சிவிலியன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் : தென் ஆபிரிக்கா
இலங்கையில் சிவிலியன்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென தென் ஆபிரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச மனிதாபிமான நியமங்களுக்கு அமைவாக யுத்தத்தில் ஈடுபட்டு வரும் அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் செயற்பட வேண்டுமென தென் ஆபிரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
யுத்த பிரதேசத்தில் சிக்கியுள்ள 250,000 சிவிலியன்கள் மற்றும் தொண்டு நிறுவன பணியாளர்கள் தொடர்பில் தமது அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தென் ஆபிரிக்க வெளிவிவகார அமைச்சு அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.
யுத்த நடவடிக்கைகளின் போது படுகொலை செய்யப்பட்ட சிவிலியன்கள் தொடர்பில் தாம் வேதனையடைவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமது ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்ட தென் ஆபிரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட வேண்டுமாயின் அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தைகளின் மூலம் இணக்கப்பாடொன்றை எட்ட வேண்டும் எனவும், சமாதானப் பேச்சுவார்த்தைகளின் மூலம் நிரந்தர சமாதானத்தை எட்டுமாறும் தென் ஆபிரிக்கா மீண்டுமொரு தடவை கோரிக்கை விடுத்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment