ஜனாதிபதியின் சுதந்திர தின உரை குறித்து...
இலங்கையின் 61 ஆவது சுதந்திர தினக்கொண்டாட்டங்களின் பிரதான வைபவம் நேற்றைய தினம் கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றபோது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அங்கிருந்து நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரை போர் முனையில் இராணுவ வெற்றிகள் குறித்து அவர் சமாளிக்க முடியாத பெருமிதத்தில் மிதக்கிறார் என்பதை தெளிவாக வெளிக்காட்டி நிற்கிறது. அவரது உரை அத்தகையதொன்றாகவே அமைந்திருக்கும் என்பது எதிர்பார்க்கப்படாததல்ல. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து இலங்கை விடுபட்ட பிறகு கடந்தோடி விட்ட 6 தசாப்த காலகட்டத்தில் வருடாந்தம் சுதந்திர தினம் பெப்ரவரி 4 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வந்திருக்கின்ற போதிலும், நேற்றைய கொண்டாட்டங்களே உண்மையில் அர்த்தமுடைய சுதந்திரத்தை பிரதிபலிப்?ப?வை?யாக அமைந்திருந்தன என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும். குறிப்பாக, தேசிய இனப்பிரச்சினை உள்நாட்டு போராக மாறிய கடந்த மூன்று தசாப்த காலத்தில் இலங்கையர்கள் சுதந்திரத்தையும் இறைமையையும் இழந்திருந்தார்கள் என்பதே அவர் மக்களுக்கு கூற முற்பட்ட செய்தியாகும்.
உள்நாட்டுப் போரே ஜனாதிபதி ராஜபக்ஷ பிரிவினைவாத பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்றே தனதுரையில் வர்ணித்ததைக் காணக்கூடியதாக இருந்தது. வெல்லப்பட முடியாதது என்று பலரால் திரும்பத்திரும்ப வர்ணிக்கப்பட்ட "பயங்கரவாத சக்திகளை' இன்னும் சில தினங்களில் தீர்க்கமான முறையில் தோற்கடித்து விட முடியும் என்று நம்பிக்கை வெளியிட்ட ஜனாதிபதி தற்போது நாட்டில் "கௌரவமான சமாதானம்' உதயமாகிக்கொண்டிருப்பதாகவும் ஏனையநாடுகளில் மக்கள் அனுபவிக்கின்ற சமாதானத்தையும் விட இது மகத்தானது என்றும் தனித்துவமானது என்றும் கூறிப் பெருமைப்பட்டிருக்கிறார். அத்துடன் நின்றுவிடாமல் போர் காரணமாக கடந்த கால்நூற்றாண்டு காலமாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழும் சகல இலங்கையர்களையும் நாடு திரும்புமாறும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இலங்கையில் போர் முடிவுக்கு வருகிறது என்பதும் புதியதொரு சமாதானயுகம் தோன்றியிருக்கிறது என்பதுமே ஜனாதிபதி ராஜபக்ஷவின் நேற்றைய சுதந்திரதின உரையின் மணிச் சுருக்கமாகும். தனது ஆட்சியில் குறுகிய காலகட்டத்திற்குள் பெறப்பட்ட இராணுவ வெற்றிகளே இலங்கையின் இறைமையையும் சுயாதிபத்தியத்தையும் மீட்டெடுத்து உலகில் தலைநிமிர வைத்திருக்கின்றன என்பதே ஜனாதிபதியின் உறுதியான நம்பிக்கை என்பதை அவரது உரை பறைசாற்றிநிற்கிறது. முற்றுமுழுதாக இராணுவ வெற்றிகளை பயன்படுத்தியே தனது அரசியல் வியூகங்களை தொடர்ந்து வகுப்பதற்கு அவர் திடசங்கற்பம் பூண்டிருப்பதை தெளிவாக உணரக்கூடியதாக இருக்கிறது. "கௌரவமான சமாதானம் ' தோன்றிவருகின்றதாக ஜனாதிபதி நம்பிக்கை கொண்டிருக்கின்ற இன்றைய சூழ்நிலையில் இருந்து அடுத்த கட்டமாக எத்தகைய அரசியல் செயன்முறைகளை அவர் முன்னெடுக்கப் போகின்றார் என்பதை மேலோட்டமாகவேனும் அடையாளம் காணக்கூடியதாக நேற்றைய உரையில் தடயம் எதையும் காணமுடியவில்லை.
2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியதிகாரத்துக்கு வந்தபின்னர் ஜனாதிபதி ராஜபக்ஷ ஆற்றிய நான்காவது சுதந்திரதின உரை இதுவாகும். முன்னைய மூன்று உரைகளிலும் இனநெருக்கடி பற்றி அவர் எதையாவது குறிப்பிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. போருக்கு தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தையும் மக்களையும் தயார்படுத்தும் வகையிலான உரைகளாக அவை இருந்த போதிலும் கூட, இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு பற்றி தனது நிலைப்பாட்டுக்கு இசைவான முறையிலென்றாலும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஒவ்வொரு ஆண்டிலும் அரசியல் இணக்கத் தீர்வுக்கான சமாதானச் செயன்முறைகள் தொடர்பிலான அழுத்தம் உரைகளில் படிப்படியாகக் குறைந்து கொண்டு வந்ததை அவதானிக்க முடிந்தது. 2007 சுதந்திரதின உரையில் அவர் "குறைந்தபட்சம் ஆனந்த சங்கரி, தேவானந்தா போன்றவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை முன்வைக்கக் கூடிய அளவுக்காவது நாம் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
கடந்த வருடத்தைய சுதந்திர தின உரையிலே எல்லோரும் இலங்கையர்கள் என்ற உணர்வுடன் சிந்தித்துச் செயற்படக் கூடிய சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த தலைவர்கள் தோன்றுவதற்கான சூழ்நிலை இன்று இல்லை என்று கவலைப்பட்ட ஜனாதிபதி ராஜபக்ஷ, இலங்கைக்கு முழுமையான சுதந்திரம் வேண்டுமென்று முதலில் பிரேரித்த யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹண்டி பேரின்பநாயகம், சேர். பொன்.இராமநாதன் மற்றும் முஸ்லிம் தலைவரான ரி.பி. ஐயா போன்றவர்களின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். நேற்றைய உரையில் தாய்நாட்டுக்காகச் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றுவதற்கு தற்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த வருமாறு சகல அரசியல் கட்சிகளுக்கும் சமூகங்களுக்கும் ஜனாதிபதி பொதுப்படையான அழைப்பை விடுத்தாரே தவிர, இலங்கையை மூன்று தசாப்தங்களாக உலுக்கிவரும் உள்நாட்டுப் போருக்கான அடிப்படைக் காரணமாக விளங்கும் தேசிய இனப் பிரச்சினை பற்றியோ அதற்கு அரசியல் தீர்வைக் காணவேண்டிய அவசியம் குறித்தோ மக்களுக்கு எதையுமே கூறவில்லை. ஆனந்தசங்கரி, தேவானந்தா போன்றவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை முன்வைக்க வேண்டிய தேவை கூட இப்போது இல்லை என்று ஜனாதிபதி நினைத்துவிட்டாரோ என்னவோ? நாடு பூராவும் தேசியக் கொடி (சிங்கக் கொடி) பெருமிதத்துடன் பறந்து கொண்டிருப்பதாகக் கூறிய ஜனாதிபதி இனப்பிரச்சினை, அரசியல் தீர்வு அல்லது தானே கூட்டிய சர்வகட்சி மாநாடு என்ற பதங்களைத்தானும் ஒரு தடவைகூடஉச்சரிக்கவில்லை. அவர் பேசியவற்றை விட பேசாதவையே உள்ளார்ந்தமாக முக்கியமான செய்திகளைக் கொண்டிருக்கின்றன.






0 விமர்சனங்கள்:
Post a Comment