புலம் பெயர் தமிழ் மக்களுக்காக அலைகள் வழங்கும் வாராந்த சிந்தனைத் தொடர்
புலம் பெயர் தமிழர் போராட்டங்கள் புதிய மாற்றங்களைத் தருமா?
இலங்கைத் தீவில் குறுகிய நிலப்பரப்பில் தமிழ் மக்களைச் சுற்றிவளைத்து, எறிகணை வீச்சினால் கொன்றொழிக்கும் கடைசிக் காட்சி அரங்கேறிக் கொண்டிருக்கிறது. உலக சமுதாயத்திடம் நீதிகேட்டு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சகல நாடுகளிலும் தொடர் போராட்டங்களை நடாத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் போராட்டங்களை நடாத்தும்போது முக்கியமான ஒரு காட்சி நினைவிற்கு வருகிறது. தென்னாபிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா விடுதலையாக வேண்டுமென முழு உலகமும் அணிதிரண்டு நின்ற காட்சியே அதுவாகும். ஆபிரிக்காவில் உள்ள மக்களை தென்னாபிரிக்க நிறவெறி அரசிடமிருந்து கடைசியில் காப்பாற்றியது அங்கு விடுதலைக்காக போராடிய ஏ.என்.சி அல்ல, உலக மக்களே என்பது கவனிக்கத்தக்கது.
அன்று தென்னாபிரிக்காவிற்கு விடுதலை வேண்டும் என்பதற்காக கறுப்பின மக்களைவிட வெளிநாடுகளில் வாழ்ந்த வெள்ளை நிற மக்களே அதிகமாகப் போராடினார்கள். நடிகர்கள், கலைஞர்கள், பிரபல பாடகர்கள் என்று உலகமே திரண்டெழுந்தது, ஆபிரிக்க நிறவாதம் தோற்றது. அதற்கு நெல்சன்மண்டேலா கூறிய முக்கிய கருத்தும் காரணமாக இருந்தது. நிறவாதமும், துவேஷமும் கறுப்பரிடமிருந்து வந்தாலும், வெள்ளையரிடமிருந்து வந்தாலும் அதற்கு நாம் எதிரானவரே என்று அவர் கூறினார். இந்தக் கருத்தைக் கேட்டதும், வெள்ளை இனத்தின் அரசியான பிரித்தானிய மகாராணியாரே மனம் நெகிழ்ந்து கண்ணீர் வடித்தார்.
அன்று தென்னாபிரிக்க மக்களுக்கு நேர்ந்தது போல ஒரு புறச்சூழல் தற்போது ஈழத் தமிழர் போராட்டத்;திலும் ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச சமுதாயத்தை நமக்கு சாதகமாக மாற்றுவதற்கு இது பொருத்தமான காலமாக இருக்கிறது. இந்த முயற்சியில் நாம் மட்டும் தனியே நிற்கக் கூடாது. நமக்காக தமிழகத்தில் உள்ள மக்கள் அணி திரண்டு நிற்பதுபோல மேலைத்தேய சமுதாயமும் அணி திரண்டு நிற்க வேண்டும், அந்த நிலையை உருவாக்க நாம் முயல வேண்டும். உலக சமுதாயத்தின் ஆதரவுச்சக்தியோடு புதிய அணியாக திரள வேண்டுமானால் என்ன செய்யலாம் என்று கொஞ்சம் புதிதாகச் சிந்திக்க வேண்டும்.
அன்று சர்வதேச சமுதாயம் ஒன்று திரண்டபோது ஆபிரிக்க ஏ.என்.சி கடைப்பிடித்த நடைமுறைகளை இலங்கைத் தமிழரும் கவனிக்க வேண்டும். ஆர்பாட்ட ஊர்வலங்களில் பங்கேற்போர் பொறுமை காப்பது அவசியம். மேலை நாட்டு சட்டங்களை மதித்து, அதற்கு அமைவாக செயற்பட வேண்டும். தமிழகத்தில் செய்வது போன்ற தீ மூட்டி உயிர் விடும் செயல்களை மேலைத்தேயத்தவர் விரும்ப மாட்டார்கள் என்பதையும் அறிந்து நடக்க வேண்டும். போராட்டங்களை நடாத்துவோர் இது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கி அனைத்து சக்திகளையும் சிறந்த முறையில் நெறிப்படுத்த வேண்டும்.
மேலைத்தேயத்தவரை நாம் நமது கருத்துக்குள் கொண்டு வர வேண்டுமானால் தீர்வு குறித்து நீதியான ஒளிவு மறைவற்ற பதில்கள் அவசியம். அதாவது நமது பணிகள் சகல நாடுகளிலும் ஒரே கருத்தை குழப்பமின்றி தெரிவிப்பது அவசியம். பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து இதுவரை பல போராட்டக்கள அறிக்கைகள் வழங்கப்பட்டுவிட்டன, சகல அறிக்கைகளிலும் ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட உள்ளடக்கம் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். ஏனென்றால் சகல கோரிக்கைகளும் இறுதியில் ஓரிடத்திலேயே வைத்து ஆராயப்பட இருப்பதால் கோரிக்கைகளிடையே முரண்பாடு இருத்தல் கூடாது.
சென்ற இரு வாரங்களுக்கு முன் பாலஸ்தீன மக்களுக்காக டென்மார்க்கில் செய்யப்பட்ட ஆர்பாட்ட ஊர்வலத்தில் இடம் பெற்ற வன்முறைகள், வெடிகளைக் கொழுத்தி வீசிய செயல்கள், சிறு பிள்ளை ஒன்றுக்கு இராணுவ உடை அணிவித்து, முதுகில் ரொக்கட் லோஞ்சரை ( பிளாஸ்டிக் ) கொடுத்து ஊர்வலம் நடாத்தியவிதம் யாவும் டேனிஸ் ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
டேனிஸ் தொலைக்காட்சிகள் அந்தச் சிறுவனையே காட்டி தொடர் செய்திகளை வெளியிட்டன. கமாஸ் அமைப்பின் ஆயுதப் போராட்டம் சரியானது என்று அந்த ஊர்வலம் வாதிடுகிறதா என்றும் வினவின. ஊர்வலம் திசை திரும்பியது, இப்போது பாலஸ்தீனருக்கு ஆதரவான போராட்டங்கள் ஓய்ந்துவிட்டன. மறுபடியும் இஸ்ரேலின் தாக்குதல் தொடங்க மீண்டும் ஊர்வலம் ஆரம்பமாகுமென வெளி நாட்டவருக்கு தெரியும். இதை நாம் மிக அவதானமாக நோக்க வேண்டும்.
பாலஸ்தீன ஆர்பாட்டங்களை நெல்சன்மண்டேலாவின் ஏ.என்.சிக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்பாட்டங்களுடன் ஒப்பிட்டு நோக்க வேண்டும். இந்த இரு ஆர்பாட்டங்களிலும் எது வெற்றிபெற்றது, ஏன் வெற்றி பெற்றது என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு வேண்டிய மதியூகத்தைவிட ஆயிரம் மடங்கு அதிக மதியூகம் ஓர் அகிம்வை ரீதியான ஆர்பாட்டத்திற்கு அவசியம். ஆயுதம் தூக்கிய போராட்டத்திற்கு எப்படி கொள்கை, மதியூகம் என்னும் இரண்டும் காலத்தோடு பொருந்தி வரவேண்டுமோ அது போல ஆயதமேந்தாத ஆர்பாட்டத்திற்கும் பொருந்தி வர வேண்டும்.
ஆர்பாட்டங்களை நடாத்தும் முன்னர் உலகளாவிய ஆர்பாட்டங்கள் குறித்த தகவல்களை மக்களுக்கு வழங்க வேண்டும். மக்களின் ஆர்பாட்ட ஊர்வலங்கள் வெற்றி பெற்ற வரலாறுகள் எவை, தோல்வியடைந்த வரலாறுகள் எவை என்பதை முதலில் ஆய்வு செய்ய வேண்டும். இவை குறித்த விசேட உரையாடல்களை நடாத்தி மக்களை தயார்படுத்த வேண்டியது ஊடகங்களின் பொறுப்பு.
யார் ஆர்பாட்டம் செய்தாலும் ஆர்பாட்டக்காரருடைய பலம் எத்தகையது என்பதை நாடி பிடித்துப்பார்க்க சர்வதேச சமுதாயத்தில் பணியாற்றும் அரசியல் நிபுணர்களால் முடியும். இலங்கைக்கான கற்கை என்பது ஐரோப்பாவில் உள்ள எல்லா நாடுகளின் பல்கலைக்கழகங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. அங்கு இலங்கையின் வரலாற்றை, நிகழ்வுகளை எல்லாம் அக்கு வேறு ஆணி வேறாக படித்த பேராசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமே அந்தந்த நாடுகளின் அரச தலைவர் கருத்துக் கேட்பார்கள். அந்தக் கருத்தே அரச கொள்கை வகுப்பில் முக்கிய இடம் பிடிக்கும். எனவேதான் நாம் மற்றவருக்கு தெரியாத ஒன்றை சொல்லப் போவதாக நினைக்கக் கூடாது. நமக்கு தெரிந்தது மற்றவர்களுக்கும் தெரியும். இங்கேயுள்ள முக்கிய சவால், சொல்வதல்ல மற்றவர்களை நமக்காக எப்படி செயற்பட வைப்பது என்பதுதான்.
ஆகவே ஒன்று திரண்டு பலமடையும் புலம் பெயர் தமிழ் மக்கள், அடுத்து என்னவென்ற கேள்விக்கு பதில் கொடுக்க தயாராக வேண்டும். போராட்டங்கள் உச்சமடையும் போது ஒரு கட்டத்தில் அதில் பங்கேற்கும் முக்கியமானவர்களை பேசுவதற்கு அழைக்கலாம், அந்த நேரம் இரண்டு கேள்விகளை கேட்பார்கள்.
