பாமக கூட்டத்தில் மேடை சரிந்தது - ராமதாஸ் காயம்
சென்னை: இலங்கை தமிழர்கள் தாக்கப்படும் சம்பவத்தை கண்டித்தும், போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் சென்னை அம்பத்தூரில் நடந்த பாமக கூட்டத்தில் மேடை திடீரென சரிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் லேசான காயத்துடன் தப்பினார்.
பாமக சார்பில் இலங்கை தமிழர்கள் தாக்கப்படும் சம்பவத்தை கண்டுத்தும், போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் அம்பத்தூரில் நேற்று இரவு மாவட்ட செயலாளர் கே.என்.சேகர் தலைமையில் பொதுக் கூட்டம் நடந்தது.
இதில் கட்சி நிறுவனர் ராமதாஸ், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், ஏ.கே.மூர்த்தி எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்,
முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்தால் தமிழர் பிரச்சினை உலகமெங்கும் பற்றி எரிகிறது. நாளை நடைபெறும் வேலை நிறுத்த போராட்டம் யாருக்கும் எதிரானது அல்ல. தண்ணீர், பால், மின்சாரத்துறைகளும், மருந்துக்கடைகளும் இயங்கும்.
போராட்ட தினத்தன்று யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். யாரும் வன்முறையில் ஈடுபடவேண்டாம். அனைவரும் சும்மா இருந்தாலே போதும். அதுவே, நாம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதைப் போலாகும் என்றார் ராமதாஸ்.
கூட்டத்தில் ராமதாஸ் பேசி முடித்தவுடன், வேறு கட்சிகளில் இருந்து விலகி பாமகவில் இணைவதற்காக் மதுரவாயல், நெற்குன்றம் பகுதிகளை சேர்ந்த சுமார் 250 இளைஞர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.
அவர்கள் தாங்கள் ஏற்கனவே வைத்திருந்த கட்சிகளின் அடையாள அட்டையை ஒப்படைத்து விட்டு ராமதாசிடம் இருந்து பாமக அடையாள அட்டையை பெறுவதற்காக அனைவரும் ஒருவரை ஒருவர் முந்தி கொண்டு மேடைக்கு வந்தனர்.
இதையடுத்து அதிக பாரத்தை தாங்கமுடியாமல் மேடை சரிந்து விழுந்தது. மேடையில் இருந்த அனைவரும் கீழே விழுந்தனர்.
இதில் ராமதாசுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ராமதாசை உடனே கைத்தாங்கலாக அழைத்து சென்று காரில் ஏற்றி வழியனுப்பி வைத்தனர்.
http://thatstamil.oneindia.in/news/2009/02...-collapses.html
0 விமர்சனங்கள்:
Post a Comment