அடேல் பாலசிங்கம் - ஹிலறி சந்திப்பு: புலிகள் வட்டாரங்கள் மறுப்பு
"தேசத்தின் குரல்" அன்டன் பாலசிங்கத்தின் துணைவியார் திருமதி அடேல் பாலசிங்கம் அமெரிக்க வெளியுறவுத்துறை இராஜாங்க செயலர் ஹிலறி கிளின்டன் அம்மையாரைச் சந்தித்ததாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் தமிழ்நாட்டு முதல்வர் மு.கருணாநிதிக்கு கடிதம் ஒன்று எழுதியதாகவும் அண்மையில் தமிழ்நாட்டில் வெளியாகிய செய்திகள் தவறானவை என தமிழீழ விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் புதினத்திடம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் தமிழ்நாட்டு முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதாக சென்னையில் இருந்து வெளியாகும் பாரம்பரியம் மிக்க வார இதழ் ஒன்றில் அதன் செய்தியாளர்களில் ஒருவர் அண்மையில் எழுதியிருந்தார்.
அதே செய்தியாளர், பின்பு - திருமதி அடேல் பாலசிங்கம் அம்மையார் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை இராஜாங்கச் செயலர் திருமதி ஹிலறி கிளின்டனை சந்தித்து உரையாடியதாகவும் எழுதியிருந்தார்.
இச்சந்திப்பு தொடர்பாக செய்தியை விடுதலைப் புலிகளின் வானொலியான "புலிகளின் குரல்" ஒலிபரப்பியதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இச்செய்திகள் தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வட்டாரங்களைத் தொடர்பு கொண்டு "புதினம்" செய்தியாளர் கேட்டபோது, இந்த இரண்டு செய்திகளையும் அவர்கள் மறுத்துள்ளனர்.
"உண்மைக்குப் புறம்பான இவ்வாறான செய்திகள் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஏதாவது ஒரு வகையில் பாதிப்பதாகவே அமையும்." எனக் கவலை வெளியிட்ட அந்த வட்டாரங்கள், "போராட்டத்திற்கு ஆதரவான செய்திகளை வெளியிடும் ஆர்வத்தில் - சில சமயங்களில் - மீள உறுதிப்படுத்தப்படாமல் வெளியிடப்படும் இவ்வாறன செய்திகள் தமிழர்களுக்கு நன்மை எதனையும் விளைவிக்காது. ஆதலால், இதழ் ஆசிரியர்கள் இவ்வாறான செய்திகளை வெளியிடும் போது சற்று கூடுதல் கவனம் எடுத்து அவற்றை மீள உறுதிப்படுத்துவதே - இதழியலுக்கும் தமிழர்களுக்கும் நம்பகமாக அமையும்" எனவும் "புதினம்" செய்தியாளரிடம் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதினம்
0 விமர்சனங்கள்:
Post a Comment