வவுனியா இடைத்தங்கல் முகாமில் உறவினர்கள் செல்லத்தடை
வன்னியிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியான வவுனியாவுக்கு வரும் மக்கள் 13 இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வவுனியாவில் 7 பாடசாலைகள், ஒரு கல்வியியல் கல்லூரி, ஒரு பல்கலைக்கழகம் மற்றும் 4 இடைத்தங்கல் முகாம்கள் ஆகியவற்றில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மனிதாபிமானப் பணிகளை மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
இந்நிலையில் வவுனியா இடைத்தங்கல முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை மன்னார் மாவட்டத்திலிருந்து நாளாந்தம் பலநூற்றுக்கணக்கான உறவினர்கள் சந்தித்துச் செல்வதுண்டு.
எனினும் கடந்த 3 தினங்களாகப் இவ்வாறு சநதிக்கச் செல்லும்; மக்களைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து துரத்திவிடுவதாக மன்னாரிலிருந்து வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களைப் பார்வையிடச் சென்ற மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இடைத்தங்கல் முகாமைச்சுற்றி நாலாபுறமும் முள்ளுக் கம்பிகள் அடைக்கப்பட்டிருப்பதாகவும் தாங்கள் சுமார் 50 மீற்றர் தூரத்தில் இருந்தே உறவினர்களைப் பார்வையிட்டுச் செல்வதாகவும் இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
"வன்னியிலிலிருந்து மக்களை வவுனியாவுக்குக் கொண்டு வந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த வேளை, உறவினர்களைப் பார்வையிடுவதற்கு அனுமதி அளித்தனர்.
கடந்த சில தினங்களாக ஏராளமான மக்கள் உறவினர்களைப் பார்வையிட வந்தார்கள். இதன்போது பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. உணவுப் பார்சல்களுடன் கையடக்கத் தொலைபேசிகளைப் பதுக்கி வைத்து இடைத்தங்கல் முகாம்களில் உள்ள உறவினர்களுக்கு வழங்க முயற்சி செய்யப்பட்டது.
மதுபானம், பீடி போன்றவையும் வழங்க முயற்சி எடுக்கப்பட்டது. பாதுகாப்புத்தரப்பினர் இதனைக் கண்டுபிடித்ததையடுத்தே முகாம்களில் தங்கியுள்ளவர்களைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
தற்போது முகாம்களில் உள்ள பலருக்கு அம்மை நோய் பரவி வருவதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.இதுவரையிலும் 35 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment