முத்துக்குமாருக்கு ஒரு கடிதம் - எங்கே இருக்கிறான் எமக்கான தலைவன்!-ஆனந்த விகடன்
கண்ணீர் வணக்கம். சாவின் விளிம்பில் எழுதிய சாசனத்தில்கூட, 'வேலைக்குப் போகும் அவசரத்தில் இருக்கும் உங்களை இப்படிச் சந்திக்க நேர்ந்ததற்கு வருந்துகிறேன்' என எழுதிய ஈரத் தமிழா!
தன்னையே மாய்த்துக்கொள்வது தவறுதான். ஆனால், 30 வருடங்களுக்கும் மேலாக பிஞ்சுக் குழந்தைகளை, அப்பாவிப் பெண்களை, பாவப்பட்ட மக்களைக் கொன்று வீசும் குரூரமான இன வெறிக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத சமூகத்தில் வாழ்வதே அவமானம் என்பதையும் அறிவோம்.
உனது இறுதி ஊர்வலத்தைப் போராட்டக் களமாக்கித் திரண்ட இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் இவர்களின் உண்மையான கண்ணீரையும் கோபத்தையும் இந்தக் கடிதத்தில் உனக்கு அனுப்பிவைக்கிறேன். ஏனெனில், இங்கே அது மட்டுமே உண்மை!
நீ பேசாமல்கிடந்த அந்த மூன்று நாட்கள், இதுவரை பேசிப் பேசி எம்மை ஏமாற்றிப் பிழைத்தவர்களின் முகமூடிகளைக் கிழித்தெறிந்த தினங்கள். 'காதலர் தினத்தில்' காதலிக்குக் கடிதம் எழுதிக்கொண்டு இருக்கக்கூடிய வயதுதான் உனக்கும். ஆனால், நீ எழுதிய கடைசிக் கடிதம், பிரிவின் பெருவலியில் துடிக்கும் பிரபஞ்சக் காதலின் குரல். பார்க்கச் சகியாத அவலத்தை அடித்து நொறுக்கும் அன்பின் விரல். அதனால்தான் தமிழ்நாட்டுக்கு வந்த சிங்களத் தம்பதியினர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டுமெனப் பரிந்துரைத்தாய்.
'உலகத் தொழிலாளர்களே... ஒன்றுபடுங்கள்' என்ற குரலின் நீட்சியாய், 'உலகத் தமிழ் இளைஞர்களே... ஒன்றுபடுங்கள்' என அறைகூவிவிட்டுச் செத்துப்போன நண்பனே... தனிமனிதப் பொருளாதாரம், பொழுதுபோக்கு, சுகம், சுயநலம், வக்கிரம், கூத்து என ஒரு தலைமுறை உருவாகிறதோ என்ற சந்தேகத்துக்கெல்லாம் சாட்டையடியானது, உன் கடிதத்துக்குப் பிறகான நிகழ்வுகள். இளைஞர்களும் மாணவர்களும்தான் உன் மரணத்துக்கு மரியாதை தரத் திரண்டார்கள். இனப் படுகொலைக்கு எதிரா கக் கிளர்ந்தார்கள். எங்கெங்கோ பெயர் தெரியாமல் உண்ணாவிரதம் இருந்து சுருண்டார்கள். கல்லூரி வளாகங்களில், பேருந்து-ரயில் நிலையங்களில், தெருக்களில், சந்திப்புகளில் நீ சொன்ன செய்திகளையும், இன அழிப்பின் பயங்கரத்தையும் பொதுமக்களுக்கு எடுத்துச் சென்றார்கள். ஒட்டுமொத்தமாக அவர்கள் உன் முன் வைக்கும் ஒரே கேள்வி என்ன தெரியுமா? 'எங்களை வழிநடத்த யார் இருக்கிறார்கள்? நடக்கும் அநியாயத்துக்கு எதிராக ஒலிக்கும் எங்கள் குரல்களை ஒன்றுதிரட்டி முன்னெடுக்கும் உண்மையான தலைவன் எங்கே?'
இங்கே யாருமில்லை நண்பனே... உண்மையில் யாருமே இல்லை!
'எனது உடலைத் துருப்புச்சீட்டாக்கி, ஈழ மக்களுக்கான போராட்டத்தைத் தொடருங்கள்' என்பதுதான் உனது தியாகத்தின் முதல் செய்தி. தொழிலாளர் புரட்சி வென்றதன் சாட்சியாக லெனினின் உடலைப் பல வருடங்களாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்தது ரஷ்யா. 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்த திலீபனின் உடலை ஈழம் முழுக்க ஊர்வலமாக எடுத்துச் சென்ற பின்பு, கிளர்ந்தது புது எழுச்சி. உனது உடலை மூன்று நாட்கள் பாதுகாத்து வைத்ததே இளைஞர்களின், மாணவர்களின் கோபாவேசம்தான். உன்னையும் உண்மையையும் உடனே புதைக்கத்தானே விரும்பும் அரசியலும் அதிகாரமும். உனது சொந்த ஊர் தூத்துக்குடி வரை ஊர்வலத்தை எடுத்துச் செல்லலாம் என்கிற யோசனையைக்கூட செயல்படுத்த முடியவில்லை. 'சட்டம் - ஒழுங்கு கெட்டுவிடும்' என உளவுத் துறை அரசுக்கு ஓலை அனுப்பியதாம். ஒரு பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் கெடாத 'சட்டம் - ஒழுங்கா' கெட்டுவிடப்போகிறது?
உனது இறுதி ஊர்வலத்தில் சாலையின் இருபுறமும் திரண்டு, வட சென்னைக் குடிசைவாசிகள் ஏற்றிய தீபங்களை 'அணையாத தீபமாக்க' வேண்டியது யார் பொறுப்பு?
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அரசியல் ரீதியான போராட்டங்களில் நிற்கும் இன உணர்வாளர்கள் நீங்கலாக தா.பாண்டியன், ராமதாஸ்,வைகோ,திருமாவளவன்
ஆகியோருக்கு உன் சார்பாக நன்றி. பசி, பட்டினி, ஊனம், சாவு எனத் தினம் தினம் நம் மக்கள் அழிந்து மடியும் அவலத்தை... உண்மை நிலவரத்தை மக்கள் சபைக்கு எடுத்துச் செல்லும் மிகச் சிலரில் இவர்களும் உண்டு. ஆனால், அரசு அதிகாரத்துக்குச் செவிசாய்ப்பதும், தேர்தல் அரசியலுக்கான 'கூட்டு அரசியல்' யோசனைகளில் தடுமாறிப் பின்வாங்குவதும் இவர்களின் பலவீனம் என்பதையும் நீ அறிவாய். பதவிக்கும் அரசியல் பாதுகாப்புக்கும் கிஞ்சித்தும் சாய்ந்திடாமல், நம் மக்களுக்காக எவரேனும் முழுதாக முன்வரும் காலம் எப்போது வருமோ... அன்றுதான் உனது உன்னத நோக்கங்களை நிறைவேற்றும் தகுதியும் உண்மையும் உரியவர்களுக்கு வரும்.
முதல்வரைப் பற்றி நீயே கடிதத்தில் 'தெளிவாக' எழுதியிருக்கிறாய். உனது இறுதி ஊர்வலத்தில் முதல் ஆளாக நின்றிருக்க வேண்டியது 'கல்லக்குடி போராளி'தானே. மனிதச் சங்கிலி, தீர்மானம், ராஜினாமா விளையாட்டு... என 'ஆறப் போட்டு, ஊறப் போட்டு' மறக்கடிக்கிற அரசியல் யுக்தியை இதிலுமா செயல்படுத்துவது? அவரது 'நிலை' நமக்குப் புரிகிறது முத்துக்குமார். 'முதல்வரே... பகிரங்கமாகச் சொல்லுங்கள். என்னால் முடியவில்லை என்று சொல்லுங்கள். நல்லது, நாங்களே பார்த்துக்கொள்கிறோம்.' - இதைத்தானே நீ சொல்ல வந்தாய்?
சினிமா ஆடியோ ரிலீஸ் விழாக்களில் எல்லாம் கூடிச் சிரிக்கும் குடும்பத்திலிருந்து ஒருவர்கூட வரவில்லையே நண்பா!
'ஈழத் தமிழர்களின் நிலையை முன்னிட்டு இந்த வருடம் என் பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம்' என அழகிரி சொன்னதுதான் 2009-ன் மெகா மெகா ஜோக். கலைஞர் டி.வி-யில் ஒரு காமெடி சேனல் ஆரம்பித்து, அதற்கு அழகிரியைப் பொறுப்பாளராகப் போடலாம்.
விஜயகாந்த் யாரென்றும் நீ சொல்லிவிட்டாய், நண்பனே... தமிழர்களுக்கான தைரியமும் தனிக் குரலும்தானே அவரது அடையாளமென நம்பினோம்! மகனுக்கு 'பிரபாகரன்' எனப் பெயர் வைத்திருக்கிறாரே என வியந்தோம். ஆனால், உனது அறைகூவலுக்கும் ஈழ மக்களின் துயர்துடைப்புக்கும் கூப்பிட்டால், 'ஷூட்டிங் காம்'... 'கூட்டணி மீட்டிங்காம்'..! சார் ரொம்ப பிஸி. 'லிஸ்ட்ல நம்மளை விட்ருவாய்ங்களோ' என உஷாராகி, 'நாடாளுமன்றத் தேர்தல் புறக் கணிப்பு' என 'போகாத' ஊருக்கு வழிகாட்டி, அறிக்கை அட்டைக் கத்தி சுழற்றுகிறார் கேப்டன். ஈழ மழையில் வேஷம் கலைந்து தெரிவதுதான் அவரது நிஜ முகமோ?
ஜெயலலிதாவைப் பற்றி உனக்கு நன்றாகவே தெரியும். 'உறுதியான நிலைப்பாடு' என்கிற பெயரால் இன உணர்வைக் கொச்சைப்படுத்தும் அவருக்கு, ஈழத் தமிழர்களாவது... எழவாவது?
காங்கிரஸ்காரர்களைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால், 'கருமாதி வீட்டில் இட்லிக்கு அடித்துக்கொள்கிறார்கள்.' 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிக் கட்டிலைவிட்டு தமிழன் தன்னை ஒதுக்கியே வைத்திருக்கிற ஆத்திரம்கூட அவர்களுக்கு இருக்கலாம். அதற்காக, தமிழ் இனத்தையேவா ரத்தச் சேற்றில் மிதக்கவிட்டு வெறுப்பைத் தீர்த்துக்கொள்வது? பரவாயில்லை... இன்னும் 400 ஆண்டுகள் ஆனாலும் இங்கே இவர்களை நுழையவிடாமல் இவர்களே செய்துகொள்வார்கள்!
'உங்களுக்குத் தமிழன் அழிய வேண்டுமென்றால், எங்கள் பழங்கதைகளில் வருகிற மாதிரி ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்துகொள்கிறோம். எங்கள் சகோதரிகளையும் குழந்தைகளையும் விட்டுவிடுங்கள்' எனக் கதறினாய் நீ. ஆனால், நாம் அளித்த பதவிகளைக்கூட தூக்கி எறிய முடியாத தலைவர்களை அல்லவா நாம் பெற்றிருக்கிறோம்.
கவிதை ஒன்று படிக்கக் கிடைத்தது எனக்கு.
'அப்பாவித் தமிழர்கள் மீது
பேரினவாத ராணுவம் நடத்திய
கொலைவெறித் தாக்குதலில்
ஐம்பது பேர் பலியானார்கள்
ஐந்நூறு பேர் புலியானார்கள்!'
அது அங்கே... ஆனால், இங்கே?
இங்கேயும் மாற்றத்துக்கான ஒளித் தீற்றல்கள் தெரிகின்றன. ஈழத் தமிழர்களுக்காகவும், தமிழகத் தமிழர்களுக்காகவும், உலகளாவிப் புதிய வியூகங்களில் போராட்டத்தையும், வன்முறைக்கு எதிரான புரட்சியை முன்னெடுக்கவும் நமது இளைஞர்கள் தயாராகி இருக்கிறார்கள் நண்பனே.
சுயலாபங்களுக்காகப் பிற உயிரை மதிக்காத ஒவ்வொருவரும் நமக்கு எதிரியே. உனது சிந்தையை, கனவை, கோபத்தை, குரலை, உண்மையை, மனிதநேயத்தை முன்னெடுத்துச் செல்ல இளைஞர்களும் நல்ல இதயங்களும் உனது பெயரால் சேர்வார்கள்.
உன் குரலாகவே மாறி நம் மக்களுக்குச் சொல்கிறேன். இனி உண்ணாவிரதங்கள் வேண்டாம், தீக்குளிப்புகள் வேண்டாம். அதே நேரம், குமுறல்களைப் பூட்டி வைத்திருக்கவும் வேண்டாம் உங்கள் உள்ளத்துக்குள்ளேயே... வாருங்கள் வீதிக்கு, இணைந்து போராட!
என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான ஒரு சகோதரன்
- ஆனந்த விகடன்
0 விமர்சனங்கள்:
Post a Comment