1. யுத்த நிறுத்தத்தால் என்ன பயன் ? இதுவரை இலங்கையில் பல யுத்த நிறுத்தங்கள் வந்துள்ளன ஆனால் அவை அனைத்தும் மறுபடியும் போருக்குள்ளேயே சங்கமித்துள்ளன. ஆகவேதான் மீண்டும் ஒரு யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தினால் அது கண்டிப்பாக சமாதானத்திற்குள்தான் போகும் என்பதற்கு என்ன உறுதிப்பாடு உங்களிடம் உள்ளது என்று கேட்பார்கள்.
2. பிரான்சில் 1789 ல் நடைபெற்ற மக்கள் புரட்சி, ரஸ்யாவில் 1917 நடைபெற்ற மக்கள் புரட்சி, 1949 சீனப் புரட்சி ஆகிய மூன்று பெரும் மக்கள் புரட்சிகளிலும் ஓர் ஒற்றுமை இருந்தது. முழுமையான அதிகார மாற்றம், என்ற ஒன்றிற்கு மேல் வேறு தீர்வு அவர்களிடம் இருக்கவில்லை. அதுபோல ஏதோ ஒரு மாற்றமில்லா முடிவும், தீர்வும் நம்மிடமும் இருக்க வேண்டியது அவசியம்.
மேலும் எதுதான் தீர்வு என்ற கேள்விக்கு மக்கள் மனம்போனபடி பதிலுரைக்க முடியாது. மக்களுக்குத் தலைமை தாங்குவோர்தான் இதற்கான பதில்களை தமது நுனி விரலில்; வைத்திருக்க வேண்டும்.
நம்மால் முன் வைக்கப்படும்
1. யுத்தநிறுத்தம்
2. பேச்சுக்களை ஆரம்பியுங்கள்
ஆகிய இரு கோரிக்கைகளும் ஏற்கெனவே உலக சமுதாயம் ஒப்புக் கொண்ட விடயங்கள்தான். அவற்றை எப்படி சாத்தியமாக்குவது, இதுதான் கேள்வி. 2003 ஈராக், ஆப்கான் நாடுகளில் அமெரிக்கா தலைமையில் நடைபெற்ற போர் முன்னெடுப்பை உலக நாடுகள் எல்லாம் ஆதரித்தன. அதன் பரிசாக உலக சமுதாயத்தின் கைகளில் இரத்தக்கறை படிந்துள்ளது. நீ விபச்சாரம் செய்திருக்கிறாய் அதையே ஏன் நானும் செய்யக் கூடாது ? இதுதான் இன்று இரத்தக்கறை படிந்த ஆதிக்க சக்திகளின் கேள்வியாக இருக்கிறது. இதற்குப் பதில் சொல்ல இயலாது திருடன் கையில் தேள் கொட்டிய நிலையில் இருக்கிறது ஐ.நா.
மேலும் இப்போது நம் கண் முன் இருக்கும் உலகம் ஆபிரிக்க ஏ.என்.சி வெற்றிபெற்ற காலத்து உலகமல்ல. 2001 செப் 11 ற்குப் பிற்பட்ட சுயநலமான உலகம். இது எந்தப் பிரச்சனையையும் தீர்க்க வழி தெரியாத உலகம். ஆகவே நாம் கண் முன் உள்ள நிகழ்காலத்தை உணர்ந்து வியூகங்களை வகுக்க வேண்டும்.
இப்போது வெளிநாடுகளில் புலம் பெயர் தமிழரிடையே ஏற்பட்டுள்ள ஆர்பாட்ட நிலமை மிகவும் வரவேற்கத்தக்கது. இளையோர் உட்பட சகலரும் முன்னணியில் நின்று போராடுவது இன்னொரு சிறப்பம்சம். இந்தப் போராட்டங்களால் உலகிற்கு புதியதோர் வழியைக் காட்ட வேண்டிய நிலை நம்முன் இருக்கிறது. பழைய வரலாறுகளை மனதில் நிறுத்தி, புதிய பாதைகளை வகுத்து வெற்றிபெற வேண்டிய காலம் இது.
அமுதம் கடைய முயலும்போது முதலில் ஆலகால விஷமே வரும், தொடர்ந்து முயற்சித்தால் இறுதியில் அமுதம் வரும். இப்போது வன்னிக்கு வந்திருப்பதுதான் தேவர்களையே விரட்டியடித்த ஆலகால விஷம். இதை எதிர்த்து இலட்சோப இலட்சமாக நாம் வீதியில் இறங்கிவிட்டோம். இறங்கிய பிறகு யோசிக்கக் கூடாது. எத்தகைய தடை வரினும் யாரும் மனம் தளர்ந்துவிடக் கூடாது. எப்படியோ எடுத்த இலக்கை அடைய வேண்டும், அவ்வளவுதான். முயற்சிப்போம் ! வெற்றி நிச்சயம் யாரும் மனம் தளர்ந்துவிடக்கூடாது.
மீண்டும் சந்திப்போம்.
அதுவரை நம்பிக்கைகளுடன்,
கி.செ.துரை 03.02.2009
0 விமர்சனங்கள்:
Post a Comment