தேசிய பிரச்சினைக்கு தீர்வின்றேல் புதிய பிரபாகரன் உருவாகுவார்: திஸ்ஸ
தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றை வைக்காவிட்டால் பிரபாகரன் அழிக்கப்பட்ட பின்னர் வேறொரு பிரபாகரன் உருவாகிவிடுவார் என சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், அமைச்சர் திஸ்ஸ வித்தாரண கூறினார்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைப்பது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அரசாங்கத்தால் தயாரிக்கப்படும் தீர்வுத்திட்டமானது ஐக்கிய தேசியக் கட்சியின் இணக்கத்தையும் பெறுவது அவசியமானது. பிரதான இரண்டு கட்சிகளால் இணங்கப்படாத தீர்வுதிட்டமானது தமிழர்களாலும், சர்வதேச சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது” என அமைச்சர் கூறினார்.
அதேநேரம், ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் வித்தியாசமான கொள்கையையே கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், அனைத்துக் கட்சிகளும் இணைந்து இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான இணக்கப்பாடொன்றுக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறினார்.
இதேவேளை, பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் வடமாகாணத்தை மீள்புனரமைப்பதே அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும் என வயம்ப லங்கா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் ரி.எச்.எஸ்.தென்னக்கோன் தெரிவித்தார். பாரியதொரு இலக்கு எட்டப்பட வேண்டி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அனைத்து அரசியல் கட்சிகளும், தன்னார்வ நிறுவனங்களும் தமது வேற்றுமைகளை மறந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு முன்வரவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment