சுதந்திர உணர்வு கிட்டுமா?
பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் கொடி இத்தீவில் இறக்கப்பட்டு சிங்கக் கொடி உத்தியோகபூர்வ தேசியக் கொடியாக ஏற்றப்பட்டு இன்றுடன் அறுபத்தியொரு ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன.
இலங்கையின் தேசியக் கொடியாக வாளேந்திய சிங்கம் நிர்ணயிக்கப்பட்ட போதே அந்தக் கொடி அமைப்பைத் தமிழர்கள் எதிர்த்தார்கள்; அதிருப்தி வெளியிட்டார்கள்.
ஆனால் ஜனநாயகத்தின் சிறப்பியல்பு அல்லது மாண்பு என்று போற்றப்படும் "பெரும்பான்மையினரின் தீர்மானமே முடிவு" என்ற கேலிக்கூத்துக் கோட்பாட்டின் கீழ், இலங்கைத் தீவின் பெரும்பான்மையினரான சிங்களவர்களின் "சிங்கக் கொடித் தெரிவு" சிறுபான்மையினரான தமிழர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டிய முடிவாக வல்வந்தமாகத் திணிக்கப்பட்டது.
அன்று முதல் இன்று வரை "பெரும்பான்மையினரின் முடிவே நீதி" என்ற கோட்பாட்டின் கீழ், அனைத்து அம்சங்களுமே சிறுபான்மையினரின் மீது, பெரும்பான்மை யினரால் வல்வந்தமாகத் திணிக்கப்படுவது சட்டச் சிறப்பியல்பாக அங்கீகரிக்கப்படும் நிலைமை இங்கு நீடிக்கின்றது.
சரித்திர காலம் தொட்டு இத்தீவில் சிங்களவர்களைப் போல தனித்துவமான மொழி, பாரம்பரிய தாயகம், சிறப்பான பண்பாடு, விசேடமான வாழ்க்கைமுறை ஆகியவற்றோடு ஒரு தேசியக் கட்டமைப்புடன் வாழ்ந்து வருபவர்கள் தமிழர்கள். அவர்களின் அந்தத் தனித்துவமான கட்டமைப்பின் அடிப்படைகளை இலக்குவைத்துச் சிதைக்கும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இந்த ஜனநாயகக் கேலிக்கூத்தின் "சிறப்பியல்புகளுக்கு" அமையவே முன்னெடுக்கப்பட்டன.
அதன் காரணமாகத்தான் இன்று தென்னிலங்கை கொண்டாடும் சுதந்திர தினத்தை அந்த சுதந்திர உணர்வுடன் அனுஷ்டிக்க முடியாதவர்களாகத் தமிழர்கள் ஒடுக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றிகளின் களிப்பின் உச்சத்தில் இந்த சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஆட்சிப் பீடத்துக்கு, இந்த உண்மையை எடுத்துரைப்பது கூட சில சமயங்களில் கசப்பாக இருக்கும். ஆனால் அதுதான் தமிழர்தம் உள்ளக்குமுறல். அதை மறைக்க முடியாது.
1948 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை மிஞ்சும் வகையில் இந்த 61 ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாட வேண்டும் என நாட்டு மக்களுக்குத் தாம் விடுத்த செய்தியில் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருக்கும் இன்னொரு விடயத்தையும் நாம் இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
"பயங்கரவாதிகளான புலிகளால் சிறைப்பிடிக்கப் பட்டிருக்கும் வடபகுதி அப்பாவித் தமிழ் மக்களை விடுவித்து, அரசமைப்பின் கீழ் அவர்களுக்கு உரித்தான உரிமைகளும் சமத்துவமும் வழங்கப்படும் என நான் உறுதி கூறுகின்றேன்."" என்ற சாரப்படக் குறிப்பிட்டிருக்கிறார் ஜனாதிபதி ராஜபக்ஷ.
ஆக, இந்த அரசமைப்பில் 1978 ஆம் ஆண்டின் அரச யாப்பில் கூறப்பட்டவற்றைத் தமிழர்களுக்குப் பெற்றுத் தருவதுதான் அவர்களுக்கு ஜனாதிபதியின் உச்ச பட்ச சாதிப்பாக சாதனையாக இருக்கப் போகின்றது.
இலங்கைத் தீவில் சிங்கக்கொடி ஏற்றப்பட்ட பின்னர் இங்கு உருவாக்கப்பட்ட 1972 ஆம் ஆண்டின் அரசமைப்போ அல்லது இப்போது நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டின் அரசமைப்போ, இத்தீவில் வாழும் தமிழர்களின் இணக்கத்துடனோ, சம்மதத்துடனோ, உடன்பாட்டுடனோ கொண்டுவரப்பட்டவையல்ல. அந்த அரசமைப்புகளின் உருவாக்கத்தைத் தமிழர்கள் புறக்கணித்த நிலையில் பெரும்பான்மைச் சிங்களவர்களால் தமிழர்கள் மீது அது கட்டாயப்படுத்தித் திணிக்கப்பட்டது.
இன்று "பயங்கரவாதம்" என்று தென்னிலங்கை அரசு சித்திரிக்கும் ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் மூலமே வித்தே இந்த அரசமைப்புகளில் இருந்து தான் தோற்றம் பெற்றது என்பது வரலாற்று உண்மை.
1948 இல் சுதந்திர இலங்கையின் முதலாவது அர சமைப்பில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாது காக்கும் வகையில் இருந்த 29 ஆவது பிரிவைக் கூட அடியோடு நீக்கி, பௌத்தத்துக்கும் சிங்களத்துக்கும் தனித்து முன்னுரிமையும் மேன்மையும் கொடுப்பதை உறுதிப்படுத்தி, தமிழர் தம் தனித்துவத்துக்கு ஆப்பு வைத்து, அவர்களை ஆயுதம் ஏந்திய உரிமைப் போராட் டத்துக்கு நெட்டித்தள்ளியவையே இந்த அரசமைப் புகள்தாம்.
இத்தகைய அரசமைப்புகளின் கீழ் நீதி, நியாயம் தமக்குக் கிட்டவே கிட்டாது என்பதைக் கண்டறிந்த பின்னரே ஆயுத வன்முறைப் போராட்டத்தின் பால் தமிழர்கள் தள்ளப்பட்டார்கள். தமிழர் தரப்பின் ஆயுத வலிமையைத் தகர்த்து அழித்துவிட்டதாகக் கொக்கரிக்கும் கொழும்பு "மீண்டும் பழைய குருடி கதவைத் திறவடி" என்ற கணக்கில் தற்போதைய அரசமைப்புக்குள் தமிழர்களுக்கு சமத்துவமும், உரிமைகளும் வழங்கிச் சாதிக்கப் போவதாகக் கதை விடுகின்றது.
சிறுபான்மையினரான தமிழர்களைப் பொறுத்த வரை இந்த அரசமைப்பும் ஓர் அடிமைப் பட்டயமே. அதற்கு வெளியில் வந்து தமிழருக்கு நீதி செய்யும் நியாயப்போக்கு தென்னிலங்கை அரசியல் தலைமையிடம் இல்லாதவரை உண்மையான நீதியான சுதந்திர உணர்வு இங்கு தமிழர்களுக்குக் கிட்டப்போவதில்லை.
0 விமர்சனங்கள்:
Post a Comment