிகமானவை பச்சிளம் பிஞ்சுகளும் பால் குடி மறவா குழந்தைகளுமாகவிருப்பது எந்தவொரு நாட்டிலும் இடம்பெறாத கொடூரமாகும்.
ஆனால், இந்தக் கொடூரம், வம்சவிருத்திக் கருவறுப்பு, இனவிகிதாசாரத்துக்கு எதிர்காலத்தில் உலை வைக்கும் திட்டமிட்ட செயல் வன்னி மண்ணில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாக நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கருவறுப்பை மனித உரிமைகளின் உச்சாணிக் கொப்புகளாக தம்மை தம்பட்டம் அடித்துக் கொள்ளும் நாடுகள், அமைப்புகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன
ஒரு குழந்தை பிறந்து விட்டால் அதுவும் ஆண் குழந்தை பிறந்து விட்டால் தமது பெயர் சொல்லப் பிறந்த பிள்ளையாக, தமது வம்சத்தின் வித்தாக பெருமிதத்துடன் கொண்டாடும் எமது இனம், இன்று தமது எதிர்கால சந்ததியை, வம்ச விருத்தி வித்துகளை பூவும் பிஞ்சுமாக, கொத்துக் கொத்தாக ஷெல்களுக்கும் விமானக் குண்டு வீச்சுகளுக்கும் இரையாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
வன்னியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 733 பேர் படுகொலை செயப்பட்டுள்ளதாக கடந்த 5 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அத்துடன் 2,615 பேர் படுகாயப்படுத்தப்பட்டதாகவும் இந்த படுகொலை, படுகாயம் தொடர்பான ஆதாரபூர்வ ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஒரு வாரத்தில் கொல்லப்பட்ட 733 பேரில் 200 க்கு மேற்பட்டோர் குழந்தைகளும் சிறுவர்களுமென தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, காயப்பட்ட 166 பேரில் 57 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று காயப்பட்ட 2,615 பேரிலும் பெருமளவானோர் சிறுவர்களும் பெண்களுமாவர். வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளினால் அதிகளவான சிறுவர்கள் கொல்லப்படும் அதேவேளை, பலர் காயப்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு காயப்பட்டவர்களில் அதிகமானோர் கை, கால்களை இழந்து ஊனமடைந்திருப்பதுதான் கொடுமையிலும் கொடுமையானது.
ஷெல் வீச்சுகள், விமானக் குண்டு வீச்சுகளில் சிக்கிய சிறுவர்களில் ஏராளமானோர் இருகைகளையும் இருகால்களையும் இழந்தவர்களாகவே காணப்படுகின்றனர். ஆகக் குறைந்தது ஒரு கையையோ, ஒரு காலையோ இழக்காத சிறுவர்கள் இல்லையென்று கூறுமளவுக்கு நிலைமை பயங்கரமாகவுள்ளது.
இச்சிறுவர்களில் பலர் தா, தந்தையென இருவரையோ அல்லது யாராவது ஒருவரையோ இழந்தவர்களாகவேயுள்ளனர். சில வேளைகளில் உயிருடன் இருக்கும் தா, தந்தையர் கூட கை,கால்களை இழந்தவர்களாக அல்லது படுகாயமடைந்தவர்களாகவே உள்ளனர். சில குடும்பங்கள் ஒருவர் கூட மிஞ்சாது முற்றாக அழிக்கப்பட்டுமுள்ளன.
படுகாயமடைந்த சிறுவர்களில் பெருமளவானோர் தா, தந்தையரோ, உறவினரோ இன்றி தனித்து விடப்படுகின்ற அவலமும் இடம்பெறுகின்றது. சில சிறுவர்களுக்கு தமது பெற்றோர் உயிருடன் இருக்கின்றனரா, இல்லையாயென்பது தெரியாது. அதேபோல் பெற்றோருக்கு தமது குழந்தைகள் உயிருடன் இருக்கின்றனரா, இல்லையா என்பது தெரியாது.
விமானக்குண்டு வீச்சுகள், ஷெல் தாக்குதல்கள் இடம்பெறும் போது அதற்குள் சிக்கிக் கொள்ளும் குடும்பங்கள் சின்னா பின்னமாகின்றன. பலர் கொல்லப்படுகின்றனர் சிலர் தப்பிக் கொள்கின்றனர், தந்தை, தா இருக்க குழந்தைகள் பலியாகின்றனர். குழந்தைகள் இருக்க தந்தை, தா பலியாகின்றனர். சிலவேளைகளில் குடும்பமே பலியாகிப் போகிறது.
சிறுவர்கள் கை,கால்களை இழந்து ஊனமடைவதைப் போல் தா, தந்தையரை இழந்து அநாதைகளாகவும் மாறுகின்றனர். அத்துடன் தாக்குதல்களுக்குள் சிக்கிக் கொண்ட சிறுவர்கள் பலர் அதிர்ச்சி காரணமாக உடல், உளநிலை பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். சில சிறுவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்.
வன்னியில் இடம்பெறும் கடும் மோதல்களினால் தொடர்ந்தும் அதிகளவான சிறுவர்கள் கொல்லப்படவோ அல்லது காயமடையவோ நேரிடுவதாகக் கூறியுள்ள ஐ.நா.வின் சிறுவர்கள் நல அமைப்பான "யுனிசெப்' சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மோதல்களில் சம்பந்தப்பட்ட தரப்பினரை கேட்டுள்ளது.
