சுப்பிரமணிய சாமியை சட்டத்தரணிகள் கடும் தாக்குதல்
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மீது உயர்நீதிமன்ற அறையில் சட்டத்தரணிகள் அழுகிய முட்டைகளையும் தக்காளிப் பழங்களையும் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலை, அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பொது தீட்சதர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை மூன்றாவது நீதிமன்ற அறையில் நடைபெற்றது.
இந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மனுதாக்கல் செய்தார். இதற்காக அவர் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.
அப்போது திடீரென 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இலங்கை பிரச்சினை தொடர்பாக கோஷங்களை எழுப்பியவாறு நீதிமன்ற அறைக்குள் வருகை தந்தனர். தொடர்ந்து அவர்கள் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களில் சிலர் முட்டைகளை எடுத்து சுப்பிரமணியசாமி மீது வீசினர். முட்டைகள் உடைந்து சுப்பிரமணியசாமியின் கை மற்றும் உடல் முழுவதும் சிதறின.
நீதிபதிகள் கண்முன் நடைபெற்ற இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே போலீசார் விரைந்து வந்தனர். மேலும் போலீசாரை எதிர்த்து அவர்கள் கோஷமிட்டனர். இதற்குள் போலீசார் உள்ளே வந்து விட்டனர். பின்னர் கோஷமிட்ட வழக்கறிஞர்களை போலீசார் வெளியேற்றினர்.
சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.






0 விமர்சனங்கள்:
Post a Comment