வைத்தியசாலை மீதான தாக்குதல் : ஐ.நா. சபையும் சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் கவலை
வன்னியில் பொதுமக்களின் பிரதேசங்கள் மீதும் வைத்தியசாலையின் மீதும் நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான மனிதாபிமானத்துறை பேச்சாளர் கோடன் வெய்ஸ் தெரிவித்துள்ளார்
இதன் காரணமாக என்றும் இல்லாதவாறு சுமார் இரண்டரை லட்சம் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனையில் உள்ள தமது பணியாளர்களைத் தாம் இறுதியாகத் தொடர்பு கொண்ட வேளை, அவர்கள் இறந்தவர்களின் உடல்களை எண்ணிக்கொண்டிருக்கின்றனர் எனத் தெரிவித்தனர் என்றும் ஐ.நா. அதிகாரி வெய்ஸ் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டும், 20 பேர் காயமடைந்தும் உள்ளனர் என்றும் அவர் உறுதிசெய்துள்ளார்.
வன்னியில் உள்ள வைத்தியசாலையின் மீது கடந்த சில நாட்களாக தாக்குதல்கள் நடத்தப்பட்டமையால், தாதி ஒருவர் உட்பட்ட 11 பேர் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சுமார் 600 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனினும் எந்த நேரமும் காயங்களுக்காக பலர் சிகிச்சைகளுக்காக கொண்டு வரப்படுவதாகவும் கோடன் வைஸ் குறிப்பிட்டார். அதேவேளை, வைத்தியசாலை தாக்கப்பட்டமை குறித்து தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் கொழும்புப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் டோல் கஸ்பெலர், ஒருவாரகாலத்துக்குள் மருத்துவமனை இரண்டாவது தடவையாகத் தாக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மருத்துவமனையை இலக்கு வைத்து ஷெல் தாக்குதல்கள் ஏன் நடத்தப்படுகின்றன என்பது தனக்குப் புரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். நோயாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவ நிலையங்கள் அனைத்தும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டியவை என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகளின் பேச்சாளர், எந்தக் காரணத்திற்காகவும் இவற்றின் மீது தாக்குதலை மேற்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மூன்று தடவைகள் தாக்குதல்களுக்கு உள்ளானது எனவும், பெண்கள், சிறுவர்கள் பிரிவு மற்றும் சமையலறை என்பன தாக்கப்பட்டன என்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பேச்சாளர் சரசி விஜயரட்ண குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் வன்னியில் உள்ள மக்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை எடுத்துச் செல்ல உலக உணவுத்திட்டம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரகேசரி
0 விமர்சனங்கள்:
Post a Comment