கடல்வழியாக மட்டுமே வன்னி மக்களுக்கு பொருட்களை அனுப்ப முடியும் : கோத்தபாய ராஜபக்ஷ
விடுதலைப் புலிகள் இயக்கமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குள் மட்டுமே முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தையாவது பாதுகாத்துக் கொள்ளும் வகையில் கடந்த 10 தினங்களுக்குள் புலிகள் இயக்கத்தினரால் நடத்தப்படும் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆயினும் இந்தத் தாக்குதல்கள் படையினரால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன. எனவே அங்குள்ள அப்பாவிப் பொதுமக்களைப் பணயமாக வைத்திருக்கும் முயற்சியில் புலிகள் தீவிரமாகியுள்ளனர்” என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
“கடந்த இரு வார காலப்பகுதியில் அரச கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருந்து புலிகளின் தாக்குதல்களுக்கு மத்தியிலும் 30ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி வந்துள்ளனர். தற்போதும் வந்துகொண்டிருக்கின்றனர்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்குமிடத்து அங்கு லட்சக்கணக்கான மக்கள் வாழ முடியாது என்பது தெளிவாகிறது. தற்போது 30ஆயிரம் பேர் வரை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளதால் மேலும் 70ஆயிரம் பேர் வரையானோரே அங்கு இருக்கக் கூடும் என நாம் எதிர்பார்க்கிறோம்.
அம்மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எம்மால் கடல்வழியாக மட்டுமே தற்போது அனுப்பி வைக்க முடியும்.
அரசாங்கத்துக்கு எதிராக விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கக் கூடிய மிகப்பெரிய குற்றச்சாட்டே படையினரால் பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர் என்பதாகும்.
சர்வதேசத்தின் அனுதாபத்தினைப் பெற்றுக் கொள்வதற்காகவே அவர்கள் இவ்வகையான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆயினும் கடந்த 2 வருட காலத்தில் படையினரால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமானப் போர் நடவடிக்கையின் போது பொதுமக்கள் எவரும் பாதிக்கப்படவில்லை.
எதிர்காலத்திலும் அவ்வாறான பாதிப்புகள் ஏற்படாது. அதற்காகவே பாதுகாப்பு வலயங்களைப் பிரகடனப்படுத்தினோம்.
மேற்படி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி வரும் பொதுமக்களை வவுனியாவுக்கு அழைத்து வருதல், தற்காலிக முகாம்களில் தங்க வைத்தல், அவர்களுக்கான உணவு மற்றும் சிகிச்சைகள் வழங்கல் போன்றவற்றை படையினர் சிறந்தமுறையில் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டே வருகின்றன.
படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள பிரதேசங்களில் மக்கள் குடியேற முடியும் என்று அப்பிரதேச நிலங்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதத்தினை வழங்கிய பின்னரே தற்போது தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவர்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment