இலங்கை விவகாரம் ஐ.நாவுக்கு செல்லாது தடுப்பதில் அரசு மும்முரம் பல நாடுகளுடன் அவசர அவசர ஆலோசனை
இலங்கை விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்லாது தடுப்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசு மும்முரமாக இறங்கியிருக்கின்றது.
அதற்காக பல்வேறு நாடுகளுடன் இலங்கை அரசுத் தரப்பினர் அவசர அவசரமாக கலந்தாலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐ.நா.பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்புரிமையைக் கொண்டுள்ள மெக்சிக்கோ இலங்கை நிலைவரம் குறித்து பாதுகாப்புச்சபையின் கவனத்துக்கு கொண்டுவருவதற்கான யோசனையை முன்வைத்துள்ளது.
பாதுகாப்புச் சபைஉறுப்பு நாடுகளின் பிரத்தியேக சந்திப்பின் போதே மெக்சிக்கோ இந்த யோசனையை முன்வைத்துள்ளது.
எனினும் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இந்த விடயம் இடம்பெறாததை சுட்டிக்காட்டியுள்ள ரஷ்யா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மெக்சிக்கோ மறுபடி இலங்கை விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியை இவ்வாரம் மேற்கொள்ளலாம் என ஐ. நா.வட்டாரங்கள் தகவல்வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் இலங்கை விவகாரத்தை ஐ.நா.பாதுகாப்புச் சபைக்குக் கொண்டு வருவதற்கு மெக்சிக்கோ உட்பட ஏனைய சில நாடுகள் எடுக்கும் முயற்சிகளைத் தடுப்பதற்காக இலங்கை அரசு அந்த நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகின்றது என்று மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
இலங்கை விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்குக் கொண்டு செல்ல மெக்சிக்கோ நடவடிக்கை எடுக்கும் என்று நாம் நம்பவில்லை.
அச்சபையில் உள்ள 5 நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றாவது எதிர்ப்புத் தெரிவித்தால் அச்சபைக்குக் கொண்டுவரப்படும் ஏந்தவொரு விவகாரமும் பின்வாங்கப்பட்டுவிடும்.
எமது நாட்டு விவகாரத்தைப் பாதுகாப்புச் சபைக்குக் கொண்டுவர மெக்சிக்கோ முயற்சி செய்கிறது என்று கூறப்படுகின்றபோதிலும் மெக்சிக்கோ அப்படியானதொரு முயற்சியில் இறங்காது என்று நாம் நம்புகிறோம்.
இருப்பினும், நாம் எமது நாட்டு நிலைமை தொடர்பாக மெக்ஷிக்கோவிற்கு விளக்கி வருகிறோம். எமது தூதர்கள் தற்போது மெக்சிக்கோ அரசுடன் பேச்சு நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
இதேவேளை, வாஷிங்டனில் உள்ள எமது தூதுவரும் அங்குள்ள அதிகாரிகளைச் சந்தித்து இலங்கை விவகாரம் பற்றிப் பேசிவருகின்றார்.
இப் பேச்சுகள் அனைத்தும் நிச்சயம் வெற்றிபெறும் என்று நாம் நம்புகிறோம். எமது நாட்டு செயற்பாடுகளை அந்நாடுகள் நிச்சயம் விளங்கிக்கொள்ளும் என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment