இலங்கை பிரச்சனையை ஐ.நா. மன்றத்திற்கு கொண்டு செல்ல ராமதாஸ் வலியுறுத்தல்
போர் நிறுத்தம் செய்வதற்கு இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும், உடனடியாக இந்த பிரச்சனையை ஐ.நா. மன்றத்திற்கு கொண்டு சென்று இலங்கையில் அமைதி ஏற்பட மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் இன்று தி.நகரில் உள்ள பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை அலுவலகத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார். ஒரு மணி நேரம் வரை நீடித்த இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது, இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து தங்கபாலு, சுதர்சனம் ஆகிய தலைவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதனை படித்துப் பார்த்து விட்டு சுதர்சனம் இன்று என்னை வந்து சந்தித்தார். இலங்கையில் தற்போது தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகள் இதற்காக கண்டனக் குரல் எழுப்பி வருவதுடன் இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
தமிழின அழிப்பில் இலங்கை அரசு ஈடுபட்டு வரும் இந்த நேரத்தில் ஜனாதிபதியின் உரை ஆறுதலாக அமைந்துள்ளது. இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்ற வேண்டுகோள் மட்டும் போதாது, போரை நிறுத்துங்கள் என்று அவர்களுக்கு இந்தியா கட்டளையிட வேண்டும். அதற்கான உரிமை இந்தியாவுக்கு உள்ளது.
இந்த பிரச்சனையை ஐ.நா. மன்றத்திற்கு கொண்டு செல்லவும் மத்திய அரசுக்கு உரிமை உண்டு. இதனை இரண்டே நாட்களில் இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும். ஐ.நா. மன்றத்திற்கு மட்டுமன்றி சர்வதேச மனித உரிமை அமைப்பிற்கும் இந்த பிரச்சனையை கொண்டு சென்று இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை அரசை போரை நிறுத்துங்கள் என்று கண்டிப்புடன் இந்தியா சொன்னால் அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும். புலிகள் தரப்பில் போரை நிறுத்த தயாராக இருப்பதாக அந்த இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து விட்டு ஒரு போராளி இயக்கம் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. எனவே போரை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்துமாறு இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்றார். மேலும் பேசிய அவர் இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் போரை நிறுத்து வதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தவும், முக்கிய தலைவர்களை சந்தித்து பேசவும் இன்று பகல் டெல்லிக்கு செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment