ஈழதமிழர்களுக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படும் ரவி இறப்பதற்கு முன்னர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை
ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த செயலை குடும்ப சண்டையென கொச்சைப்படுத்துவதா?
ஈழத் தமிழர்களின் நிலையை நினைத்து மனம் வெதும்பித் தீக்குளித்த திண்டுக்கல் மாவட்டம் ரவியின் செயலை குடும்பச் சண்டையால் தீக்குளித்ததாக கூறி கொச்சைப்படுத்துவதா?
நேற்று காலை மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பள்ளபட்டி ரவியைப் போய்ப் பார்த்தேன். அவர் தீக்குளித்ததால் 80 சதவிகிதம் தீப்புண் ஏற்பட்டு உள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
அவர் என்னைப் பார்த்தவுடன் வணக்கம் தெரிவித்தார்.
நீங்களும் இதற்கெல்லாம் கஷ்டப்படுகிறீர்கள் ஒன்றும் நடக்கவில்லையே என்று கூறினார். பின்னர் அவர் தொடர்பு இல்லாமல் வார்த்தைகள் சரியாக வராமல் பேசுவது ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல் பேசியது நெருப்பு உடம்பின் பல பகுதிகளை அரித்துவிட்டதால் அவருடைய சிந்தனைத்திறன் பாதிக்கப்பட்டு உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டேன்.
அவருடைய மனைவி சித்ராவிடம் நடந்தது என்னவென்று கேட்டேன். அவர் எப்பவுமே இலங்கைத் தமிழர்களுக்காக கவலைப்பட்டு பேசுவாரு இந்தச் சென்னையில் உள்ள பையன் தீக்குளித்து இறந்த செய்தியை வெளியில்போய் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு வந்து ரொம்ப புலம்பிக் கொண்டே இருந்தார்.
திருமாவளவன் நான்கு நாள் உண்ணாநிலை இருந்தாரு அதிலும் ஒன்றும் நடக்கவில்லையே என்று சொல்லிக்கொண்டு இருந்தார். நம்ம மக்கள் இப்படி இலங்கையில் சாகிறாங்களே நம்மெல்லாம் என்ன பிரயோஜனம் என்று புலம்பிக் கொண்டே இருந்தார்.
எங்க வீடு குடிசை வீடு கஷ்டத்தோடு கஷ்டம். நாள் பத்திரிகை வாங்கிப் படிப்பாரு. சாயங்காலம் 6 மணியாக இருக்கும். அப்போது தெருக்காரங்க ஓடிவந்து இந்தா உன் புருஷன் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கிட்டான் என்று கூப்பாடு போட்டார்கள். அதற்குப்பிறகு நான் ஓடினேன். அதன் பிறகு நானும் எனது மூத்த பையன் பிரபாகரனும் நிலக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்குள்ள மருத்துவர்கள் மருத்துவம் பார்க்க விரும்பவில்லை.
பிறகு, மதுரை அரசாங்க மருத்துவமனைக்கு கொண்டுகிட்டு வந்தோம்.
அப்பல்லாம் காவல்துறை யாரும் பார்க்கவில்லை. இப்போ நாங்க புருஷன் மனைவி சண்டை போட்டுக்கிட்டு அதனால அவர் போய் தீக்குளிச்சாருன்னு காவல்துறையினர்களும் சொல்றதாக பத்திரிகையில் போட்டிருப்பதாக சொன்னாங்க.
எங்களுக்குள் எந்தச் சண்டையும் கிடையாது. இது பச்சைப் பொய். ஸ்டவ் வெடிச்சு தீப்பிடிச்சதுன்னு அவர் சொன்னதாக பத்திரிகையில் போட்டிருக்காங்களாம்.
சத்தியமா அவரு அப்படிச் சொல்லவேயில்லை எங்க வீட்டுல ஸ்டவ் கிடையாது.
சிலிண்டரு கிடையாது. காடா விளக்கு சிம்னி விளக்கு தான் வைத்திருக்கிறோம் என்று அழுது கொண்டே கூறினார்.
அவரது மகன் பிரபாகரன் சொன்னதாவது:
எங்க அப்பா அம்மாவுக்குமிடையே சண்டையே கிடையாது. இலங்கைத் தமிழருக்காகத்தான் எங்க அப்பா தீக்குளித்தார். இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லிவிட்டு தான் உடம்பு எல்லாம் தீப்பிடித்து தெருவில் ஓடியிருக்கிறார் என்று கூறினார்.
ஆனால், காவல்துறையின் உயர் அதிகாரி இராஜேந்திரன் இது தொடர்பாக கூறுகையில்,
பள்ளப்பட்டி ரவி மனைவியோடு சண்டை போட்டுக் கொண்டு தீக்குளித்தார் என்றும் இலங்கைத் தமிழர்களுக்காக அவர் தீக்குளித்தார் என்று பிரச்சினையாக்க முயன்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். காவல்துறையினர் இன்னொரு பொய்யைப் பதிவு செய்கின்றனர். பள்ளப்பட்டி ரவி மருத்துவமனைக்கு வந்தவுடன் ஸ்டவ் வெடித்து உடம்பில் தீப்பிடித்ததாக மருத்துவரிடம் கூறியதாக காவல்துறையினர் பொய்யாக பதிவு செய்திருப்பதோடு மருத்துவர்களை அப்படி சொல்ல வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
மருத்துவமனையில் பள்ளப்பட்டி ரவிதான் இலங்கைத் தமிழர்களுக்காகத் தான் தீக்குளித்தேன் என்று திட்டவட்டமாகச் சொல்லி உள்ளார். அந்த ஆதாரம் செல்லிடப்பேசியில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த உண்மையை மூடி மறைத்து பள்ளப்பட்டி ரவி குடும்பச் சண்டையால் தீக்குளித்ததாகவும், அவர்மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்மீது வழக்குகள் இருப்பதாகவே இருந்தாலும் இந்தத் தீக்குளிப்புக்கும் வழக்குகளுக்கும் என்ன சம்பந்தம்?.
ஈழத் தமிழர்களுக்காகத் தன் உயிரையே மாய்த்துக் கொள்ள முடிவெடுத்து தீக்குளித்திருக்கிறார் பள்ளப்பட்டி ரவி. இப்போது உயிர் ஊசலாடிக் கொண்டு இருக்கிறது.
ஆனால், அந்தச் செயலைக் கொச்சைப்படுத்தி அவரை இழிவுபடுத்த உண்மையைக் குழிதோண்டி புதைத்து, பொய்களைப் புனைந்துரைத்து காவல்துறை அறிக்கை விடுவதற்கு என்ன காரணம்?
முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி உத்தரவின் பேரில்தான் காவல்துறையினர் இப்படி இந்த ஈனத்தனமான வேலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மையாகும்.
ஈழத் தமிழர் படுகொலைக்கு உள்ளாகும் துயரம் குறித்து தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்திய அரசுக்கு எதிராக மக்கள் மனம் எ?மலையாவதால்தான் இந்தத் தியாகச் செயல்களை கொச்சைப்படுத்தவும் மூடிமறைக்கவும் அரசு முனைந்து உள்ளது என்பதால்தான் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தீவிரவாதச் செயல் என்று சொன்னார்.
பள்ளப்பட்டி ரவி இலங்கைத் தமிழர்களுக்காக தன்னை மாய்த்துக் கொள்ள தீக்குளித்த செய்தியை மூடிமறைக்க காவல்துறையை முதல்வர் ஏவிவிட்டுள்ளார். இது மனிதநேயமற்ற மனிதாபிமானம் செத்துப்போன அக்கிரமான அணுகுமுறை ஆகும்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிங்கத் தமிழன் சின்னச்சாமி தீக்குளித்தபோது அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலம் வயிற்று வலியால் தீக்குளித்தான் என்று கொச்சைப்படுத்தினார். ஈவு இரக்கமற்ற அதே போக்கினை இன்றைக்கு கலைஞர் கருணாநிதி மேற்கொண்டு உள்ளார்.
மதுரையில் ஒரு பத்திரிகை அலுவலகம் தீயிடப்பட்டு மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட கொடுமைக்கு மூல காரணமான நபர்மீது எந்தக் காவல்துறை வழக்குப் பதிவு செய்யவில்லையோ அதே காவல்துறைதான் இந்தத் தீக்குளிப்பு சம்பவத்தில் இந்த அநீதியைச் செய்கிறது.
வேறு காரணங்களுக்காக தீக்குளித்த ஒருவரை இலங்கைத் தமிழருக்காக தீக்குளித்தார் என்று கூறுகின்ற, உயிரற்ற உடலத்தை வைத்து அரசியல் செய்கின்ற இழிகுணம் இங்கு எவருக்கும் கிடையாது.
இலங்கையில் தமிழ் இனமே கொலைக்களத்தில் குற்றுயிரும் கொலையுயிருமாக சாகும்போது தமிழகத்தில் இயல்பாக எழும் ஈழத் தமிழர் ஆதரவை அதிகாரத்தைப் பயன் படுத்தி அக்கிரமமாக தடுக்க மாநில அரசு முனையுமானால் தமிழினத் துரோகிகள் எனும் குற்றச்சாட்டில் இருந்து அவர்கள் தப்பிக்கவே முடியாது.
ஈழத் தமிழர் ஆதரவு உணர்வுகளை நசுக்குவதற்காகவே கல்லூரிகள், பள்ளிகள் காலவரையறையின்றி கருணாநிதி அரசு மூடியிருக்கிறது.
ஈழத் தமிழருக்கு இந்திய அரசு செய்யும் துரோகத்துக்கு கலைஞர் கருணாநிதி முழுப்பங்காளி எனும் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தொடர்புபட்ட தகவல்:
ரவி, முத்துக்குமார் தீக்குளிப்பு - மாறுபட்ட தகவல்கள்!!!!
0 விமர்சனங்கள்:
Post a Comment