மனிதாபிமான நிலைவரத்தை கண்டறிய இலங்கைக்கு ஐ.நா.குழுஅனுப்பிவைப்பது தொடர்பாக பான் கி மூன் பரிசீலனை
இலங்கையில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைவரம் தொடர்பாக ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கிமூன் மனிதாபிமான நிலைமையை மதிப்பீடு செய்வதற்காக குழுவொன்றை அனுப்பி வைப்பது தொடர்பாக தான் பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
தெற்காசிய விஜயத்தின் ஓரங்கமாக இந்தியாவுக்கு கடந்த வியாழக்கிழமை பான்கிமூன் விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி உட்பட இந்தியத்தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பான்கி மூன், இலங்கை விவகாரம் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார்.
புதுடில்லியில் அசோக் ஹோட்டலில் பான்கிமூன் தங்கியிருந்தபோது சென்னையிலிருந்து வெளியாகும் "இந்து' பத்திரிகை ஆசிரியர் என்.ராம் பான்கி மூனை பேட்டிகண்டுள்ளார்.
அப்பேட்டியின்போது மும்பைத்தாக்குதல்கள், இந்திய பாகிஸ்தான் உறவுகள், ஆப்கானிஸ்தான், இலங்கை, காஸா, ஈரான் பிரச்சினைகள், காலநிலைமாற்றம் என்பன தொடர்பாக "இந்து' ஆசிரியர் ராம் எழுப்பிய கேள்விகளுக்கு பான் கி மூன் பதிலளித்திருக்கிறார். இலங்கை தொடர்பாக ராம் எழுப்பிய கேள்வியும் பான்கிமூன் அளித்த பதிலும் இங்கு தரப்படுகிறது.
எமது சொந்த இடத்துக்கு (பத்திரிகை பிரசுரிக்கப்படும் தலைமையகம்) சமீபமாக உள்ள இலங்கையில் 31 நாடுகளால் பயங்கரவாதப்பட்டியலில் உள்ளடக்கப்பட்ட இயக்கமானது 1 இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் தொகையுடன் குறுகிய நிலப்பரப்புக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நீங்கள் அறிந்தது என்ன? இவை தொடர்பாக தங்களுக்கு பல அறிக்கைகள் கிடைத்திருக்குமே? என்று ராம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த பான் கி மூன் தெரிவித்ததாவது;
இலங்கை நிலைவரம் கரிசனைக்குரியதாகும், இது தொடர்பாக அண்மையில் இலங்கைத் தலைவர்களுடன் நான் ஆராய்ந்துள்ளேன். இன்று கூட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நான் பேசவுள்ளேன்.
(இலங்கை ஜனாதிபதியும் பான் கி மூனும் தெலைபேசியில் உரையாடியுள்ளனர்) யாவற்றிலும் முதலாவதாக இந்த நிலைவரத்தை மதிப்பிட்டு மனிதாபிமான நிலைவரம் தொடர்பாக எனது கவலையை வெளிப்படுத்தியுள்ளேன். குறிப்பாக பொதுமக்கள் இழப்புகள் குறித்து எனது கரிசனையை தெரிவித்திருக்கிறேன். பத்து நாட்களுக்கு முன்னர், நான் பயணமாவதற்கு முன்னராக நியூயோர்க்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விசேட தூதுவர் என்னை சந்தித்தார். அச்சமயம் இந்த விடயம் குறித்து கலந்துரையாடினோம். எமது விஷேட தூதுவர் ஊடாக பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்படக்கூடாது என்றும் அதனை உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் அவரின் அரசாங்கத்திற்கும் நான் தெரியப்படுத்தியுள்ளேன். அத்துடன், ஐ.நா.பணியாளர்கள் மற்றும் நிவாரணப்பணியாளர்களின் பாதுகாப்பு முழு அளவில் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும் கேட்டுள்ளேன். இதனை உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி எனக்கு உறுதிமொழி வழங்கியிருக்கிறார் அங்கு மிகவும் பாரதூரமான மனிதாபிமான அக்கறைக்குரிய விடயங்கள் உள்ளன. அவற்றை மதிப்பீடு செய்ய குழுவொன்றை அனுப்பிவைப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறேன். என்று பான்கிமூன் கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment