ஆளும் சுதந்திரக் கட்சியில் இணைய கருணா முடிவு
"நானும், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் இருந்து விலகி சுதந்திர கட்சியில் சேரப் போகிறோம்" என கருணா தெரிவித்திருக்கின்றார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தளபதியாக இருந்த கருணா அந்த இயக்கத்தில் இருந்து விலகி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற கட்சியைத் தொடங்கினார். கருணா தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கின்றார்.
கிழக்கு மாகாணத்தில் இந்தக் கட்சியே ஆட்சியில் உள்ளது. பிள்ளையான் முதலமைச்சராக இருக்கிறார். இதற்கிடையே கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கருணா சமீபத்தில் பிள்ளையானைக் கடுமையாக விமர்சித்தார். இதற்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து கருணாவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. விளக்கம் கோரி நேற்று வரை காலக்கெடு விதிக்கப்பட்டது. ஆனால் கருணா விளக்கக் கடிதம் எதுவும் அனுப்பவில்லை.
இந்நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவிக்கையில்,
நானும், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் இருந்து விலகி இருக்கிறோம்.
நாங்கள் சுதந்திர கட்சியில் சேரப் போகிறோம். இதற்காக ஒரு வாரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச இருக்கிறேன். அதன் பிறகு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அலுவலகம் அனைத்தையும் சுதந்திர கட்சி அலுவலகமாக மாற்றுவோம்.
கட்சியில் பெரும்பாலோர் எனக்கு ஆதரவாக உள்ளனர். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இனி பிள்ளையானும் அவரது ஆதரவாளர்களும் மட்டுமே இருப்பார்கள் "என்றார்.
இதற்கிடையே கருணா விளக்கம் தராததால் அவரைக் கட்சியில் இருந்து நீக்க முடிவு எடுக்கவுள்ளதாக தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






0 விமர்சனங்கள்:
Post a Comment