ஆனால், வன்னியில் சிறுவர்களின் நிலை மோசமாகிக் கொண்டே செல்கின்றது. இடைவிடாது இடம்பெறும் ஷெல் தாக்குதல்கள், விமானக் குண்டுவீச்சுகளினால் நாளொன்றுக்கு சராசரியாக 50இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்படுகின்றனர். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயப்படுகின்றனர். பலர் உடல் அங்கங்களை இழக்கின்றனர்.
தாக்குதலுக்கிலக்காகி உயிருக்குப் போராடுபவர்களைக் கூட தூக்கிச் செல்லவோ அல்லது மருத்துவமனைகளில் சேர்க்கவோ ஆட்களுமில்லை, மருத்துவமனைகளும் இல்லை. ஒவ்வொருவரும் தமது உயிரைப் பாதுகாப்பதற்காக நாயோட்டம் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு இடமாக அலைந்து கொண்டிருக்கின்றனர்.
வன்னியில் இன்று இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளில் வீதிக்கு வீதி மனித உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. ஆடு,மாடுகளைப் போல் மனிதர்கள் வீதிகளில் செத்துக்கிடக்கின்றார்கள். அவர்களைத் தூக்கி அடக்கம் செயவோ அல்லது யாரென அடையாளம் காணவோ எவருமில்லை. ஆடம்பரமாக வாழ்ந்தவர்கள்கூட அநாதைப் பிணங்களாக வீதிகளிலும் பற்றைக் காடுகளிலும் சிதறிக் கிடக்கின்றனர்.
காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க வசதியின்றி மருத்துவமனைகளும் மருத்துவர்களும் திண்டாடுகின்றனர். குவியல் குவியலாக கொண்டுவரப்படும் உடல்களையும் காயப்பட்டவர்களையும் பார்த்துப் பார்த்து மருத்துவர்கள் கூட விரக்திநிலையில் காணப்படுகின்றனர். உயிர் பிழைக்க முடிந்தவர்கள் கூட மருந்து வசதியில்லாததால் உயிரிழக்கின்றனர்.
பல சிறுவர்கள் தினமும் உயிரிழந்து வரும் அதேவேளை, அங்குள்ள ஏனைய சிறுவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் காணப்படுகின்றனர். "கிபிர்' விமானங்களின் இரைச்சலைக் கேட்டாலே வீரிட்டு அலறியபடி அங்கு மிங்குமாக ஒடி ஒளிந்தும் பதுங்கு குழிக்குள் பதுங்கியும் இருக்கும் காட்சி பார்ப்பதற்கு கொடுமையானது.
வன்னியல் இன்று பல குடும்பங்கள் அவர்களின் வம்சாவளி இன்றி முற்றாகவே அழிக்கப்பட்டுள்ளன. சில குடும்பங்கள் தமக்கிருந்த ஒரே வம்சத்தையும் இழந்துவிட்டு பித்துப் பிடித்தவர்கள் போல் அலைந்து கொண்டிருக்கின்றனர். தன்னைக் காப்பாற்றுமாறு கதறி தாயைக் கட்டியணைக்கும் குழந்தை மறுவிநாடி சிதறிக் கிடப்பதைப் பார்த்து மனம் பேதலித்துப்போயுள்ள தாமார்கள் வன்னியில் தற்போது ஏராளமாகவுள்ளனர்.
போர் தர்மத்தின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படவேண்டிய எந்தவொரு நடைமுறையும் வன்னியில் போர் முனையில் பின்பற்றப்படவில்லை. பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்படுகின்றனர். மருத்துவமனைகள், பாடசாலைகள், அகதிமுகாம்கள், பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்கள் துவம்சம் செயப்படுகின்றன. மனிதாபிமான நிறுவனங்கள் தாக்கப்படுகின்றன. உணவு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. சர்வதேச ரீதியில் தடைசெயப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வன்னி மண் தற்போது மனிதப் புதைகுழியாக மாறிவருகின்றது. அங்குள்ள மக்கள் நடைபிணங்களாக்கப்பட்டுள்ளனர். போரில் சிக்கி சிறுவர்களும் அவர்களின் எதிர்காலமும் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றது.
இந்தக் கொடூரங்களை, அநியாயங்களை வெளிக்கொண்டுவர வேண்டிய ஊடகங்கள் சுயமாகவே தமது வாக்குப் பூட்டுப் போட்டுள்ளன.
முன்னைய காலங்களில் 4,5 பொதுமக்கள் உயிரிழந்தாலே தலைப்புச் செதியாக வெளியிடும் தென் பகுதி தமிழ் ஊடகங்கள் இன்று ஒரே நாளில் 300 பொதுமக்கள் கொல்லப்பட்ட செதியைக்கூட சிறிய அளவில் போடுமளவுக்கு சுய தணிக்கையில் ஈடுபடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இன்று சகல தரப்பினராலும் கைவிடப்பட்ட, கவனிக்கப்படாத, பாவப்பட்ட ஜென்மங்களாக மரணம் மலிந்த வன்னி மண்ணில் மக்கள் மரணத்தோடு போராடுகின்றனர். இங்கு எதிர்கால சந்ததியொன்று திட்டமிட்டு கருவறுப்பு செயப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர்களின் மரண ஓலம் உலகெங்கும் கேட்கின்ற போதும் கைகொடுத்துக் காப்பாற்றிவிட எவர் மனதிலும் ஈரம் இல்லை.
தாயகன்
0 விமர்சனங்கள்:
Post a Comment