'உலக நாயகனே': மஹிந்தவை பாராட்டிய அகாசி
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாசி, ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவை சந்திக்கச் சென்றபோது கைகளைக் குலுக்கி “நீங்களே உலக நாயகன்” என வாழ்த்தியுள்ளார்.
பதிலுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் காலத்தில் பொதுமக்களுக்கு ஜப்பான் வழங்கிய உதவிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
மோதல்களில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அகாசி, அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கான நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் கொண்டுசெல்லப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
வன்னி மோதல்களில் பொதுமக்களுக்கென பாதுகாப்புப் பிரதேசத்தை இராணுவத்தினர் உருவாக்கியிருப்பது குறித்து அகாசிக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, பாதுகாப்புப் பிரதேசத்துக்குப் பொதுமக்களைச் செல்லவிடாது விடுதலைப் புலிகள் மறிப்பதாகக் கூறினார்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைப்பதாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையெனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த விடயம் குறித்து எதிர்க்கட்சித் தலைவருடன் முடிந்தால் கலந்துரையாடி அவரின் உதவியைப் பெற்றுத் தருமாறு அகாசியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தியமைக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்பட்டால் அதனை, அப்படியே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கத் தயாரெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அகாசியிடம் கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment