பிரபாகரனிடம் அதிகாரங்களை வழங்குவது தீர்வாகாது
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் கரங்களில் அதிகாரங்களை வழங்குவது இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என இந்திய உட்துறை அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்தார்.
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான இந்தியாவின் முயற்சியானது, வடக்கு, கிழக்கில் சர்வாதிகாரமொன்றை ஏற்படுத்திக் கொடுப்பதில் முடிவடையாது எனவும், இலங்கையிலுள்ள 40 இலட்சம் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் ஒருபோதும் இருந்தது இல்லையெனவும் பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர் கூறினார்.
“ஆயுதக் குழுவொன்றுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லுமாறு அழுத்தம் கொடுக்கவேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு இல்லை” எனச் சுட்டிக்காட்டிய அவர், இந்த விடயத்தில் இந்தியா தெளிவாக இருப்பதாகக் கூறினார்.
“எவ்வாறு, நாங்லான்ட், மிசோரம், அசாம் மற்றும் ஜம்மு கஷ்மீரில் செயற்பட்டுவரும் ஆயுதக் குழுக்களுடன் பேச்சு நடத்தும் நிலையில் இந்திய மத்திய அரசாங்கம் இல்லையோ, அதேபோலவே ஆயுதக் குழுவொன்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கமும் விரும்பவில்லை” என பா.சிதம்பரம் தனது உரையில் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிடவேண்டுமென இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் அண்மையில் கூறியிருந்தமையைச் சுட்டிக்காட்டிய மத்திய உட்துறை அமைச்சர், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிடும் அதேநேரம், கொழும்பு இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தினால் இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுக்கத் தாம் தயார் எனக் கூறினார்.
“பேச்சுவார்ததையானது 1987ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டமைவதுடன், அனைத்து சமூகத்துக்கும் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அது இருக்க வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் சர்வாதிகாரத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கக் கூடாது” என்றார் அவர்.
பல தமிழ் தலைவர்களை இல்லாமல் செய்தமையே விடுதலைப் புலிகள் செய்த பாரிய தவறு எனவும், ராஜீவ் காந்தியை புலிகள் கொன்றமையாலேயே இலங்கையில் ஜனநாயகம் மலரவேண்டுமெனப் பல தமிழ்த் தலைவர்கள் இன்னமும் உரிய அழுத்தம் கொடுக்காமல் இருப்பதாகவும் இந்திய மத்திய உட்துறை அமைச்சர் மேலும் கூறினார்.
அத்துடன், இலங்கையின் மத்திய பகுதியிலுள்ள 13 இலட்சம் இந்திய வம்சாவளித் தமிழர்கள் தமது தலைவர்களைத் தேர்ந்தெடுத்திருப்பதைக் குறிப்பிட்ட பா.சிதம்பரம், முன்னர் விடுதலைப் புலிகளின் தலைமையை ஏற்றுக்கொண்டிருந்த கிழக்கு மாகாண மக்கள் தற்பொழுது அதனை நிராகரித்துவிட்டு ஜனநாயக ரீதியாக முதலமைச்சர் ஒருவரைத் தேர்ந்தெடுத்திருப்பதாகத் தெரிவித்தார். ஆனாலும், வடபகுதி மாத்திரமே இன்னமும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment