கடற்புலிகளின் கடைசி தளத்தையும் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் கூறுகிறது
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் எஞ்சியிருந்த கடற்புலிகளின் முக்கிய தளமாகிய சாலை பகுதியையும், விசுவமடு பகுதியையும் உக்கிர சண்டைகளின் பின்னர் இலங்கைப் படையினர் தம் வசப்படுத்தியிருப்பதாக இலங்கை இராணுவத் தலைமையகம் அறிவித்திருக்கின்றது.
சாலையைக் கைப்பற்றுவதற்காக இலங்கை இராணுவத்தினர் விடுதலைப்புலிகள் மீது நடத்திய பெரும் தாக்குதல்களில் கடற்புலிகளின் முக்கிய தளபதியாகிய விநாயகம் உட்பட மேலும் முக்கிய உறுப்பினர்களோடு, குறைந்தது மேலும் ஒரு டஜன் விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் இராணுவத் தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.
இதேவேளை வன்னியில் உடையார்கட்டு, சுதந்திரபுரம், தேவிபுரம் போன்ற பகுதிகளில் இரண்டு நாட்களாகத் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட எறிகணை மற்றும் பல்குழல் பீரங்கி தாக்குதல்களில் 56 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 191 பேர் காயமடைந்துள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
உடையார்கட்டு வைத்தியசாலையும் இன்று எறிகணை தாக்குதலுக்கு உள்ளாகியதாகவும், இதில் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்திருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.
இதற்கிடையில் கடந்த 4 தினங்களில் 1500க்கும் மேற்பட்ட சிவிலியன்கள் இராணுவத்தினரிடம் வந்து சேர்ந்துள்ளதாகவும் இன்று மாத்திரம் 800 பேர் இவ்வாறு இராணுவத்தினரிடம் வந்தடைந்துள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.
இவ்வாறு வந்தவர்களில் பலர் வவுனியா நெலுக்குளம் இடைத்தங்கல் முகாமுக்குக் கொண்டுவரப்பட்டு சிவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வன்னியிலிருந்து மேலும் பெரும் எண்ணிக்கையில் பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருவார்கள் என்பதை எதிர்பார்த்து, வவுனியாவில் அவர்களைத் தங்கவைப்பதற்கான சுமார் பத்து இடங்கள் தெரிவுசெய்யப்பட்டு அதிகாரிகள் அங்கு அடிப்படை வசதிகளை வழங்குவற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர்.
BBC Tamil






0 விமர்சனங்கள்:
Post a Comment