ராஜீவ் இருந்திருந்தால் இலங்கை பிரச்சினை என்றோ தீர்ந்திருக்கும் கள்ளத் தோணியில் சென்று காரியத்தை கெடுத்தவர் வைகோ
ஸ்டாலின் தெரிவிப்பு
அரசியல் பிழைப்பு நடத்தும் அநாதை தலைவர்கள் சிலர் தி.மு.க. ஆட்சியை அகற்ற திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசை கலைக்க துடிப்பவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவள்ளூரில், இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், இலங்கை பிரச்சினைக்கு ஜனநாயக முறையில் தீர்வு காணக் கோரியும் இலங்கை தமிழர் நல உரிமை பேரவை சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது;
இலங்கை பிரச்சினையில் 2 கால கட்டங்கள் உள்ளன. கி.மு. மற்றும் கி.பி. என்பது போல் ராஜீவ்காந்திக்கு முன்பு ராஜீவ்காந்திக்கு பின்பு என்று ஒரு காலகட்டம் ஏற்பட்டுவிட்டது. ராஜீவ்காந்தி மட்டும் கொலை செய்யப்படாமல் இருந்திருந்தால் இந்த இலங்கை பிரச்சினை என்றோ தீர்ந்திருக்கும்.
1989 இல் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் கருணாநிதி டில்லியில் சந்தித்தார். அப்போது ராஜீவ்காந்தி, தாங்கள் 2 நாட்கள் தங்கியிருக்க முடியுமா என்று கேட்டார். அப்போது முரசொலி மாறனும் உடன் இருந்தார்.
இலங்கை பிரச்சினையில் தீர்வுகாண முடியுமானால் அது தமிழக முதல்வர் கருணாநிதியால் தான் முடியும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தங்களுக்கு செய்வேன் என்று கூறிய ராஜீவ்காந்தி, மறுநாள் காலை வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வார்சிங்கை சந்திக்க ஏற்பாடு செய்தார். அவர்கள் இரண்டரை மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்காக கருணாநிதியை இலங்கைக்கு சென்று வருமாறும், அதற்கு என்ன தேவையோ அத்தனையும் செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார்.
அதனை ஏற்றுக்கொண்டு மறுநாள் சென்னை விமான நிலையத்திற்கு வந்த கருணாநிதியிடம் ஒரு கசப்பான தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது, கோபாலசாமி எம்.பி. கள்ளத்தோணி ஏறி இலங்கை வவுனியா காட்டிற்கு சென்று பிரபாகரனை சந்தித்தார் என்பதுதான் அந்த செய்தி.
ஒரு பாராளுமன்ற உறுப்பினர், பாராளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் கள்ளத்தோணியில் ஏறி இலங்கைக்கு சென்ற அதிர்ச்சியான தகவலை கேள்விப்பட்டதை ராஜீவ்காந்தியிடம் வருத்தத்துடன் தெரிவித்தார். அப்போது நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் ஒரு உறுப்பினர் கோபால்சாமி இலங்கைக்கு சென்றது பற்றி பிரச்சினை எழுப்பினார். அப்போதுகூட ராஜீவ்காந்தி பெருந்தன்மையாக இலங்கைக்கு சென்றவர் பத்திரமாக திரும்பிவர வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். அதன் பின்பும் நீங்கள் முயற்சி செய்தால் இலங்கையில் தமிழர்கள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முடியும். முயற்சி செய்யுங்கள் என்று ராஜீவ்காந்தி கருணாநிதியிடம் கேட்டுக்கொண்டார். அவர் முயற்சி செய்ய சொன்ன பிறகுதான் நமது தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் இரத்தம் சிந்தி கொலையானார். அதனால் தான், இலங்கை பிரச்சினை ராஜீவ்காந்திக்கு முன்பு ராஜீவ்காந்திக்கு பின்பு என்று ஆனது.
ராஜீவ்காந்தி உயிருடன் இருந்திருந்தால் இலங்கை பிரச்சினை எப்போதோ சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்டிருக்கும். இருப்பினும் தொடர்ந்து இன்றுவரை இலங்கை பிரச்சினைக்கு தீர்வு கண்டு தமிழர்களை காக்க வேண்டும் என்று தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள் அனைத்தும் பாடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அரசியல் பிழைப்பு நடத்தும் அநாதை தலைவர்கள் சிலர் தி.மு.க. ஆட்சியை அகற்ற திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு கட்சியோடு சேர்ந்து கொண்டு ஆட்சியைப் பிடிக்கலாம் என்று திட்டம் தீட்டுவோர்களையெல்லாம் மக்களுக்கு நன்கு தெரியும். தொடர்ந்து தமிழக மக்களுக்கு நல்லாட்சி நடத்திவரும் தி.மு.க. அரசை கலைக்க துடிப்பவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment